

இருக்கும் ஐந்து அடி நீளக்கயிற்றைக் கைகளில் சுற்றிக்கொண்டு குட்டையாக பிடித்தபடி ஒருவரை ஒருவர் டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்கள் அஷ்மிதாவும், சவின்யாவும். சவின்யா போன்ற ஒரு இரிடேட்டிங் கேரக்டர் பக்கத்திலேயே இருந்தால் நாமெல்லாம் என்னவாகியிருப்போமோ தெரியவில்லை, அஷ்மிதா இந்த அளவுக்குச் சமாளிப்பதே பெரிய விஷயம்தான் என்று தோன்றியது. நேற்று சவின்யா படுத்திய பாட்டில் அஷ்மிதாவுக்கு அவர் மீது இருந்த மதிப்பெல்லாம் போய்விட்டது என்றாலும், இன்று பதிலுக்கு அஷ்மிதா செய்தது கொஞ்சமும் சரியல்ல.
சவின்யா அவருடைய பீரியட் காரணமாக பாத்ரூமுக்கு அழைத்த போது கூட உடனே போகாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தார். அது உண்மையா பொய்யா என்று அவருக்கு சந்தேகம் இருந்தாலும்கூட இந்த விசயத்தில் விளையாடாமல் அவரை அழைத்து போயிருக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானம். அதற்குப் பின்பும் கூட, இரண்டு பேரும் ஒருவர் உள்ளே போனால், இன்னொருவர் கயிற்றை இழுப்பது போன்ற சில்லறைத் தனமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், தான் அழைக்கும் இடத்துக்கு வர மறுக்கும் சவின்யாவை, தரையில் படுத்த நிலையில் இருந்தாலும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டே போனார் அஷ்மிதா. அதோடு என்ன பேசினாலும், சவின்யாவின் கீறல் விழுந்த ரெக்கார்டு போன்ற பேச்சைக் கேட்கச் சகிக்கவில்லை.
சரியாக வேலை செய்யாத ஹோட்டல் ஊழியர்களுக்கு சிவப்பு ஸ்டிக்கர் கொடுத்து லான் ஏரியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று ஷமாவுக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார் பிக்பாஸ். எல்லாருமே சரியாக வேலை செய்துகொண்டிருந்தார்கள் என்பதால் அதைப் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தார் ஷமா. அதனால் அதைப் பிடுங்கி கெஸ்ட் போட்டியாளர்களிடம் கொடுத்து அதை செய்ய சொன்னார் பிக்பாஸ். லட்சுமி ஏற்கனவே அவினாஷ் மீது கொஞ்சமும் குறையாத வன்மத்துடன் சுற்றிக் கொண்டிருப்பதால், காரணமே இல்லாத ஒரு காரணம் சொல்லி அவருக்கு சிவப்பு ஸ்டிக்கரைக் கொடுத்தார். அதைப்போலவே சவின்யாவும் தன் சொந்தப்பகை காரணமாக வினோத்துக்கு கொடுத்தார். அடுத்து மேனேஜர் என்ற முறையில் நானும் ஒன்று கொடுக்கிறேன் என்று ஷமா முன்வந்து ராகவுக்கு கொடுத்தார்.
இதனால் ராகவ், அவினாஷ், வினோத் மூவரும் ஆட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு லான் ஏரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள். உண்மையில் இது அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையில் இருந்து தற்காலிக விடுதலையாகத்தான் இருக்கும். ஆனால், சிவப்பு ஸ்டிக்கர் வாங்கியவர்களுக்கு பின்னால் நாமினேஷன் போல ஏதாவது ஆபத்து இருக்குமோ என்று யோசித்துப் பயந்து கொண்டார்கள்.
அடுத்து இதுவரை ஹோட்டல் ஊழியர்களுக்கு விதிமுறைகள் கொடுத்துக் கொண்டிருந்த பிக்பாஸ், கெஸ்ட்டாக வந்தவர்களுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நினைத்து அனைவரையும் கூப்பிட்டு உட்கார வைத்தார். பின்னர், ’கெஸ்ட்டாக இருப்பவர்களில் யார் குறைவாக பெர்ஃபார்ம் செய்தார்களோ அவர்களில் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்’ என்றார். லட்சுமியின் வன்ம நடவடிக்கை காரணமாக, ஒரு சிலர் லட்சுமி- குமரன் ஜோடியைச் சொன்னார்கள். ஆனால், பலரும் அவர்களை மட்டுமல்லாது, பார்வையாளர்களான நம்மையும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் அஷ்மிதா- சவின்யா ஜோடிக்கு பெரும்பாலான வாக்குகளைக் கொடுத்துத் தேர்ந்தெடுத்தார்கள். அதன் விளைவாக அவர்களின் ஐந்து அடி நீளக்கயிறு, மூன்றடிக் கயிறாக மாற்றப்பட்டது. ’இவர்களுக்கு கயிறு ஐந்து அடி இருந்தால் என்ன... மூன்று அடி இருந்தால் என்ன, ஏற்கனவே இருக்கும் கயிற்றைக் கையில் சுற்றிக்கொண்டு, அரை அடி அளவுதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பொருத்தமாகக் கவுண்டர் கொடுத்தார் முனியம்மா.
அடுத்து அனைவரையும் லானுக்கு வர வைத்து வரிசையாக நிற்க வைத்துவிட்டு, ஒவ்வொரு சீசனிலும் இறுதிப் பகுதியில் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க்கை அறிமுகப் படுத்தினார் பிக்பாஸ். பணப்பெட்டியில் 5 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த ஆறு பேரில் யார் வேண்டுமானாலும் இப்போது கயிற்றை வெட்டிக்கொண்டு இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போகலாம் என்று சொன்னார். நம்மைக் கேட்டால், இந்த ஆறு பேருமே அடிதடியாய் ஓடிப்போய் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போகலாம் என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் இந்த ஆறு பேருமே அடுத்தடுத்து வெளியே போகத் தகுதியானவர்கள்தான்.
ஆனால் ஏதோ ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களைப் போல எல்லோரும், வேண்டாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்கள். குமரன் மட்டும் கையை உயர்த்தி நான் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று சொன்னார். குமரனைப் போன்ற ஒரு சாந்தமான மனிதர் இந்த வீட்டுக்குள் இருப்பது அவருக்கும் நல்லதல்ல, நிகழ்ச்சிக்கும் நல்லதல்ல, பார்வையாளர்களான நமக்கும் நல்லதல்ல! அந்த வகையில் இது சரியான முடிவு. ஆனால் அதற்காக யார் அதிர்ச்சி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, பக்கத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அதிர்ச்சி அடைந்ததும், ’அண்ணா வேண்டாம் அண்ணா’ என்று சொன்னதும்தான் நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.
அவரைத் தேர்ந்தெடுத்தது, அவர் கையில் கயிற்றைக் கட்டி, இரண்டு நாட்களாக சவின்யா, அஷ்மிதாவைப் போல அடித்துக் கொள்ளாவிட்டாலும் கூட, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதைப் போல குமரனை மனதளவில் காயப்படுத்திக் கொண்டே இருந்தார் லட்சுமி. எப்படியாவது மனம் நோக வைத்து அவரை அனுப்புவதுதான் அவரது இலக்காக இருந்தது. அதோடு இரண்டு பேரில் ஒருவர் இந்த வாரயிறுதியில் நிச்சயமாக வெளியே போய்தான் ஆக வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும். இந்த நிலையில் குமரன் வெளியே போகிறேன் என்று கையை உயர்த்தியதும் உண்மையில் லட்சுமிக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கும். அதிர்ச்சியெல்லாம் சும்மா, நடிப்புதான்.
ஆனால், குமரனின் விடைபெறும் பேச்சு நெகிழத்தக்கதாக இருந்தது. அவர் இப்போது எதற்காக வெளியே போனாலும், நினைவிழப்பு நோயோடு போராடிக் கொண்டிருக்கும் அவரது தந்தையின் நினைப்பு அவருக்கு ஏற்பட்டுவிட்டது, அவரது அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பது தெளிவாக புரிந்தது. அதன் பின் கிட்டத்தட்ட எல்லோருமே நெகிழ்ந்து போனார்கள். லட்சுமி, ’ஐயோ இது தெரிந்திருந்தால் நான் அவரிடம் தன்மையாக நடந்துகொண்டிருந்திருப்பேனே’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். இது பொய் என்று நாம் சொல்லவில்லை, ஆனால், இதுவாவது உண்மையா என்பது அவருக்குத்தான் தெரியும்.