பிக்பாஸ் 10 -நாள் 23 :  சாப்பாட்டில் வெளுத்துக் கட்டும் விருந்தினர் #BiggBoss10

’சிக்கன் 65, எக் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பிரான் ஃப்ரை, பிரியாணி, ப்ரெட் ஆம்லெட், சாண்ட்விச், ஐஸ்கிரீம், கோல்ட் காபி, ஸ்ட்ராபெரி கூலர் அப்பப்பா சமைத்து முடியவில்லை’ என கேமராவில் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
BB 10 Tamil Day 23
BB 10 Tamil Day 23Jiohotstar
Published on: 

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை உப்பில்லாத கஞ்சி, அரை வயிற்று சாப்பாடு, ஒரு முட்டைக்கு அடிதடி என சாப்பாடுதான் எப்போதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்த ஹோட்டல் டாஸ்க்கைப் பயன்படுத்தி, மிக நன்றாக சாப்பிட்டு அனுபவித்துக் கொண்டிருப்பது கெஸ்ட் வேடத்திலிருக்கும் போட்டியாளர்கள்தான். கூடவே இந்த வார நாமினேஷனில் இருப்பவர்களும் அவர்கள் மட்டும்தான். அதனால், இந்த வாரம் வெளியே போகிறோமோ, இல்லையோ வந்ததுக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டுப் போய்விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தார்களா என்று தெரியவில்லை. அதிலும் குறிப்பாக இந்த விசயத்தில் தன்யா தனியாவர்த்தனம் செய்து கொண்டிருப்பதையும் உணரமுடிகிறது. சமையலர்களான ஷாதிகாவும், அவிநாஷும் ’சிக்கன் 65, எக் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பிரான் ஃப்ரை, பிரியாணி, ப்ரெட் ஆம்லெட், சாண்ட்விச், ஐஸ்கிரீம், கோல்ட் காபி, ஸ்ட்ராபெரி கூலர் அப்பப்பா சமைத்து முடியவில்லை’ என கேமராவில் புலம்பிக் கொண்டிருந்ததிலிருந்தே இவற்றையெல்லாம் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

கயிறு கட்டப்பட்ட ஆறு பேர் தவிர மற்றவர்கள் அவரவர் வேலைகளை சின்சியராகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஷூ போடவில்லை, கெஸ்டுகளுக்கு சமைத்த உணவை ஆர்வம் தாங்காமல் லேசாக நக்கிப் பார்த்தார்கள் என்பது போன்ற சின்ன விசயங்களைக் கூட பிக்பாஸ் பார்த்துக் கூப்பிட்டுக் கண்டித்தார். அதன் பின் வேறு வழியில்லாமல் நிஜ ஹோட்டல் ஊழியர்களாகவே ஆகிப்போனார்கள். கெஸ்டுகள் முடிந்தவரை கையை அமுக்கிவிடு, காலை அமுக்கிவிடு, ஐஸ்கிரீமில் குலோப் ஜாமூன் போட மாட்டியா என்பதாக மற்றவர்களை வாட்டியெடுத்தார்களே தவிர, கயிறு கட்டப்பட்ட சக போட்டியாளரோடு எந்தச் சிக்கலிலும் ஈடுபடவில்லை. அப்படி ஏதாவது நிகழாதா என்பதுதான் பிக்பாஸ் மற்றும் மற்ற போட்டியாளர்களின் நோக்கமே! ஆனால், அப்படி ஒன்று நிகழ்வதாகவே தெரியவில்லை. அன்சார் கூட ஒரு கட்டத்தில், ’உங்களுக்குள்ள அடிச்சிக்க மாட்டிங்களாய்யா?’ என வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். அதற்கும் பஞ்சாயத்துக் கூட்டி, தன்யா அவரை மன்னிப்புக் கேட்க வைத்ததுதான் நடந்தது.

ஒரு வழியாக சவின்யாவுக்கும், அஷ்மிதாவுக்கும் மோதல் வந்தது. பாத்ரூம் போக வேண்டும், குளிக்க வேண்டும் என்று சவின்யா அழைத்த போதெல்லாம் கூடவே போன அஷ்மிதா, அவர் குளிக்கப் போக வேண்டும் என்று சொன்னபோது ’நான் வர முடியாது. வேணும்னா அவுத்துட்டுப் போ’ என்று சவின்யா வம்பிழுத்தார். ’அது எப்படி என்னைப் பார்த்து டிரஸ்ஸை அவுத்துட்டு போ என்று நீ சொல்லலாம்? சீப் ஃபெல்லோ’ என்று அஷ்மிதா சண்டைக்கு வரவும், ’அடப்பாவி, நீதான் சீப். நான் டிரஸ்ஸை சொல்லவில்லை, கயிற்றைத்தான் சொன்னேன்’ என்று சவின்யா பதிலுக்கு முண்டிக்கொண்டு வந்தார். ஊரே வேடிக்கை பார்த்தாலும் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல், கயிறோடு சேர்த்து சவின்யாவை இழுத்துக்கொண்டே பாத்ரூமுக்குப் போனார் அஷ்மிதா. சவின்யா பேசத் தெரியாமல், சின்னப் பிள்ளைகளைப் போல சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி, அஷ்மிதாவை அல்ல, பார்த்துக்கொண்டிருக்கும் நம்மை இரிடேட் செய்துகொண்டிருந்தார். ’இதுதான் சண்டை, இதை செய்யாததனால்தான் நம்மை வெளியே அனுப்பிவிட்டார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. சுத்தம்!

பிக்பாஸ், தன்யாவை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்தபோது, கயிற்றிலிருந்து விடுவிக்க ஜாவித்திடம் அனுமதி கேட்டபோது கொடுக்காமல் ஜாவித் சிறிது அலைக்கழித்தார். அதற்குப் பதிலாக, ஜாவித் போய்விட்டு வந்த போது, எரிச்சலைக் கிளப்பும் அளவுக்கு தன்யா பதிலுக்கு வைத்துச் செய்தார். இதெல்லாம் பார்க்க நன்றாகவே இல்லை.

BB 10 Tamil Day 23
BB 10 Tamil Day 23Jiohotstar

தனக்கு உணவு கொண்டு வந்த அவினாஷைப் பிடித்துவைத்து, ’என்னை வெளியே அனுப்பிய நீங்களே எனக்கு உணவு பரிமாறும் நிலைமை வந்தது பார்த்தீங்களா?’ என்று லட்சுமி பெரிய சூர்யவம்சம் தேவயானியைப் போல நக்கல் செய்தார். அதில் என்ன இழுக்கு இருக்கிறது? முதலில் இது ஒரு டாஸ்க், அடுத்து உணவு பரிமாறுவது என்பதில் எந்தத் தவறுமில்லை. எப்படியாவது அவினாஷை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற லட்சுமியின் எண்ணம்தான் இதில் வெளிப்பட்டது. அடுத்து மேனேஜர் ஷமாவுக்கும், செஃப் ஷாதிகாவுக்கும் முட்டிக் கொண்டது. ’ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே உணவுதான், சிலருக்கு சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்வதாக தகவல் வருகிறது’ என்று ஷமா சொல்ல, ஏற்கனவே நாக்குத்தள்ள வேலை செய்துகொண்டிருக்கும் ஷாதிகா அவருடன் சண்டைக்குப் போனார். ஷமாவும் கூட கெஸ்டுகளுக்கும், ஊழியர்களுக்கும் நடுவே ஒரு பாலமாக அமையாமல், கெஸ்டுகளுக்காக ஊழியர்களை கடுமையாக வேலை வாங்கும் மேனேஜர் போலவே, அதிகாரமாகத்தான் நடந்துகொள்கிறார். அடுத்து, அனைவரையும் பார்வையாளர்களாக உட்கார வைத்து, கயிற்றில் கட்டப்பட்டுள்ள போட்டியாளர்களை எதிரெதிராக நிறுத்திவைத்து எதிராளியைத் தாக்கிப் பேசுமாறு ஒரு டாஸ்க்கை வைத்தார்கள். ஜாவித், குமரன் தவிர மற்றவர்கள் திட்டுவதைக் கூட போரடிப்பது போல செய்தார்கள். அதோடு இன்றைய நிகழ்ச்சி முடிந்தது.

Puthuyugam
www.puthuyugam.com