பிக்பாஸ் 10 -நாள் 19: எதிர்பாரா எவிக்‌ஷன் லட்சுமி பிரியா #BiggBoss10

என்னடா... நிகழ்ச்சி ஆரம்பித்து 20 நாட்களாகப் போகிறதே, இன்னும் இந்த லவ் கன்டன்ட்டை யாரும் ஆரம்பித்த மாதிரி தெரியவில்லையே என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். முகேஷும் ஷாதிகாவும் அப்படி ஒரு சம்பவத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
BB 10 Tamil Day 19
BB 10 Tamil Day 19Jiohotstar
Published on: 

நேற்று டெமாக்ரசி அறையில், தான் செய்த அட்டகாசங்களுக்காக ஷமா, ஷாதிகா, ராகவ் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியே போய் வெள்ளைக் கொடியை ஆட்டிக்கொண்டிருந்தார் ஜேசன். லட்சுமி பிரியாவிடமும் கூட சமாதானமாகப் போக முயற்சித்தார். ஆனால், ’எச்சில் பிளேட்டுகளைக் கழுவ நான் வரவில்லை’ என்று ஜேசன் சொன்னதால் ஏற்பட்ட கடுப்பு இன்னும் தீராமல், லட்சுமி எனக்கான உணவை நானே சமைத்துக்கொள்கிறேன், என் பிளேட்டை நானே கழுவிக் கொள்கிறேன் என பிக்பாஸ் விதிகளையே போட்டு உழப்பிவிட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்து ராகவும் சாந்தினியும் ஓரிடத்தில் நின்று கொண்டு ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னடா... நிகழ்ச்சி ஆரம்பித்து 20 நாட்களாகப் போகிறதே, இன்னும் இந்த லவ் கன்டன்ட்டை யாரும் ஆரம்பித்த மாதிரி தெரியவில்லையே என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். முகேஷும் ஷாதிகாவும் அப்படி ஒரு சம்பவத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதைப்பற்றித்தான் இருவரும் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அப்படி ஒன்று இதுவரை நம் கண்களில் படவில்லை. அப்படி ஒன்று இருக்கிறதா, இருந்தாலுமே அது நிஜமா அல்லது திட்டமிட்ட கண்டெண்டா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

அடுத்து ஸ்பாட் லைட் டாஸ்க்கில் மோசமாகச் செய்ததாக, லீடர் தேர்வு செய்த மூவரிலிருந்து ஒருவரை வெளியேற்றும் பணி நடந்தது. முதலில் அந்த லிஸ்டிலிருந்த ஆனந்தி, லட்சுமி, முத்தழகி மூவரும் தங்களுக்காக ஆதரவு உரையாற்றினார்கள். முதலில் பேசிய லட்சுமியும், முத்தழகியும் இதை எளிதாக எடுத்துக்கொண்டு, ’உங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை, நீங்களாகப் பார்த்துச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட, மூன்றாவதாகப் பேசிய ஆனந்தி, இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ’சொந்தக் கதை சோகக் கதை’ எபிசோடைப் போல உணர்ச்சிப் பிழம்பாகப் பேசி, ஒரு யார்க்கரை இறக்கினார். அதில் முனியம்மாவைத் தவிர போட்டியாளர்கள் அத்தனை பேரும் கிளீன் போல்டானார்கள். அதன் பிறகுதான், ’தப்பு பண்ணிட்டோமோ’ என்பது போல வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது லட்சுமிக்கும், முத்தழகிக்கும். ஆனால், அது டூ லேட்! ரகசிய ஓட்டெடுப்பில் யாரும் எதிர்பாராத வண்ணம் லட்சுமி எவிக்ட் ஆனார். அவர் தலைமையிலான குழுவிலிருந்த முத்தழகி, ஷாதிகா, தன்யா என அத்தனை பேரும் ஆடிப்போய்விட்டார்கள். முத்தழகியும், ஷாதிகாவும் கதறினார்கள். என்ன பயன்? அத்தனை பேரையும் சமாதானப்படுத்திவிட்டு அமைதியாக வெளியேற நினைத்த லட்சுமி, கடைசி விநாடியில் தன் கட்டுப்பாட்டை இழந்து, அவினாஷைக் கையைக் காட்டி, ’இவன் ஒரு மோசமான லீடர் மட்டுமல்ல, மிக மோசமான பிளேயர். குரூப்பிசம் செய்துவிட்டான். யார் ஜெயித்தாலும், இவனை மட்டும் ஜெயிக்க விட்டுடாதீங்க’ என்று சொல்லி அவரது மொத்த வன்மத்தையும் இறக்கி வைத்துவிட்டுப் போனார். ஆனால், அவர் கற்பனை செய்து கொள்வது போல அங்கே எந்த குரூப்பும் இதுவரை உருவாகவும் இல்லை. அவினாஷும் இந்தக் கருத்துக்கு உரியவரும் அல்ல. வெளியே போன பிறகாவது அவருக்கு இது புரியுமா, அல்லது சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாரா என்று தெரியவில்லை.  

BB 10 Tamil Day 19
BB 10 Tamil Day 19Jiohotstar

ஷாதிகாவும், முத்தழகியும் கொதித்துக் கொண்டிருந்தனர். முனியம்மா, ’ஆப்ட்ரால் இதெல்லாம் கேமுதானடா, ஒருத்தி போனதுக்கு இவளுக என்னடா இருக்குற எல்லாரையும் போட்டு தாளிச்சிகிட்டு இருக்காளுக. அவ்வளவு அக்கறைன்னா கூடவே போக வேண்டியதுதானே’ என்று அவர்களுக்கு சரியான பதிலைச் சொன்னார். இத்தனைக்கும் முனியம்மா, ஆனந்திக்குதான் குத்தியிருந்தார். வர வர முனியம்மாவின் தெளிவைப் பார்த்தால் அவருக்கு ரசிகராகி விடுவோம் போலிருக்கிறது. கெக்கெக்கே எனும் அந்த எரிச்சலூட்டும் சிரிப்பை மட்டும் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

அடுத்து ஸ்பாட் லைட்டின் பெஸ்ட் பர்ஃபார்மராக ராகவைச் சொல்லி, அடுத்த வாரத்துக்கான லீடர் போட்டிக்குத் தேர்வு செய்தார்கள். இதனால் ராகவ், பிருத்வி, அவினாஷ் மூவரும் லீடர் போட்டியிலிருந்தார்கள். ஒரு வேளை போட்டியில் ராகவ் வென்றால் அடுத்த வாரம் ராகவின் கதறலை நாம் எதிர்பார்க்கலாம். லட்சுமி வெளியேற்றத்தின் போது கொடுத்த சாபத்தால் நொந்து போயிருந்த அவினாஷ் ஒரு மூலையில் படுத்துக்கிடந்தார். ஜேசன், ’அட அதை அப்படியே விட்டுட்டு, அடுத்த லீடருக்கான கேம்பெயினை பாருடா’ என்று தேற்றினார். மூன்று லீடர்களும் அவர்களுக்கான ஆதரவு தேடும் படலத்தைத் தொடங்கினார்கள். ’உங்களை மாதிரி சாந்தமா, சிந்திச்சு, நிதானமா, நேர் வழியில போற ஆட்களை லீடராக்கினா வீடே தியான மண்டபம் மாதிரி ஆயிடும். அது நல்லாருக்காது. எனக்கெல்லாம் குண்டாங்குதிரை ஓடுற ஆட்கள்தான் வேண்டும். அதனால் உங்களுக்கு ஓட்டு போட மாட்டேன்’ என ராகவின் முகத்துக்கு நேராக முனியம்மா சொன்னது ரசனை.

Puthuyugam
www.puthuyugam.com