பிக்பாஸ் 10 -நாள் 17:  ஷமா ஜேசன் உச்சக்கட்ட மோதல். #BiggBoss10

லட்சுமியின் தலைமையில்தான் ஒரு பெண்கள் குரூப் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த குரூப்பில் ஷாதிகா, முத்தழகி, தன்யா ஆகியோர் இதுவரை முக்கிய மெம்பர்களாகியுள்ளனர்.
BB 10 Tamil Day 17
BB 10 Tamil Day 17Jiohotstar
Published on

காலையிலேயே மெயின் கேட் அருகே உட்கார்ந்து தன்யாவும் லட்சுமியும் புரணி பேசிக் கொண்டிருந்தனர். தன்யா, லட்சுமி பிரியாவிடம் ’இங்கே ஒரு குரூப் உருவாகி இருக்கிறது, அதனால் குரூப்பிசம் நடக்கப்போகிறது’ என்று ரகசியமாகச் சொல்லவும், ’அதையே இப்போதுதான் கண்டுபிடிக்கிறாயா, நீ ரொம்ப லேட்டுடி’ என்றார் லட்சுமி. அவினாஷ், ஜேசன், முகேஷ், வினோத், அன்சார் ஆகியோர்தான் அந்தக் குழு, அதில் இப்போது குமரனும் சேர்ந்திருக்கிறார். இந்தக் குழு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வெளியே தள்ளிவிடுவார்கள் என்று உறுதியாகச் சொன்னார் லட்சுமி. உண்மையில் அப்படி ஓர் ஆண்கள் குரூப் அந்த வீட்டில் இல்லை. பதிலாக அப்படி ஒன்று இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் லட்சுமியின் தலைமையில்தான் ஒரு பெண்கள் குரூப் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த குரூப்பில் ஷாதிகா, முத்தழகி, தன்யா ஆகியோர் இதுவரை முக்கிய மெம்பர்களாகியுள்ளனர். இது இன்னும் பெரிதாகும் வாய்ப்பும் தெரிகிறது.

அடுத்து, தன்னை யாரும் கண்டுகொள்ளாத கடுப்பிலிருந்த ஆனந்தி, யாராவது தங்கள் வாட்டர் பாட்டில், கர்ச்சீப் போன்றவற்றைத் தரையில் வைக்கிறார்களா என்பது போல அவர்கள் பின்னாலேயே போய் துப்பறிந்து அதை ஒரு குற்றமாக உலகத்துக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். தன்யாவும், இன்னும் நான்கு பேரும் பேசிக்கொண்டிருந்தபோது, தன்யா தன் கையிலிருந்த வாட்டர் பாட்டிலை எதிரே இருந்த டீப்பாயில் வைத்திருந்தார். அதை அங்கே வைக்கக்கூடாது என்று சொன்னார் ஆனந்தி. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, தனது ஷாலை பக்கத்து இருக்கையில் போட்டிருந்தார் தன்யா. அதற்கும் ’அதெப்படி ஷாலை சேரில் போடலாம், கழுத்தில்தானே போட வேண்டும்’ என்று வம்பு செய்து செய்து கொண்டிருந்தார் ஆனந்தி. இது விசயமாக ஆனந்தியிடம் பஞ்சாயத்து பேச வந்த லீடர் அவிநாஷையும், ’நான் விதிமுறைகளைத்தானே ஃபாலோ செய்கிறேன், நீங்கள் எதற்காக தன்யாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டு வருகிறீர்கள்’ என்று சொல்லி கடுப்பேற்றி ஓட விட்டார். இதே ரூட்டில் போனால், ஆனந்தி சீக்கிரமே பெரிய சிக்கலில் மாட்டப்போகிறார் என்று நேற்றுதான் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்கே அது நடந்துவிட்டது. அதைப் பற்றிக் கடைசியில் பார்ப்போம்.

அடுத்து புதிதாக உருவாகி இருக்கும் பெண்கள் குழு, லட்சுமியின் தலைமையில் சதி ஆலோசனை செய்து கொண்டிருந்தது. சமையல் குழு சாப்பாடு போடும் லட்சணத்தை எப்படி எல்லாம் குறை சொல்லலாம் என்று லட்சுமி விவரித்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் தன்யா, முத்தழகி, ஷாதிகா, சாந்தினி ஆகியோர். இவர்கள் எல்லோருமே இம்முறை எதிரணியில் இருந்தார்கள். எதிரணியிலிருந்த மற்ற இரு ஆண்களான பிருத்வியும், ராகவும் சற்றுத்தள்ளி உட்கார்ந்து இந்தக் குழுவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து, ராகவ் எழுந்து இவர்களுக்கு அருகே வந்த போது, ’அண்ணனுக்கும் இதைப் பத்தி சொல்லிடலாம்’ என்று லட்சுமி சொல்ல, ஷாதிகா, ’யாரது அண்ணன்?’ என்று திரும்பிப் பார்த்த பிறகுதான் ’ஓ நம்ம லீடர் அண்ணனா?’ என்று ஓ, அப்படி ஒரு கேரக்டரும் இருக்கிறதல்லவா என்பது போல ஆச்சரியப்பட்டுக் கொண்டார்.

அடுத்து அஷ்மிதாவுக்கும், முனியம்மாவுக்கும் இடையே பாத்ரூமில் முடி கிடந்ததை ஒட்டி ஒரு பிரச்சினை ஏற்பட்டது. முதலில் முனியம்மா, ’பாத்ரூம் எல்லோரும் குளிக்கும் இடம். அங்கு முடி இருந்ததற்கு நான் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்’ என்றார். ஆனால், அன்று அவர் மட்டும்தான் தலைக்குக் குளித்தார் என்று எல்லோரும் சேர்ந்து நிரூபித்தார்கள். அதற்கு முனியம்மா, ’ஓ அப்படியா? பாத்ரூம்னா முடி விழத்தான் செய்யும். அதைக் கிளீன் செய்றதுக்குதானே கிளீனிங் டீம் இருக்கு. எதுக்கு என்கிட்ட வந்து சொல்றே?’ என்றார். மண்டையைப் பிய்த்துக்கொண்டு விலகிப் போனார்கள் அத்தனை பேரும்.

BB 10 Tamil Day 17
BB 10 Tamil Day 17Jiohotstar

எல்லோருக்கும் முயல் போன்ற ஒரு வெள்ளை ஆடையைக் கொடுத்தனுப்பி, ஒருவருக்கொருவர் அடுத்தவர் முதுகில் சீல் வைக்க வேண்டும். குறைவான சீல்கள் கிடைத்தவர் வெற்றியாளர் என்று சொல்லி, ஒரு பிசிகல் டாஸ்க்கை வைத்தார் பிக்பாஸ். நாம் எதிர்பார்த்தது போலவே சிலபல அடிதடிகள் நிகழ்ந்தேறின. வர வர அடிதடி டாஸ்க்குகளைப் பார்க்கவே சற்று பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பக்கம் பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஆனந்தியையும் முனியம்மாவையும் குறி வைத்துக் குத்திக் கொண்டிருந்தார்கள். அதற்கே பலரும் கீழே விழுந்து உருண்டு புரளுவது, மிதித்துத் தள்ளுவது, முடியைப் பிடித்து இழுப்பது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஆனந்தி அழவே ஆரம்பித்துவிட்டார். இன்னொரு புறத்தில் ஷமா ஆண்களுடன் மோதிக்கொண்டிருந்தார். குறிப்பாக அன்சாருடன் கீழே விழுந்து கட்டிப்புரண்டு கொண்டிருந்தார். அடுத்து ஷமாவுக்கும், ஜேசனுக்கும் நடந்த போட்டியில் என்னவாயிற்றோ தெரியவில்லை, ஷமா கீழே விழுந்து கிடந்தார். அடிபட்ட வலியில் அல்லது களைப்பில் படுத்தாரா அல்லது மயங்கினாரா என்று தெரியவில்லை. ஆண்கள் சிலர் வந்து தண்ணீர் கொடுத்து எழுப்பிவிட்டனர். ஜேசன் பயங்கரமாகக் கத்திக்கொண்டிருந்தார். சிலர் அவரைத் தடுத்தும் அடங்கவில்லை. ஷமா மயக்கம் போடுவது போல நடித்து என்னைக் குத்திவிட்டார் என்று சொன்னார். ஆனால், ஷமாவுமே அவரோடு பெரிதாக போராடியதைப் போலத்தான் நமக்குத் தோன்றியது. ஷமா வெளியேறியதும் தனது கட்டுப்பாட்டை இழந்து மிகக் கடுமையாக ஜேசனைத் திட்டிக் கொண்டிருந்தார். இந்த ஆட்டத்தில் லீடர் அவினாஷ் வெற்றி பெற்றார்.

அடுத்து சென்ற வார நைட் ஸ்டார்ஸ் டாஸ்க்கைப் போல இந்த வாரம் நடக்கும் ஸ்பாட் லைட் டாஸ்க் நடந்தது. இந்த டாஸ்க்தான் போட்டியாளர்கள் சேர்ந்து ஒருவரை வெளியேற்றும் ஆபத்தான ஆட்டம். ஷாதிகா, ஆனந்தி, சாந்தினி, முனியம்மா ஆகியோர், நேற்று பர்ஃபார்ம் செய்தவர்களோடு சேர்ந்து நடித்துக் காண்பித்தார்கள். அதன் முடிவாக லீடர் அவினாஷ் ஆனந்தி, முனியம்மா, முகேஷ் ஆகியோரின் படங்களை வெளியேற்றும் போர்டில் வைத்தார். எல்லோரும் முனியம்மாவை வைத்தது தவறு என்று கருத்து சொல்ல, மனமுடைந்து போய் அழுதார் அவினாஷ். அடுத்து ஆனந்தி, ’என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள், நான் வீட்டை விட்டுப்போகிறேன். பிக்பாஸ் கதவைத் திறங்க’ என்று மெயின்கேட்டில் போய் நின்றுகொண்டு அழுதுகொண்டிருந்தார். இது நிச்சயம் நடிப்பு அல்ல என்பது நமக்குப் புரிந்தது. ஆனால், என்ன செய்வது? எல்லாம் அவராக ஏற்படுத்திக் கொண்டது.

Puthuyugam
www.puthuyugam.com