பிக்பாஸ் 10 -நாள் 14: ஆனந்தியின் அட்டகாசங்கள்! #BiggBoss10

லட்சுமி பிரியாவைப் போட்டு வறுக்கப் போகிறார் என்று நாமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தபோது, நம்மைப் போலவே ஆனந்தியும் அதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், நடந்தது தலைகீழான சம்பவம்!
BB 10 Tamil Day 14
BB 10 Tamil Day 14Jiohotstar
Published on

இன்றைக்கான எபிசோடில் விஜய் சேதுபதி வந்ததுமே சீஸ் ஹவுஸ் டாஸ்க்கில் நடந்த களேபரங்களுக்கான பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அந்த டாஸ்க்கில், தான் நின்று கொண்டிருந்த ஸ்டூலை தட்டி விட்டதற்காக ஷமாவைப் பார்த்து ’மிருகத்தனமான நடத்தை’ என்று ஜேசன் திட்டியிருந்தார். ஆனால், ஸ்டூலைத் தட்டி விடுவது, ஒருவரைப் பிடித்து ஒருவர் இழுத்துப் போடுவது போன்ற காரியங்களை எல்லோரும், எல்லோருக்குமே அங்கே செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், அப்படிச் செய்த ஷமாவை ஜேசன் திட்டியதோடு மட்டுமல்லாமல், அவரை ஒற்றைக் கையால் தூக்கிக்கொண்டு போய் வெளியே வேறு போட்டார். ’ஷமா ஸ்டூலைத் தட்டிவிட்டது உங்களுக்கு மிருகத்தனமாக தோன்றினால், நீங்கள் செய்ததற்குப் பெயர் என்ன?’ என்று விசே கேட்டார். அதற்குப் பிறகுதான் ஜேசன், தான் செய்தது தவறு போலிருக்கிறது என்றே சிந்தித்திருப்பார் போலிருக்கிறது. அதற்காக ஸாரி கேட்டுக்கொண்டார்.

அடுத்து ஆனந்திக்கும், லட்சுமி பிரியாவுக்கும் இடையே நடந்த முக்கியமான தள்ளுமுள்ளு விஷயத்துக்கு வந்தார் விசே. ஆனந்தியின் கால்களை இழுத்துக் கீழே தள்ளிய, லட்சுமி பிரியாவைப் போட்டு வறுக்கப் போகிறார் என்று நாமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தபோது, நம்மைப் போலவே ஆனந்தியும் அதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், நடந்தது தலைகீழான சம்பவம்!

குப்புற விழுந்து அடிபட்டுக் கொண்ட ஆனந்திக்கு, அவர் எதிர்பாராதபடி இங்கேயும் கூடுதல் குட்டுக்கள்தான் கிடைத்தன. ஆனால், அது அவருக்கு தேவைதான்! இந்த விசாரணை ஆரம்பித்த போது யாரெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்று விசே தொடங்கினார். முதலில் அஷ்மிதா என் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட்டார் என்று கிட்டத்தட்ட தன் மீது ஒரு கொலை முயற்சியே நடத்தப்பட்டது போல, கழுத்தில் கையை வைத்துக்கொண்டு நடித்துக் காண்பித்தார் ஆனந்தி. அதை அவர் விவரித்த அழகை பார்க்க வேண்டுமே... அஷ்மிதா பாவம், அரண்டு போய்விட்டார். ஆனந்தியின் வாக்குமூலமே வித்தியாசமாக இருந்தது, ”அஷ்மிதா என் கழுத்தைப் பிடித்து நெறித்தார். நான் மூச்சுவிட முடியாமல், பேச முடியாமல் தவித்தேன். ஆனால், என் கழுத்தைப் பிடித்திருக்கிறாய், விடு அஷ்மிதா என்று நான் சொன்னதும் அவர் விட்டுவிட்டார்” என்றார். அவரால் பேச முடிந்ததா, பேச முடியவில்லையா என்று நமக்குக் குழப்பமாக இருந்தது. விசேவுக்கும் அதே குழப்பம்தான்.

தொடர்ந்து, ”அடுத்து, ஜேசனை இழுக்கப் பார்த்தேன், ஆனால் அவர் என் கழுத்து கழுத்து என்று கதறியதால் அவரை விட்டுவிட்டேன்” என்று ஒரு விநோதமான வாக்குமூலம் கொடுத்தார் ஆனந்தி. ஜேசன் இருக்கும் உயரத்துக்கு, சத்யராஜ் வந்தால்தான் அவரது கழுத்தையே பிடிக்க முடியும். ஜேசனும் எழுந்து, ”இவர் எப்போ என் கழுத்தைப் பிடித்தார்? அப்படியெல்லாம் ஒன்று நடக்கவே இல்லை, அவர் என் அருகில் வந்து நான் இப்போதுதான் உள்ளே வந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் எளிதாக சேவ் ஆகிவிடுவீர்கள், எனக்காக விட்டுக் கொடுங்கள் என்று டீல்தான் பேசினார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இதுதான் நடந்தது” என்று உண்மையைப் போட்டுக் கொடுத்துவிட்டார். கூடவே இதுதான் சமயம் என்று அட்டம்ட் மர்டர் பயத்திலிருந்த அஷ்மிதாவும் பயம் நீங்கி எழுந்து, ”அதுதான் சார் உண்மை. என்னிடமும் இப்படித்தான் டீல் பேசினார். எனக்கு வேறு இளகின மனசா, ஒரு நிமிடம் விட்டுக்கொடுக்கலாம் என்றே நினைத்துவிட்டேன் சார். இப்போதுதான் தெரிகிறது அவர் எல்லோரிடமும் டீல் பேசியிருக்கிறார் என்பது” என்று ஆச்சரியப்பட்டார்.

BB 10 Tamil Day 14
BB 10 Tamil Day 14Jiohotstar

ஆனந்தியும் குறும்படம் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் வேறு வழியில்லாமல் அவற்றை ஒப்புக்கொண்டார். கூடவே லட்சுமி தள்ளிவிடுவதற்கு முன்னால், தற்செயலாகக் குனிந்த லட்சுமியின் கழுத்தில் மிதித்து ஏறியிருக்கிறார் ஆனந்தி. ஆனால், முதுகில் கால் வைத்ததைத்தான் நாம் பார்த்தோம், ஆனந்தியும் அதைச் சொல்லித்தான் தப்பிக்கப்பார்த்தார். ஆனால், உண்மை வேறாக இருந்திருக்கிறது. இப்படி ஆனந்தியின் கிரைம் ரேட் கூடிக்கொண்டே போனதில், அவரை காலை இழுத்துவிட்டு தள்ளிவிட்ட லட்சுமி சிறிய எச்சரிக்கையுடன் தப்பிவிட்டார். கூடவே ஆனந்தி, லட்சுமி தன்னிடம் துக்கம் விசாரிக்கவே வரவில்லை, கடைசி ஆளாகத்தான் வந்தார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி ரிஜிஸ்டர் செய்துகொண்டிருந்தார். அந்தப் பாயிண்டும் நாறிப்போய்விட்டது. உண்மையில் முன்னதாகவே இரண்டு முறை ஆனந்தியிடம் லட்சுமி பேச முயற்சித்த போது, முகம் கொடுக்காமல் விலகிப் போயிருக்கிறார் ஆனந்தி. அவர் தன்னைத் தள்ளிவிட்டவரிடம் பேச விரும்பாமல், விலகிப் போயிருக்கலாம், அது தவறில்லை. அப்படியானால் அவர் தன்னை விசாரிக்காததை ஒரு குறையாக சபைக்குக் கொண்டு வந்திருக்கக்கூடாது. இரண்டையும் செய்து நான் விக்டிம் கார்டுதான் பிளே பண்ணுவேன் என்று பண்ணியதில் ஆனந்தியின் டப்பா டான்ஸ் ஆடிவிட்டது.

அடுத்து மிட் வீக்கில் வெளியே போய்விட்ட ஜாவித்தைக் கூப்பிட்டுக் கருத்து சொல்லச் சொன்னார்கள். அவருக்கு ஓட்டுப் போட்ட அவினாஷ், லட்சுமி போன்றோரை அவரால் முடிந்தவரை வெறுப்பேற்றிவிட்டுப் போனார் ஜாவித். அடுத்து இந்த வார எவிக்‌ஷனாக மணிவண்ணனை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் வெளியே போன பிறகு, வாசலில் உட்கார்ந்து கொண்டு, ”நீங்க டஃப் பிளேயர், நீங்க அப்படி, நீங்க இப்படி, நீங்க வெளியே போனது அதிர்ச்சியாக இருக்கிறது” என்று ஆனந்தி புலம்பிக் கொண்டிருந்ததெல்லாம் அப்பட்டமான நடிப்பு.

Puthuyugam
www.puthuyugam.com