பிக்பாஸ் 10 -நாள் 13: களமிறங்கிய விஜய் சேதுபதி #BiggBoss10

இன்றைய எபிசோடைப் பார்க்கும் போதும், எப்படியோ விஜய் சேதுபதி தமது சொந்த அரசியல் கருத்துகளை மறைமுகமாகச் சொல்ல முடிவெடுத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.
BB 10 Tamil Day 13
BB 10 Tamil Day 13Jiohotstar
Published on

விஜய் சேதுபதி வந்ததுமே ஒரு டிக்ளரேஷன் கொடுத்தார். அதாவது சென்ற வாரம் 'ஒரு லீடர் என்றால் எப்படி இருக்க வேண்டும்?' என்று இவர் ஷாதிகாவுக்குக் கொடுத்த அறிவுரைகள் எல்லாம், வெளியே வேறு யாரையோ குறிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் வைரல் விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ’அது அப்படி அல்ல, நான் இங்கு பேசும் கருத்துக்கள் அத்தனையும் இந்த விளையாட்டு சம்பந்தப்பட்டது மட்டும்தான். இது வெளியே வேறு யாரையுமோ வேறு எந்த அமைப்பையுமோ குறிப்பிடுவன அல்ல. இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியவில்லை என்பதால் நான் இங்கு மீண்டும் அழுத்திச் சொல்லிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இவர் இப்படி மீண்டும் மீண்டும் அழுத்திக் குறிப்பிடுவதைப் பார்க்கும் போதுதான் நமக்கு சந்தேகம் இன்னும் வலுக்கிறது. அதோடு இன்றைய எபிசோடைப் பார்க்கும் போதும், எப்படியோ விஜய் சேதுபதி தமது கருத்துகளை மறைமுகமாகச் சொல்ல முடிவெடுத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை ஏற்கனவே அதிகம் பேர் பார்க்கும் நிகழ்ச்சி. இந்த சீசனில் இன்னும் கல்லா கட்டலாம் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் இந்தக் கண்டெண்டுக்கு ரத்தினக் கம்பளம் விரித்திருப்பார்கள் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு விஜய் சேதுபதி சோஷியல் மீடியா டிரெண்டிங்கில் இருப்பார் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். ஜெயிலில் இருந்த ஆனந்தி, தான் டீ, காபி குடிப்பதில்லை என்றும் தனக்கு பால் வேண்டும் என்றும் தற்காலிக லீடரான முகேஷிடம் கேட்டார். ’இங்க அவனவனுக்கு குடிக்க கஞ்சியே இல்லை, உனக்கு பாலா’ எனும் மைண்ட் வாய்ஸுடன், ’டீ காபி குடிக்கும் பழக்கம் இல்லாத பலரும் இந்த வீட்டுக்குள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, டீ குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், உங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை தர முடியாது’ என்று சொன்னார். அதை அவர் அதிகாரமாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் காலில் விழாத குறைகளை கெஞ்சிதான் சொன்னார். அந்தப் பிரச்சனையை முகேஷ், லட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது லட்சுமி, ’ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவர் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். மேடம் சாப்பாடு ரெடி, மேடம் காபி தயார் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’ என்று அவர் மனதில் இருந்ததை இறக்கி வைத்தார். ஆனால் இது ஓரளவுக்கு சரிதான்.

அடுத்து விசே, எல்லோரையும் உட்கார வைத்து, ஃபார்மாலிடிக்கு சிலரைப் பாராட்டிவிட்டு நிகழ்ச்சிக்குள் போனார். முதலில், ஆனந்தி லக்சுரி ஷாப்பிங் செய்த அழகைப் பற்றிய பஞ்சாயத்து. முதலில் அவர் ஷாப்பிங் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டு பின்னர் பின்வாங்கியது, அவர் பிடிவாதம் பிடித்து தொடர்ந்தது, எல்லோருக்கும் ரத்தக்கொதிப்பை வரவைத்துவிட்டு கடைசி நேரத்தில் உப்பை எடுத்தது, அதன் பின் தெனாவெட்டாகப் போனது உட்பட எல்லாம் அலசப்பட்டன. ஆனந்தியின் குற்றமாக விசே எதையும் முன்னெடுக்காத போதும், ஆனந்தியால் ஒவ்வொருவர் சொல்லும் கருத்துகளுக்கு எதிர்கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை. முந்திரிக்கொட்டை மாதிரி பரபரத்துக்கொண்டிருந்தார். ’கொஞ்சம் பொறுங்கம்மா, உங்க வாய்ப்பு வரும்போது பேசுங்க’ என்று விசே சொன்ன பிறகும் அவரால் இருக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் மண்டையில் கொட்டி உட்கார வைத்தார்.

இந்தப் பஞ்சாயத்து முடிந்த போது இதில் கருத்து சொல்லாத, அஷ்மிதா, ராகவ், தன்யா, குமரன் உள்ளிட்ட ஆறேழு பேரை எழுப்பிவிட்டு கலாய்த்தார். ஏற்கனவே சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படி வேறு கோத்துவிட்டால் இன்னும் என்னவாகப் போகிறதோ?

அடுத்த முக்கியமான விஷயம், ஷமாவின் அதிகாரத் துஷ்பிரயோகப் பஞ்சாயத்து. முதலில் அவரது நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது என்று எல்லோரும் கருத்து சொல்லிவிட்டு விசயத்துக்கு வந்தார்கள். ஷமா அவினாஷிடம், கதை சொல்லும் டாஸ்க்கில் உன்னை நாமினேட் செய்யாமலிருக்க வேண்டுமானால், இதில் (சீஸ் ஹவுஸ் டாஸ்கில்) நான் சொல்வதைச் செய் என்று சொன்னது உண்மை. எல்லோரும் அதைக் குறிப்பிட்டார்கள்.

BB 10 Tamil Day 13
BB 10 Tamil Day 13Jiohotstar

அதற்கு விஜய் சேதுபதி காரணம் கேட்டபோது ஷமா எழுந்து, ’நான் செய்தது உண்மைதான். ஆனால், உடலளவில் பலமாக இருக்கும் போட்டியாளர்களை, பலமற்ற போட்டியாளர்கள் வேறு எப்படித் தான் வெல்ல முடியும் என்ற யோசனையில்தான் நான் அப்படிச் செய்தேன்’ என்று சொன்னார். ’உடல்பலம் குறைவு என்று நீங்கள் பெண்களைக் குறிப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டபோது, ’பெண்களை மட்டும் குறிப்பிடவில்லை, மணிவண்ணன் போன்ற உடல் பலம் குறைவான போட்டியாளர்களுக்கும் சேர்த்தேதான் நான் பேசுகிறேன்’ என்று சொன்னார். அதே நேரம் மற்ற பெண்களும், மணிவண்ணனும் ஷமாவின் கருத்தை எதிர்த்தார்கள். விசேவும், ’அது எப்படி அடுத்தவர் உடல்பலம் குறித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்? இந்த பிக்பாஸ் விளையாட்டின் வடிவமே இதுதான். இப்படித்தான் கடந்த ஒன்பது சீசன்களாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையையே புரிந்து கொள்ளாமல், இப்படி நீங்கள் நினைப்பதையே சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?’ என்று புரிய வைக்க முயற்சித்தார். அதற்கு ஷமா ’நான் செய்தது தவறுதான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, ’ஆனால், நான் சொன்ன பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? நான் ஏன் அப்படிச் செய்யக்கூடாது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டு விசேவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

’இந்த விளையாட்டு என்பது உடல் சார்ந்த விளையாட்டு மட்டுமே அல்ல, ஒரு சில இடங்களில் உடற்தகுதி பலமாக அமைந்தால், வேறு சில இடங்களில் அதுவே பலவீனமாகவும் அமைந்துவிடும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் வென்று கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று தெளிவாக சொல்லியிருந்தால் ஒருவேளை அவருக்குப் புரிந்திருக்கலாம். அப்படி விசேவும் சொல்லவில்லை. ஷமாவுக்கும் அது புரியவே இல்லை. நிகழ்ச்சி முடிந்து விசே போன பிறகும், ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்று புலம்பிக் கொண்டுதான் திரிந்தார்.

Puthuyugam
www.puthuyugam.com