பிக்பாஸ் 10 -நாள் 12:  ஒவ்வொரு வாரமும் இரட்டை நாமினேஷனா? #BiggBoss10

ஏதாவது தமக்கு ஓர் அநீதி நடக்க வேண்டும், அப்போதுதான் அதை வைத்து நாம் சிம்பதி கேம் ஆடி, பெரியளவில் ரீச் ஆகவேண்டும் என்பது முனியம்மாவின் நெடுநாள் ஆசை. காத்துக்கொண்டிருக்கிறார், பார்க்கலாம்!
BB 10 Tamil Day 12
BB 10 Tamil Day 12Jiohotstar
Published on

காரியக்காரக் கிறுக்கு என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்தவர் முனியம்மா. அவருக்கு எங்கே எப்படிப் பேச வேண்டும் என்று நன்றாக தெரிந்திருக்கிறது. ஆனாலும் தெரியாதது போல பல விஷயங்களையும், இடம் பொருள் ஏவல் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது குட்டு அவர் வாயாலேயே வெளிப்பட்டு விடுகிறது. நேற்று ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கிறார் என்று ஷமாவுக்கு எதிராக டெமாக்ரசி அறையில் பேசிய அவர், இன்று அன்சரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ’எனக்கு மீசை வரையச் சொல்லி தண்டனை கொடுத்தாள் அல்லவா, அதற்காகத்தான் அப்படி வைத்துச் செய்து விட்டேன்’ என்று உண்மையை உளறிவிட்டார்.

உண்மையில் மீசை வரைந்து கொள்வது ஒரு ஜாலியான டாஸ்க், அதைத் தண்டனை என்ற பெயரில் கொடுத்தது ஷமா. ஆனால் இன்று ஹாலில் நடப்பவர்களுக்கு ஜாலியான டாஸ்க் கொடுக்கிறேன் பேர்வழி என்று அவ்வளவு பெரிய டைனிங் டேபிளைச் சுற்றி முட்டி போட்டு நடந்து வர சொன்னார் முனியம்மா. இது அவருக்கு ஜாலியான டாஸ்க்காம். இதற்கு ஷாதிகா உட்பட அத்தனை பேரும் எதிர்த்துக் கருத்துச் சொன்ன பிறகும் கூட, ’இது என்னைப் பொறுத்தவரை ஜாலியான டாஸ்க்தான், எனக்கு தெரிஞ்சதை நான் செய்கிறேன்’ என்று பிடிவாதமாக இருந்தார். தவறோ, சரியோ முந்திக்கொண்டு எதையாவது பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் லைம் லைட்டிலேயே இருக்கலாம் என்ற அவரது ஸ்ட்ராட்டஜி இதுவரை சரியாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது. ’வேணும்னா நீங்களும் எனக்கு அது மாதிரி பண்ணுங்க’ என்ற சவால் வேறு விடுகிறார். அப்படி ஏதாவது தமக்கு ஓர் அநீதி நடக்க வேண்டும், அப்போதுதான் அதை வைத்து நாம் சிம்பதி கேம் ஆடி, பெரியளவில் ரீச் ஆகவேண்டும் என்பது அவரது நெடுநாள் ஆசை. காத்துக்கொண்டிருக்கிறார், பார்க்கலாம்!

பிறகு நேற்றைய டாஸ்கில் வெற்றி பெற்றதற்காக, பிருத்விக்கு கிரீடம் எல்லாம் வைத்து மன்னர் என்று ஓர் அரைகுறை டாஸ்க்கை நடத்தினார் பிக்பாஸ். அதில் கண்டெண்ட் ஒன்றும் தேறவில்லை போலிருக்கிறது. இந்த வாரம் நடந்த இரண்டு எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் முகேஷ் மற்றும் பிருத்வி. யாருக்கு பாஸ் கொடுக்கலாம் என்று பிக்பாஸ் கேட்க, வாக்கெடுப்பில் ஓர் ஓட்டு வித்தியாசத்தில் முகேஷுக்கு பாஸ் கிடைத்தது.

BB 10 Tamil Day 12
BB 10 Tamil Day 12Jiohotstar

அடுத்து எதிரணித் தலைவர் அவினாஷை பணிக்குழுக்களில் எது பெஸ்ட், ஒர்ஸ்ட் எனத் தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக்பாஸ். கிச்சனை பெஸ்ட்டாகவும், கிளீனிங்கை ஒர்ஸ்ட்டாகவும் அவர் சொல்ல, கிளீனிங் குழு தலைவர் ராகவ் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார். கிச்சன் குழு தலைவர் முத்தழகிக்கு, அடுத்த வார லீடர் போட்டி வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ராகவும், ஷாதிகாவும் வந்து அவினாஷிடம் நியாயம் கேட்டார்கள். என்ன கேட்டு என்ன செய்ய? இருப்பது இரண்டு குழுக்கள். யாராவது ஒருத்தரை சொல்லித்தானே ஆக வேண்டும். ஹால் கிளீனிங் முனியம்மாவின் கைங்கர்யமும் இதில் இருந்ததால், அவரையும் கேட்டார்கள். ’என்னால உன்னிய நாமினேட் பண்ணிட்டாகளாப்பா? சாரிப்பா’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போயிருப்பார்கள். ஆனால், ’எவன் நாமினேட் ஆனால் எனக்கென்ன, நான் அப்படித்தான் இருப்பேன், ஆனதைப் பாத்துக்குங்கடா வெண்ணைகளா’ என்பது போல ஷாதிகா, ராகவின் பிபியை எகிறவிட்டார் முனியம்மா.

முதல் வாரம் மட்டும் ஒரு வித்தியாசத்துக்காக போட்டியாளர்களே சேர்ந்து ஒருவரை வெளியேற்றுகிறார்கள் போலிருக்கிறது, இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு மக்கள் வாக்கெடுப்பு வந்துவிட்டதால், போட்டியாளர்கள் மூலமான எவிக்‌ஷன் இருக்காது என்று நினைத்தோம். ஆனால், அதை இந்த வாரமும் நடத்தி, ஜாவித்தை வெளியே அனுப்பிவிட்டார்கள். இது இன்னும் எத்தனை வாரம் தொடரப்போகிறதோ தெரியவில்லை. அப்படி வாரம் 2 எவிக்‌ஷன் என்றால், இன்னும் பல வைல்டு கார்டு எண்ட்ரிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Puthuyugam
www.puthuyugam.com