பிக்பாஸ் 10 -நாள் 11: இந்த வாரமும் ஆட்சி கலைக்கப்பட்டது. #BiggBoss10

அடுத்து எழுந்த ஆனந்தி கிச்சன் குழுவில் தன்னை தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும் விசயத்துக்கு நியாயம் கேட்டு கேள்வி எழுப்பினார். அவரைக் கொடுமைப்படுத்தும் மற்ற இரண்டு பெண்களான லட்சுமி மற்றும் முத்தழகியோடு, லீடர் ஷமாவும் கூட்டணியிலிருப்பது சிக்கல்.
BB 10 Tamil Day 11
BB 10 Tamil Day 11Jiohotstar
Published on

முனியம்மா மைக் போடாமல் இருந்ததற்காக பிக்பாஸ் கூப்பிட்டுக் கண்டித்தார். ஆனந்தி உள்ளே வந்ததிலிருந்து முனியம்மா மீது இருந்த வெளிச்சம் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. அதை உணர்ந்து கொண்டு வேண்டுமென்றேதான் மைக் போடாமலிருந்தாரா அல்லது இயல்பாக நடந்ததா என்று தெரியவில்லை. உடனே, லீடர் ஷமாவும் அவரை அழைத்து, முகத்தில் மீசை வரைந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தண்டனை கொடுத்தார். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒரு தண்டனை. முதலில் அடம்பிடித்த முனியம்மாவும், பின்னர் மீசை வரைந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், முகேஷ் போன்ற ஆண்களுடன் சேர்ந்து கொண்டு ஓர் ஆண் போலவே தன்னை உருவகித்துக் கொண்டு, ஷாதிகாவை சைட் அடிப்பது உட்பட ஜாலியாக நடித்துக் கொண்டிருந்தார். அட பரவாயில்லையே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த டாஸ்க் முடிவுக்கு வந்த பிறகு ஒரு பெரிய ட்ராமாவையும் போட்டார். அவர் அவ்வளவு நேரம் ஜாலியாக இருந்ததற்கு நேர் எதிரான ஒரு டிராமா அது. ’சின்ன வயதில் இருந்தே என்னை எல்லோரும் ஆண் போல இருப்பதாகச் சொல்லிக் கேலி செய்வார்கள், அது எவ்வளவு வேதனையான விசயம் தெரியுமா, அதெல்லாம் யாருக்குமே நடக்கக்கூடாது’ என்று ஒரு உருட்டு உருட்டினார்.

அடுத்து எல்லோரும் சாப்பிட்டு முடித்துப்போன பிறகு, கடைசியாகக் குளித்துக் கிளம்பி வந்த சாந்தினி, லட்சுமியிடம் ’சாப்பிட ஏதாவது இருக்கிறதா’ என்று கேட்க, அவர் ’ப்ச்ச்’ சென்று சலித்துக் கொண்டார். அதில் கடுப்பாகி போன சாந்தினி ’எனக்கு சாப்பாடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்’ என்று கோபித்துக்கொண்டு கிளம்பி விட்டார். லீடர் ஷமா அவரை சமாதானப்படுத்தி அழைத்துவந்து இந்த பஞ்சாயத்தை விசாரித்தார். ’நான் சலித்துக் கொண்டது சாந்தினியைப் பார்த்து அல்ல, உணவு காலி ஆகிவிட்டதே என்ற எண்ணத்தில்தான் அப்படிச் செய்துவிட்டேன்’ என்று சொன்னார் லட்சுமி. நியாயமான காரணமாக இருக்கலாம். ஆனால், இரண்டு நாட்களாக லட்சுமி ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தைப் பார்த்தால் அதை நம்புவதற்கு நம் காதில் பூவைத்தான் வைத்துக்கொண்டிருக்க வேண்டும். லட்சுமியின் முகபாவத்துக்கு உண்மையில், ’இப்படி, நின்று நிதானமாகக் குளித்து விட்டு வந்தால், நாங்கள் உணவை எடுத்து வைத்துப் பரிமாற நீ என்ன மகாராணியா?’ என்ற காரணமாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

அடுத்து டெமாக்ரசி அறையில் கேள்வி நேரம் டாஸ்க் தொடங்கியது. கேள்வி நேரம் தொடங்கும் முன்னதாகவே முனியம்மா எழுந்து, ’ஷமா ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதால், நான் எனது பதவியை ராஜினாமா செய்து விட்டு எதிரணிக்கு போகிறேன்’ என்று கட்சி தாவிப் போய்விட்டார். இவர்தான் தொடக்கத்தில் ஷமாவுக்கு ஆதரவாக பேசியவர். அதற்கு அடுத்து எழுந்த ஆனந்தி கிச்சன் குழுவில் தன்னை தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும் விசயத்துக்கு நியாயம் கேட்டு கேள்வி எழுப்பினார். அவரைக் கொடுமைப்படுத்தும் மற்ற இரண்டு பெண்களான லட்சுமி மற்றும் முத்தழகியோடு, லீடர் ஷமாவும் கூட்டணியிலிருப்பதால் அவருக்கு இந்த விசயத்தில் நியாயம் கிடைக்கப்போவதில்லை, ஆனால், அது அத்தனையும் ஆனந்தியின் ஆணவமான மற்றும் இடைவிடாத பேச்சுக்கு கிடைத்த பரிசு என்பதால் நமக்கு அவர் மேல் அவ்வளவாக சிம்பதி வரவில்லை. கூடவே ஆனந்திக்கு ஆதரவாக முனியம்மா எழுந்து, ’ஆனந்தி மீது எந்த தவறும் இல்லை’ என்று ஆதரவுக் குரல் கொடுத்தார். தொடர்ந்து முனியம்மா காட்டிய வழியில் ஆனந்தியும் ராஜினாமா செய்துவிட்டு எதிரணிக்குப் போனார். முனியம்மாவுக்கு ஒரே ஆனந்தம். கூட்டம் கூடுவதைப் பார்த்த எதிரணித் தலைவர் அன்சார், ’எதிர்கருத்து சொல்லுங்க, பரவால்ல. ஆனா எதிரணிக்கு வரணும்னு அவசியமில்ல, ஏற்கனவே இங்க கூட்டம் அதிகமா இருக்கு’ என்று நிராகரித்து ஆனந்தியின் வேதனையில் மேலும் ஒரு லிட்டர் பெட்ரோலை ஊற்றினார்.  

BB 10 Tamil Day 11
BB 10 Tamil Day 11Jiohotstar

அடுத்து ஜேசனும், ஷமாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார், எதிரணிக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று. அதென்னவோ உண்மைதான். மேலும், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஷமா சற்று சர்வாதிகாரி போலத்தான் நடந்துகொண்டார். ஆனால், அதற்கு அவர், ’ஆளும் அணியிலிருப்பவர்கள் நாக்கு தள்ள வேலை பார்க்கிறார்கள். அவனுகளுக்கு சும்மா உக்காந்துகிட்டு குறை கண்டுபுடிக்கிறதே வேலையா இருக்கு. அதனால, ஆமா நான் கொஞ்சம் காட்டமாக நடந்துகொண்டேன், அது தப்பா தெரியல’ என்று ஒரு விநோதமான காரணம் சொன்னார். ஆனால், அதை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. அடுத்து ஜாவித் எழுந்து முக்கியமான பாயிண்டான, சீஸ் டாஸ்க்கில் அவினாஷுடன் டீல் பேசி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த ஷமாவின் தவறைக் கேள்வி எழுப்பினார். ஷமாவும் வேறு வழியின்றி, தவறை ஒத்துக்கொண்டார். கடைசியில் எல்லோருமாகச் சேர்ந்து ஷமாவின் ஆட்சியைக் கலைத்தார்கள். அடுத்த தலைவராக முகேஷ் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து சொந்தக்கதை டாஸ்க்கில், ராகவ், அவினாஷ், ஷமா, தன்யா ஆகியோர் கதை சொன்னார்கள். ’இவ்வளவு வருசமா முயற்சி பண்றேன், ஆனால் என்னால் ஏன் ஜெயிக்கவே முடியலைன்னு தெரியல’ என்று ராகவ் கதறினார். இதையெல்லாம் தமக்குள் ஆராய்ந்துகொள்ளாமல், பொதுவில் இப்படிப் பேசுவதுதான் காரணம் என்று அவருக்குத் தெரியவில்லை, பாவம். ஆனால், அது கூட பரவாயில்லை, ’என் அப்பா ஒரு டாக்டர், என்னால் அமெரிக்காவில்தான் படிக்க முடிந்தது. என்னை மாதிரி ஒரு ஏழையை பார்க்கவே முடியாது’ என்று ராகவ் புலம்பியதுதான் சற்று ஓவராக இருந்தது. அது நிச்சயம் வைரல் ட்ரோல் கண்டெண்டாகப் போகிறது.

Puthuyugam
www.puthuyugam.com