

முதலில் எதிரணியினரை, சமையல் குழு மற்றும் கிளீனிங் குழுவுக்கு ரேங்கிங் கொடுக்கச் சொன்னார் பிக்பாஸ். அவர்கள் அன்சார் தலைமையில், பெரிய விவாதங்களுக்குப் பிறகு தலா மூன்று ஸ்டார்களை கொடுத்தார்கள். சாப்பாட்டில் முடி இருந்தது, வண்டு இருந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. அதற்கு ஆனந்தி பதில் சொல்கிறேன் பேர்வழி என்று, ’லட்சுமி பிரியா எனக்கு காய்கறி வெட்டிக் கொடுக்கவில்லை. அதனால்தான் இப்படி எல்லாம் நடந்திருக்கிறது’ என்று சொன்னார். கக்கூஸில் தண்ணி வரவில்லை என்றாலும் இந்த ஆனந்திக்கு லட்சுமி பிரியாதான் காரணம்.
அடுத்து லீடர் ஷமா, கிச்சன் குழுவில் இருந்த நான்கு பேரையும் உட்கார வைத்துக் கொண்டு இந்த பிரச்சினைகளை எல்லாம் எப்படி தீர்க்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்தார். லட்சுமி, முத்தழகி, அவினாஷ், ஷமா நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஐந்தாவதாக உட்கார்ந்திருந்த ஆனந்தியும் ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று அவருக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரியவில்லை. கடைசியில் ’நான் ஒருத்தி இங்கு பேசிக்கிட்டிருகேன். யாருமே என்னை கவனிக்க மாட்டேங்கிறீங்க’ என்று சொல்லி அழவே ஆரம்பித்துவிட்டார்.
அடுத்து கொஞ்ச நேரம், இந்த வீட்டில் விதிமுறைகள் மீறல் அடிக்கடி நடக்கிறது என்று சொல்லி எதிரணியினர் நடுஹாலில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் கோஷம் போட்டு போராட்டம் நடத்தினார்கள். அது பார்க்க சற்று சுவாரசியமாகத்தான் இருந்தது. அதற்கடுத்து, சீஸ் வடிவில் செய்யப்பட்டிருந்த ஒரு வீட்டுக்குள் எல்லோரும் புகுந்து கொண்டு, அதில் போடப்பட்டிருக்கும் ஓட்டைகள் வழியாக தலையை வெளியே நீட்ட வேண்டும் என்று ஒரு டாஸ்க் நடந்தது. இதுவும் நேற்று நடந்த நாக் அவுட் டாஸ்க்கைப் போலவே ஒரு அதிரடி, அடிதடி டாஸ்காகவே இருந்தது. தடபுடலாக விழுந்தடித்துக்கொண்டு விளையாடினார்கள். ஆண்கள் முடிந்தவரை ஒருவர் ஓட்டையைப் பிடித்துக்கொண்டால் மற்றவர்கள் விலகிக்கொண்டு டீசண்டாக ஆட, பெண்கள் ரகளைகள் செய்துகொண்டிருந்தார்கள்.
ஒரு சில ரவுண்டுகள் போகப் போக அடுத்தவர்களை இழுத்து வெளியே போடுவது, நின்றுகொண்டிருந்த ஸ்டூல்களைத் தட்டி விடுவது, அடுத்தவர் முதுகில் ஏறி ஓட்டையைப் பிடிக்க முனைவது என்று அட்டகாசம் செய்துகொண்டிருந்தார்கள். குறிப்பாக போனவாரம் என்னையாடா நாமினேட் செய்தீர்கள் என்ற கடுப்பு இன்னும் லட்சுமி பிரியாவுக்குக் குறையவில்லை போலிருக்கிறது. தனியாவர்த்தனம் செய்துகொண்டிருந்தார். அடுத்து அவர் தம்மைக் கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஆனந்தியின் காலைப் பிடித்து இழுத்துப்போட்டதில், ஆனந்தி குப்புற விழுந்து அடிபட்டுக்கொண்டார். நிச்சயம் இது லட்சுமியின் வன்மத்தின் வெளிப்பாடுதான். முழுதாக ஏறிப் பற்றிக்கொள்ளாத நிலையிலேயே ஆனந்தியின் காலைவாரிவிட்டது லட்சுமியின் தவறு. முதலில் ஆனந்தி இதை சற்று பெரிது படுத்திக்கொண்டு நடிக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்தது நமக்கு. ஆனால், மருத்துவக் குழு அவரை சோதித்து கையில் ஐவி பேட்ச் போட்டதைப் பார்த்த பிறகுதான் நம்மால் நம்ப முடிந்தது. அதன் பிறகும் விளையாட்டு என்றால் அடிபடத்தான் செய்யும் என்பது போல தெனாவெட்டாக, தான்தான் தள்ளிவிட்டேன் என்று லட்சுமி சொன்னாரே தவிர அதில் தவறு செய்துவிட்டோம் எனும் குற்றவுணர்ச்சி எதுவும் இல்லை. நடுவில் ஜேசன் மற்றும் ஷமாவுக்கிடையே ஒரு போராட்டமே நடந்து முடிந்தது. இங்கும் ஷமா மீது தவறு இருந்தாலும், ஜேசன் பதிலுக்கு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை நம்மால் ஏற்கமுடியவில்லை. இதற்கும் முந்தின நாள் ஷமா மீது ஏற்பட்ட ஜேசனின் வன்மமே காரணம். மேலும் அஷ்மிதா, அவிநாஷ் போன்றோரும் லேசாகக் காயம்பட்டுக் கொண்டார்கள். மொத்தத்தில் பிளைவுட்டில் செய்யப்பட்டிருந்த அந்த வீட்டையே பிய்த்துப் பறக்கவிட்டுவிட்டார்கள். இறுதியில் இந்த ஆட்டத்தில் பிருத்வி வெற்றி பெற்றார்.
அடுத்து சொந்தக்கதை டாஸ்க்கில், ஷாதிகா, ஜாவித், அன்சார், முத்தழகி ஆகிய 4 பேர் கதை சொன்னார்கள். ஜாவித் கதையில் செண்டிமெண்ட் குறைவாக இருந்ததால், லீடர் நேற்றைய 3 நாமினேசனிலிருந்து குமரனைக் காப்பாற்றிவிட்டு ஜாவித்தைக் கோர்த்துவிட்டார். இன்றைக்கு இவ்வளவுதான்.