பிக்பாஸ் 10 -நாள் 9: சொந்தக் கதை சோகக் கதை வாரம்! #BiggBoss10

காய்கறி வெட்டிக்கிக்கொண்டிருந்த லட்சுமியைப் பார்த்து, ’காய்கறி வெட்டிக்கொடு’ என்று தெனாவெட்டாகச் சொல்ல அவருக்குப் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. ஆனந்தி இன்னொரு வனிதாவாகவோ, சாண்ட்ராவாகவோ முயற்சிக்கிறார் போலிருக்கிறது.
BB 10 Tamil Day 9
BB 10 Tamil Day 9Jiohotstar
Published on

யாரிடம் எப்போது வம்பு இழுக்கலாம் என்ற நினைப்பிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஆனந்தி, ஆள் கிடைக்காமல் அவர் இருக்கும் சமையல் குழுவில் உள்ள முத்தழகி மற்றும் லட்சுமி பிரியா ஆகியோருடனேயே வம்பிழுத்துக் கொண்டிருந்தார். ’காலையில நாங்க சமைக்கிறோம், மதியம் நீங்க சமையுங்க’ என்று முத்தழகி சொன்னதற்கு, ’அதை டிசைட் பண்ணுவதற்கு நீங்க யாரு, என்கிட்ட டிஸ்கஸ் செய்திருக்கணும்ல’ என்று முத்தழகிதான் கிச்சன் லீடர் என்பதையே மறந்து ஏறுக்குமாறாகவே விவாதம் செய்து கொண்டிருந்தார். பதிலுக்கு முத்தழகி காண்டாகி திட்டி விட்டதில் பதில் எதுவும் சொல்லத் தெரியாமல் அவரை மாக்கிங்கும் செய்துவிட்டு, ’என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க, என்னால கிச்சன்ல சமைக்க முடியாதுங்க’ என்றும் சொல்லிவிட்டுப் போனார் ஆனந்தி. தான்தான் இங்கிருக்கும் மற்ற பெண்களை விட சீனியர் என்றும், பெரிய செலிபிரிடி என்றும் நினைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் அவர். சீக்கிரமே விட்டுத் திருப்பப் போகிறார்கள். ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்தில் யாரும் சொல்லாமலேயே வந்து மதிய சமையலை ஆரம்பித்தார். இப்போதும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், பக்கத்தில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த லட்சுமியைப் பார்த்து, ’வேகமாக வெட்டிக்கொடு’ என்று தெனாவெட்டாகச் சொல்ல அவருக்குப் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. மீண்டும் ஒரு பஞ்சாயத்தாகிப் போனது. ஆனந்தி இன்னொரு வனிதாவாகவோ, சாண்ட்ராவாகவோ முயற்சிக்கிறார் போலிருக்கிறது.

அடுத்து நாமினேஷனைக் கேன்சல் செய்யவைக்கும் பவருக்காக, ’நாக் அவுட்’ என்றொரு பிசிகல் டாஸ்க் நடத்தப்பட்டது. அடிதடி டாஸ்க்குகளை ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஆட்டம் ரொம்பப் பரபரப்பாக நடந்தது. எல்லோரும் காயினை எடுக்கப்போனால் வித்தியாசமாக சிந்தித்த ராகவ், தன் படத்தை மறைத்துகொண்டு அழுகுணி ஆட்டம் ஆட முயற்சித்தார். பின் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி, இறுதியில் தன்யா, குமரன், முகேஷ் மூவரும் இருந்தார்கள். குமரனும், தன்யாவும் இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினார்கள். ஆனால், முகேஷ் எல்லோரிடம் டீல் பேசியே இதுவரை வந்தவர், இறுதியில், குமரனுக்கும் அல்வா கொடுத்து வெற்றியும் பெற்றுவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பார்வையாளர்களே சற்று பயப்படக்கூடிய ஒரு டாஸ்க் என்றால் அது போட்டியாளர்கள் தங்களின் ’சொந்தக் கதை சோகக் கதை’ சொல்லும் டாஸ்க்தான். இல்லாத சோகத்தை மெனக்கெட்டு வரவழைத்து, செண்டிமெண்டைப் பிழிவார்கள் அல்லது துளியூண்டிருக்கும் சோகக்கதையை மைக்ரோஸ்கோப்பை வைத்துப் பார்த்து இந்த உலகத்திலேயே தனக்கு மட்டும்தான் இது நடந்திருக்கிறது என்பது போல கதறுவார்கள். அதைக் கேட்க முடியாமல் பார்வையாளர்களான நாமும் கதற வேண்டியதிருக்கும். இந்த டாஸ்க்கை ஒருபோதும் பிக்பாஸ் குழு தூக்காது என்றாலும் நமது நிலைமையை மனதில் கொண்டு, அதில் கடந்த சில சீசன்களாக சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறை ஒரு நாளைக்கு நான்கு பேர்தான் கதை சொல்ல வேண்டும், அதுவும் ஒருவருக்கு 5 நிமிடங்கள்தான் என்று சொல்லி நம் வயிற்றில் பாலை வார்த்தார்கள். ஒரு நிமிடம் நமது மனக் கண்களில் அனிதா சம்பத்தின் கதை எல்லாம் வந்து போகும் நிலையில், இருபது நிமிடங்களில் நான்கு கதைகள், அதுவும் ஒரு போட்டியாளருக்கு ஐந்து நிமிடம்தான் என்பது நமக்கு எல்லாம் எவ்வளவு பெரிய ஆறுதல் இல்லையா!

BB 10 Tamil Day 9
BB 10 Tamil Day 9Jiohotstar

ஜேசன், குமரன், அஷ்மிதா, லட்சுமி ஆகியோர் வந்து கதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். குமரன் தன் அப்பாவின் மறதி நோயைக் குறித்துச் சொன்ன கதை மனதைத் தொட்டது. இந்த டாஸ்க்கில், ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடம் என்று சொல்லாமல் மொத்தமாக 20 நிமிடம் என்று சொல்லி, யார் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள், யாருக்கு நேரம் இல்லாமல் போகிறது என்பது போன்ற சிண்டு முடியும் வேலையையும் பார்த்துவைத்தார் பிக்பாஸ்! ஆனாலும் அவர் எதிர்பார்த்ததைப் போல பெரிதாக சண்டை எதுவும் வரவில்லை. கூடவே இரண்டு நாட்களாக முடிந்தவரை பெரிய சிக்கல் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் ஒழுக்கமாக லீடர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஷமா. அதனால், இருக்கவே இருக்கிறது ரேங்கிங் டாஸ்க் என்று அதைக் கையில் எடுத்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சொல்லப்பட்ட கதைகள் அடிப்படையில் லீடரை ரேங்க் செய்ய சொல்ல, பிக்பாஸ் ஆசைப்படியே ஷமாவுக்கும், ஜேசனுக்கும் நடுவே சண்டை பற்றிக்கொண்டது. ஷமாவுக்கு ஜேசன் மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை, தான்தான் லீடர் என்பதையும் மறந்து, ஜேசனுக்கு ஆதரவாகப் பேசியவர்களைப் பார்த்து ஃப்ளோவில் ’ஜேசனுக்கு சொம்படிக்காதீங்க’ என்று சொல்லி சிக்கலில் சிக்கிக்கொண்டார். வீக்கெண்டில் விசேவிடம் அறிவுரை கன்ஃபர்ம்!

Puthuyugam
www.puthuyugam.com