பிக்பாஸ் 10 நாள் 6: ஸ்ட்ரிக்ட் ஆபீசர் விஜய் சேதுபதி! #BiggBoss10

”லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்னா என்னன்னே புரியாம, பொய் வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்து பதவியை அடைந்த பிறகு, பிரச்சினைகளும், பொறுப்புகளும் வரும் போது அதை எதிர்கொள்ளத் திறமையில்லாம, எதிரணி மேல பழியைத் தூக்கிப் போடுவதெல்லாம் ஒரு ஏமாற்றுவேலை!”
BB 10  Tamil Day 6
BB 10 Tamil Day 6Jiohotstar
Published on

வெள்ளிக்கிழமை எபிசோடில், அடுத்த வார லீடர் தேர்வின் தொடர்ச்சி காண்பிக்கப்பட்டது. பிக்பாஸ் தேர்வு நடத்துமுன்பாகவே அவர்களாகவே வாக்களித்து லீடரைத் தேர்ந்தெடுக்கவும், நான் இன்னும் வாக்கெடுப்பே நடத்தவில்லையே என்று சொல்லி பல்பு கொடுத்தார் பிக்பாஸ். அந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகள் வாங்கிய கடுபில் தன்யா தலைவர் போட்டியிலிருந்து விலகுவதாகச் சொன்னார். அதைக் கேட்க நமக்கே கடுப்பாக இருந்தது. பிக்பாஸுக்கு எப்படி இருந்திருக்கும்? ஒரு குட்டு வைத்தார். பின் மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அன்சாரும், ஷாமாவும் லீடர் போட்டிக்குத் தேர்வானார்கள். ’இதுக்குதான் பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கட்டும்னு நினைச்சேன்’ என்ற தன்யாவின் மைண்ட் வாய்ஸ் அவரது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்து ஒர்ஸ்ட் ஆட்டக்காரர்களான அஷ்மிதா, முனியம்மாவை ஜெயிலில் கொண்டுபோய் போட்டார்கள். முனியம்மா, ’தப்பான ஆளைச் சொன்னதற்காக எல்லோரும் கவலைப் படுவீங்க’ என்று லேடி வாட்டர்மெலன் போலச் சொல்லிவிட்டு ஜாலியாக ஜெயிலுக்குப் போய் இழுத்துப் போர்த்திப் படுத்துக்கொண்டு தூங்கிவிட்டார். அஷ்மிதா மட்டும், பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஷாதிகாவிடம் யாரோ அவரை பாடி ஷேமிங் செய்ததாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தார். அந்தப் பக்கி யாரென்று தெரியவில்லை. நாளை அது விசாரணைக்கு வருகிறதா பாப்போம்.

அடுத்து முனியம்மா தன் பெயரை ஒர்ஸ்ட் பர்ஃபார்மராகச் சொன்ன கடுப்பில் அவினாஷ், சமைத்துக் கொண்டிருந்த முனியம்மாவிடம் போய் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்டு நன்றாக வெறுப்பேற்றி அழ விட்டார். அவினாஷ் செய்தது கொஞ்சம் இரிடேட் செய்யும் வேலைதான் என்றாலும், முதல் முறையாக முனியம்மாவைக் கடுப்பேற்றிவிட்டதால், அதில் நமக்கொரு சின்ன மகிழ்ச்சி. இது ஒருபுறமென்றால் இன்னொரு புறம், மணிகண்டன் அன்சாரைப் பார்த்து, ’ஆஃப்ட்ரால் நீ ஒரு கோமாளிதானடா, ரொம்ப ஆடாத’ என்பது போல எதையோ சொல்லிவிட அதற்கு அவர் ’என் தொழிலையே மோசமாக சொல்லிவிட்டான் இந்தாளு’ என்று தனியே போய் அழுதுகொண்டிருந்ததெல்லாம் சற்று ஓவர்தான்.

விஜய் சேதுபதி வரும் இந்த சீசனின் முதல் வீக்கெண்ட் எபிசோடு தொடங்கியது. போன சீசனில் வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவமோ என்னவோ தொடக்கத்திலிருந்தே அவர் ஸ்ட்ரிக்டாக இருந்தார். ஷாதிகா, வினோத், ஜேசன், தன்யா என கையில் சிக்கிய அனைவரையுமே போட்டு வறுத்தெடுத்தார். கிராமத்து ஆதரவு என்ற போர்வையில், எதிர்பார்த்தது போலவே முனியாம்மாவை மட்டும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

BB 10  Tamil Day 6
BB 10 Tamil Day 6Jiohotstar

முதலில், டெமாக்ரசி என்றால் என்னவென்று கேட்டு, அறிவுபூர்வமான பதில்களை வாங்கிக்கொண்டு லீடர் ஷாதிகா பிரச்சினைக்கு வந்தார். குமரன், வினோத், முத்தழகி, ஜேசன் போன்றோர் ஷாதிகாவின் லீடர்ஷிப் எப்படி இருந்தது என்று சொல்ல, சிம்பிளாக நேரடியாக சொன்னவர்களை விட்டுவிட்டு, வளவளவென்று டிப்ளமேடிக்காக பேசுகிறேன் பேர்வழி என்று பிளேடு போட்ட ஜேசனையும், வினோத்தையும் மண்டையில் குட்டி உட்கார வைத்தார். ஷாதிகாவிடம் அவர் மீதான குற்றச்சாட்டு எதற்கும் பதிலில்லை. தேமேவென்று நின்று வாங்கிக் கட்டிக்கொண்டார் அவர். அப்போதுதான் ஷாதிகாவைப் பார்த்து விசே ஒரு கருத்தைச் சொன்னார்.

”லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்னா என்னன்னே புரியாம, வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்து பதவியை அடைந்த பிறகு, பிரச்சினைகளும், பொறுப்புகளும் வரும் போது அதை எதிர்கொள்ளத் திறமையில்லாம, எதிரணி மேல பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறிச்சு ஓடுவதெல்லாம் ஒரு நல்ல லீடருக்கான குவாலிடியே இல்லை. அது ஒரு ஏமாற்றுவேலை”

நமக்கென்னவோ விசே, அதை ஷாதிகாவுக்காக சொன்னது போல தெரியவில்லை. நல்ல கருத்து, இருக்கட்டும்! பிறகு, வினோத்தை எழுப்பி எதிரணி மீதான கருத்துகளையும் சொன்னார். பின் ஆளும் அணி துறைத்தலைவர்களை எழுப்பி, அனைவருக்கும் ஒரு கொட்டு வைத்தார். ’உங்க தலைவர்கிட்ட உங்க கருத்தை, விமர்சனத்தை உங்க மீட்டிங்ல வைச்சிச் சொல்லுங்க, தப்பில்ல. ஆனா சபையில் அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணாமல், எதிரணியோடு சேர்ந்துகொண்டு அவரைத் தாக்கி ஆட்சியைக் கவிழ்த்தது எப்படி சரியாகும்?’ என்று கேட்டார். நியாயமான கேள்விதான். எதிரணியோடு சேர்ந்துகொண்டு ஆளும் அணியும் சேர்ந்து ஷாதிகாவைப் போட்டுத் துவைத்தெடுத்ததால்தான் ஷாதிகா ஆடிப்போய்விட்டார் என்பது உண்மைதான். அத்தோடு முடிந்தது இன்றைய விசாரணை. மீதியை நாளை பார்க்கலாம்.

Puthuyugam
www.puthuyugam.com