பிக்பாஸ் 10 -நாள் 3: டயாபடிஸால் வெளியேறிய பாண்டி!

முனியம்மா பண்ணிவிட்டுப் போன வேலையில், ஷாதிகாவுக்கு இந்திய அரசியலே புரிந்துவிட்டது போலிருக்கிறது ’ஒரு லீடராக, என்னால் இந்த 19 பேரையே மேய்க்க முடியலையே, இந்த நாட்டுல சிஎம்மா, பிஎம்மா இருக்குறதெல்லாம் எவ்வளவு கஷ்டம்,’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
BB 10 Tamil Day 3
BB 10 Tamil Day 3Jiohotstar
Published on

இரவு நேரத்தில் சிலர் உள்ளே நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர், சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால், செக்யூரிட்டி வேலை கிடைத்த ராகவ் மட்டும் வெளியே கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார். ’எல்லோருக்கும் தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன. எனக்கு மட்டும் எதுவுமே இல்லை. நான் என்னதான் செய்ய வேண்டும்? நான் எதற்குதாண்டா லாயக்கு?’ என்று வடிவேலு மாதிரி தனியே புலம்பிக் கொண்டிருந்தார். விதிமுறைகளே இல்லாத நிலையில், தன் இஷ்டத்துக்கு எதையாவது உருவாக்கிக் கொண்டு, எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு பெரிய சுவாரஸ்யமான ஆட்டத்தையே ராகவ் ஆடியிருக்கலாம். என்ன அட்டகாசம் பண்ணினாலும் பிக்பாஸும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால், எதையுமே யோசிக்காமல், புலம்பத்தான் முடிந்தது ராகவால்!

அடுத்து முகேஷை, அவரது ஸ்பெஷல் பவரை பயன்படுத்த அழைக்க, அவர் வில்லேஜ் லுக்கில் இருக்கும் முனியம்மாவை மாடர்ன் கேர்ள் லுக்குக்கும், மாடர்ன் கேர்ள் சாந்தினியை வில்லேஜ் லுக்குக்கும் மாற்றப்போவதாகச் சொன்னார். என்னடா கிரியேட்டிவிட்டி இது? இரண்டு பெண்களும் அதற்கு ஆர்வமாக ஒத்துக்கொண்டார்கள். அவினாஷுக்கு அன்லிமிடட் சாப்பாடு பவரை ஆக்டிவேட் செய்ததும், முதல் வேலையாக ஆம்லெட் போட்டுத்தாருங்கள் என்று சமையல் குழு முனியம்மாவைக் கேட்க அவரும் ஆர்வமாகப் போய் முட்டையை எடுத்திருப்பார் போலிருக்கிறது. குழுத் தலைவர் பாண்டிக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு கோபம் வந்ததோ தெரியவில்லை. என்னைக் கேட்காமல் எப்படி முட்டையில் கைவைக்கலாம் என்று முனியம்மாவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஓரளவுக்கு மேலோட்டமாக வம்பிழுக்கவும், சண்டை போடவும் முனியம்மா தயாராகத்தான் வந்திருக்கிறார் என்றாலும், நிஜமான சண்டை ஏற்பட்டால் வாலைச் சுருட்டிக்கொண்டு போய்விடுவார், அவர் ஒரு டம்மி பீஸு என்பது இங்கே வெளிப்பட்டது. இனி வரும் நாட்ககளில் இது இன்னும் உறுதிப்படும்.

அடுத்து ஆளும் அணி மீட்டிங்குக்கு கூப்பிட, இந்தப் பிரச்சினையால் அங்கு வரமாட்டேன் என்று கொஞ்ச நேரம் பிகு செய்த முனியம்மா, ஒரு சிலர் கூப்பிட்டதும் வந்துவிட்டார். லீடர் ஷாதிகா, டெமாக்ரசி அறை விவாதம் வரப்போகிறது, எதை எப்படி எதிர்கொள்ளலாம் என்று விவாதிக்கக் கூப்பிட்டிருந்தார் போலிருக்கிறது. ஷாதிகா நன்றாக யோசிக்கிறார், ஆனால் அதைச் செயல்படுத்துவதில் சொதப்புகிறார். ஒருவர் மீது குற்றம் சொல்வதற்கு முன்னால், தேவையே இல்லாமல், ’என் மீது ஆயிரம் குற்றம், குறைகள் இருக்கலாம், ஆயிரம் தப்புகள் பண்ணுவேன், நான் பர்ஃபெக்டான ஆள் இல்லை. ஆனாலும், இப்ப நீங்க பண்றது தப்பு’ என்று தேவையில்லாமல் வாண்டடாக வண்டியில் ஏறிக் கொள்கிறார். முனியம்மா இங்கேயும் சும்மா இருக்கவில்லை. ஏற்கனவே கண்டெண்ட் பசியில் திரியும் முனியம்மா, ஷாதிகாவின் வாயைப் பிடுங்கி, ஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்னு சம்பந்தமில்லாமல் பேசி முழு மீட்டிங்கிலும், பேச வந்த விசயத்தை விட்டுவிட்டு முனியம்மாவின் விளையாடல்கள்தான் பேசப்பட்டன. அதுதான் முனியம்மாவுக்கும் தேவை. நெகடிவாகவோ, பாசிடிவாகவோ எந்நேரமும் தம்மைப் பற்றியே டாபிக் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். முத்தழகியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ’கெட்ட பெயர் வந்தால் கூட பரவாயில்லை, ஹிட் பிளேயராக வேண்டும்’ என்பது அவர் வாயிலிருந்தே வந்துவிட்டது.

முனியம்மா பண்ணிவிட்டுப் போன வேலையில், ஷாதிகாவுக்கு இந்திய அரசியலே புரிந்துவிட்டது போலிருக்கிறது ’ஒரு லீடராக, என்னால் இந்த 19 பேரையே மேய்க்க முடியலையே, இந்த நாடு எவ்வளவு பெருசா இருக்கு, எத்தனை கோடி பேர் இருக்காங்க. சிஎம்மா, பிஎம்மா இருக்குறதெல்லாம் எவ்வளவு கஷ்டம், நான் படிச்சிருந்தும் இவ்வளவு நாளா அவங்களைப் பத்தி யோசிக்காம, இப்படி அரசியல் எதுவும் தெரியாத முட்டாளா இருந்துட்டேனே’ என்று அன்சரிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தார். ரொம்ப முக்கியம்!

BB 10 Tamil Day 3
BB 10 Tamil Day 3Jiohotstar

அடுத்து, எதிரணியிலிருந்த அஷ்மிதா சமையல் செய்துகொண்டிருந்த காரணத்துக்காக அஷ்மிதா, எதிரணித் தலைவர் வினோத், லீடர் ஷாதிகா மூவரையும் பிக்பாஸ் கூப்பிட்டார். ’நாம் இன்னும் சாப்பிடவில்லை அல்லவா, அதற்காக பாசத்தோடு கண்டிக்கக் கூப்பிட்டிருப்பார்’ என்று ஷாதிகா புலம்பிக்கொண்டே போனார். பிக்பாஸ், ’ஏண்டா வீட்டு அணிகளுக்குள்ளயே ஒருத்தன், இன்னொருத்தனுக்கு உதவி செய்யக்கூடாது, அப்படிச் செஞ்சா எதிரணி கண்காணிக்கணும்னு சொல்லியிருக்கேன். ஆனா எதிரணியில உள்ள ஒருத்தியே உள்ளார பூந்து சமைச்சிகிட்டிருக்கா. அதை ஒருத்தனும் கண்டுக்காம இருக்கீங்க’ என்று ஒரு காட்டு காட்டிவிட்டார். இவர்கள் சாப்பிட்டார்களா என்று நம் மீதுள்ள அக்கறையில் பிக்பாஸ் கூப்பிட்டிருக்கிறார் என்று நினைத்த ஷாதிகாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

அடுத்து ஏதோ காரணத்துக்காக பாண்டிக்கு, ரத்தப் பரிசோதனை செய்திருப்பார்கள் போலிருக்கிறது. HbA1c அளவு 10-க்கும் மேலாக இருந்திருக்கிறது. நிச்சயமாக கவனிக்கவேண்டிய அளவுள்ள டயாபடிஸ் நிலை இது. அதுவும், மருந்து, உணவு, தூக்கமெல்லாம் மிகச்சிறப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த வீட்டுக்குள் அதெல்லாம் சாத்தியமே இல்லை. ஒவ்வொரு நாளும் அதிகாலை 3, 4 மணிக்குத் தூங்கப் போய்விட்டு, 9 மணிக்கு எழுந்திருக்கிறார்கள். இதெல்லாம் டயாபடிஸுக்கு நிச்சயம் கூடாது. அதனால், பாண்டி நான் சமாளித்துக்கொள்வேன் என்று அழுது புலம்பினாலும் அவர் மனதைத் தேற்றி வெளியே அனுப்பிவைத்தார்கள். பாண்டி எளிய மருத்துவபரிசோதனைகூட செய்துகொண்டதில்லையா எனவும் இது மாதிரி எளிய சோதனைகளைக்கூட வீட்டுக்குள் போவதற்கு முன்னால் செய்யமாட்டார்களா எனவும் கேள்வி எழத்தான் செய்கிறது.

அடுத்து ஷாதிகா, ஒரு லீடராக 3 பேரை நாமினேஷனுக்கான போட்டிக்கு தேர்வு செய்ய வேண்டும். தன்னிடம் வழ்ம்பிழுத்தாலும், சுவாரசியமான பிளேயர் என்று சொல்லி முனியம்மாவை விட்டுவிட்டு, ராகவை அவர் செலக்ட் செய்ய, எல்லோரும் காண்டாகிவிட்டார்கள். இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் சாந்தசொரூபியான குமரனே கடுப்பாகிக் கத்திவிட்டார். மண்டை குழம்பிப்போய் ஷாதிகாவும் தன் முடிவை மாற்றிக்கொண்டு முனியம்மாவை தேர்ந்தெடுத்தார். பின் ஆளாளுக்கு ஒரு பக்கமாகப் போய் அழுதுகொண்டும், தேற்றிக்கொண்டும் இருந்தார்கள். இன்னும் பிரச்சினையே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் அழுகை! வேண்டியதுதான்.

Puthuyugam
www.puthuyugam.com