பிக்பாஸ் 10 நாள் 1: அட்டென்சன் சீக்கிங் முனியம்மா! #BiggBoss10

அதென்ன இவர்கள் நம்மைச் சித்திரவதை செய்வது? நாம் ஆடியன்ஸை சித்திரவதைச் செய்வோம்! என்று முதல் நாளே, ராகவும், வினோத்தும் மிமிக்ரி எனும் பெயரில் நம்மை சித்திரவதை செய்யத்தொடங்கினார்கள்.
BB10 -Day 1
BB10 -Day 1Jiohotstar
Published on

எடுத்தவுடனேயே, ’எங்களது 24*7 ஆடியன்ஸ் நீங்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் நைட் ஸ்டார்ஸ் என்று இரண்டு ஆடுகள் தாமாக முன்வந்து தூங்காமல், விடியவிடிய அவர்களுக்காக ஏதாவது பர்ஃபாமன்ஸ் செய்து எண்டர்டெயின் செய்ய வேண்டும்’ என்று பிக்பாஸ் ஒரு புதிய விதியை இந்த சீசனில் கொண்டு வந்தார். இது நிச்சயம் மனித வதைச் சட்டத்தின் கீழ் குற்றமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த இரண்டு பேரும் இரவில் தூங்காமல் எண்டர்டெயின் செய்து கொண்டிருந்தால், பகலில் அவர்கள் மற்ற விசயங்களில் கலந்துகொள்ள வேண்டாமா என்ன?! சில நாட்களில் இந்த நைட் ஸ்டார்ஸ் டாஸ்க் சொதப்பலில் முடியும் என்பது நம் கணிப்பு.

அதென்ன இவர்கள் நம்மைச் சித்திரவதை செய்வது? நாம் ஆடியன்ஸை சித்திரவதைச் செய்வோம்! என்று முதல் நாளே, ராகவும், வினோத்தும் மிமிக்ரி எனும் பெயரில் நம்மை சித்திரவதை செய்யத்தொடங்கினார்கள். ராகவ், ஓர் இசைக்கலைஞரும் கூடவாம். மிமிக்ரியையாவது அவர் விட்டுவைக்கலாம். சந்திரபாபு மாதிரி பாடுகிறேன் என்று நம்மைச் சாகடித்தார்.

முதல் நாள் காலையிலேயே ஷாதிகா, அன்சரை தனியே கூட்டிக்கொண்டு போய், ’மத்தவங்க ஏதாச்சும் பர்ஃபார்ம் பண்ணினா, பேசினா அதைக் கவனிக்காம ஊடால போய் உழப்பிவிடுவாயாடா நீ? என்னடா பழக்கம் இது?’ என்று கண்டித்தார். அறிமுக மேடையிலேயே அப்படிச் செய்து விசேவிடம் குட்டு வாங்கிய அன்சர், ஒருநாள் முடிவதற்குள்ளாக அவரது திருவிளையாடலை உள்ளேயும் காண்பித்திருக்கிறார் போலிருக்கிறது.

அடுத்து லிவிங் அறைக்கு வரவைத்து, இந்த சீசனில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் டெமாக்ரசி ரூம் பற்றிய விதிமுறைகளைச் சொன்னார்கள். இம்முறை எல்லாமே ஜனநாயக முறைப்படிதான் நடக்கப்போகிறது என்று பில்டப் செய்துகொண்டார்கள். ஜனநாயகம்? எங்கே? இங்கேயா? சரிதான்! தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து பொதுமக்களும் கூட சட்டசபை நிகழ்ச்சிகளை ஆர்வமாகப் பார்த்து வருவதை நாம் அறிகிறோம். அதனால், அதை உல்டா அடித்து இந்தப் பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது 23-ம் புலிகேசி சாதிச்சண்டை மைதானம் கட்டியது போல, குழுச்சண்டை போடுவதற்காகவே இந்த புதிய அறை கட்டப்பட்டிருக்கிறது. பார்ப்போம், இங்கு என்னவெல்லாம் நடக்கிறதென்று.

அடுத்து கேப்டன் தேர்வு நடந்தது. இம்முறை கேப்டனுக்கு லீடர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாலண்டியராக 5 பேர் முன்வர அவர்களிலிருந்து, மற்றவர்களின் வாக்களிப்பு மூலமாக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கிடையே விளக்கெண்ணெய் மாதிரி ஒரு லீடர் போட்டி நடத்தப்பட்டது. அதில் ஷாதிகா முதல் வாரத்தின் லீடராக ஆனார். வழக்கமான கக்கூஸ் குழு, வாஷிங் குழு, கிளீனிங் குழு, சமையல் குழு போன்ற நான்கு குழுக்களோடு, புதிதாக ஒரு செக்யூரிடி ஆள் என்று குழுக்கள் பிரிக்கப்பட்டன. போலவே இது ஜனநாயக சீசன் என்பதால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பது போல, ஆளும் அணி மற்றும் அதன் குழுக்களோடு, எதிரணி என்றும் 7 பேர் கொண்ட ஒரு குழு வினோத் தலைமையில் அமைக்கப்பட்டது.

BB10 -Day 1
BB10 -Day 1Jiohotstar

ஆளும் அணி பதவியேற்று ஓர் அறிமுக உரை நிகழ்த்துவதற்குள்ளாகவே, அட்டென்சன் சீக்கிங் முனியம்மா, குறுக்கக் குறுக்கப் பேசிக்கொண்டிருந்தார். இப்போதைக்கு மிக அதிக ஸ்ட்ராட்டஜியோடு வந்திருப்பது முனியம்மா மட்டும்தான் என்று தோன்றுகிறது. போதாது என்று, எதிரணி ஜேசன் எழுந்து, ’முனியம்மாவை நீங்கள் பேச அழைக்கவில்லை’ என்று சிங்கியடிக்கவும், அந்தம்மாவுக்கு ஒரே குதூகலம். ஆளும் அணியில் இருந்துகொண்டே காரணமே இல்லாமல் வெளிநடப்பு வேறு செய்தார். வெளிநடப்பு செய்தால் ப்ரொமோவில் வருவோம் என்ற யோசனையில்தான் அவர் அப்படிச் செய்திருக்கிறார். ’இந்த சீசனில் பெரும்பாலும் மென்மையான ஆட்களாகத் தெரிகிறார்கள், பாரு மாதிரி, சாண்ட்ரா மாதிரி ஒரு இடத்தை நமக்காக உருவாக்கிக்கொள்ள வேண்டும்’ என்ற கண்டெண்ட் வெறி முனியம்மாவிடம் தெரிகிறது. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல. பார்க்கலாம்!

அடுத்து இரவு நேர கேளிக்கை ஆடுகளாக சாந்தினி, சாவின்யா இருவரையும் ஷாதிகா தேர்ந்தெடுத்தார். அந்த இருவரும் அதற்கான ஆலோசனையில் இறங்கினார்கள். என்ன செய்தார்கள் என்பதை நாளை பார்ப்போம்.

Puthuyugam
www.puthuyugam.com