

சினிமா ஒரு காட்சி மொழி என்பது நமக்குத் தெரியும். அந்த மொழிக்கும் எழுத்துகள், சொற்கள், வாக்கியங்கள் இருக்கின்றன. ஒரு நடிகர் என்ன பேசுகிறார் என்பதைவிட, கேமரா அவரை எவ்வளவு தூரத்திலிருந்து, எந்தக் கோணத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதே பெரும்பாலும் ஒரு சினிமாவின் உணர்வைத் தீர்மானிக்கிறது. கேமராவின் ஒரு ஃப்ரேம் என்பது ஓர் எழுத்து, ஒரு ஷாட் என்பது ஒரு வார்த்தை அல்லது வாக்கியம், ஒரு சீன் என்பது அத்தியாயம். இதில் ஷாட்ஸ் எனப்படும் வார்த்தைகளையும் அதன் பொருளையும் புரிந்துகொண்டால், ஒரு காட்சியை நாம் இன்னும் ஆழமாகப் படிக்க முடியும்.
கீழே உதாரணங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படங்களில் அவை எந்தெந்த வகையிலான ஷாட்கள் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். அனைத்தும் மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தில் காணப்படும் ஷாட்கள். எவ்வகை உணர்வுகளுக்கு அந்த ஷாட்கள் வைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கேமரா கலை எனும் கடலை, ஒரு துளி அளவு புரிந்து கொள்ள இவை உதவலாம்.
தூரத்தின் அடிப்படையிலான ஷாட்கள் :
ஒரு காட்சி பெரும்பாலும் எஸ்டாப்ளிஷிங் ஷாட்டோடு (Establishing Shot) தொடங்குகிறது. இது நமக்கு எந்த இடத்தில் கதை நடக்கிறது என்று தெரிவிக்கிறது — ஓர் அறை, ஒரு தெரு, ஒரு வீடு, ஒரு நகரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு காட்சியின் ஆரம்பத்திலும், முடிவிலும் இது வரலாம்.
அதற்கு அடுத்து வைட் ஷாட் (Wide Shot). இது Establishing shot-ஐப் போலவே இடத்தைத்தான் காட்டுகிறது. ஆனால், கூடுதல் விவரங்களோடு இன்னும் நெருக்கமாக! இதில் பாத்திரங்களின் முழு உடல் அசைவும் நமக்குத் தெரியும், அந்தக் காட்சியில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் எங்கே நிற்கிறார்கள், என்னென்ன பொருட்கள் அந்த இடத்தில் இருக்கின்றன என்பது உட்பட இன்னும் பலவும் தெளிவாகும்.
அடுத்து மிட் ஷாட். (Mid Shot / Medium Shot) இது ஒரு நடிகரை இடுப்பு வரை காட்டும். இங்கிருந்துதான் dialogue-க்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குகிறது கேமரா — முகபாவம், பேச்சு, உடல்மொழி என மூன்றும் சேர்ந்து கதையைச் சொல்கின்றன. தொடர்ச்சியாக மீடியம் க்ளோஸப்ஸ் (Medium Close-Up) ஒரு நடிகரை மார்பு வரை காட்சிப்படுத்துகிறது. இங்கே உணர்வுப்பூர்வமான முகபாவம், வசனங்கள் இரண்டுமே முக்கியமாகின்றன.
அடுத்து க்ளோஸப் (Close-Up) முகம் மட்டுமே பிரதானமாக அமையும், பெரும்பாலும் முகபாவத்தை மட்டுமே, கைகளின் செயலை மட்டுமே காட்டுவது நோக்கமாக இருக்கும். இதற்கும் அடுத்து எக்ஸ்ட்ரீம் க்ளோஸப் (Extreme Close-Up) ஒரு குறிப்பிட்ட உடல்பாகத்தை மட்டுமே காட்டும். கண்களின் கோபம், அழுகை போன்றவற்றின் உச்சத்தையும் காண்பிக்கும். கைகள் ஒரு துப்பாக்கியை லோட் செய்யும் வேகத்தையும் காட்டும்.
உறவைக் காட்டும் ஷாட்கள் :
Two Shot என்பது இரண்டு பேரை ஒரே frame-க்குள் கொண்டுவரும் ஷாட். (மூன்று பேர் இருந்தால் அது Three Shot அல்லது பலர் இருந்தால் Group Shot என்றும் குறிக்கப்படுகிறது.) இருவருக்கிடையேயான உறவு, பதற்றம், நெருக்கம் — இவற்றை ஒரே frame-ல் காட்ட இது பயன்படுகிறது. காதலன் -காதலி நெருக்கம், ஹீரோ- வில்லன் ஆக்ரோஷமான விவாதம் போன்றவை இப்படி படமாக்கப்படுகின்றன.
ஓடிஎஸ் (OTS -Over-The-Shoulder) ஷாட் — இரண்டு பேர் நேருக்கு நேர் பேசும்போது, ஒருவரின் தோள்பட்டைக்கு மேலாக பின்புறமிருந்து மற்றவரைக் காட்டும் முறை. உரையாடலின் நெருக்கத்தையும், அதே நேரம் இருவருக்கும் இடையேயான தூரத்தையும் ஒரே சமயத்தில் உணர்த்த முடியும் இந்த ஷாட்டில்.
பிஓவி (POV-Point of View) — ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் கண்கள் பார்க்கும் காட்சியை நாம் பார்ப்பதுபோல அமையும் ஷாட் இது. பார்வையாளனை அந்தப் பாத்திரத்தின் இடத்திலேயே நேரடியாக நிறுத்திவிடும் நுணுக்கங்களுள் இதுவும் ஒன்று.
கோணத்தின் அடிப்படையிலான ஷாட்கள் :
டட்ச் ஆங்கிள் (Dutch Angle) எனப்படுவது கேமராவை இடமோ வலமோ சற்று சாய்த்து எடுக்கப்படும் முறை. ஒரு பாத்திரத்தின் அல்லது சூழலின் அசாதாரணத் தன்மையை, மன அழுத்தத்தை, குழப்பத்தை உணர்த்த இது பயன்படுகிறது. கேமரா நேராக இல்லை என்றால், அந்தக் காட்சியின் உலகமும் நேராக இல்லை என்பது அர்த்தம்.
லோ ஆங்கிள் (Low Angle) எனப்படுவது கேமரா, கதாபாத்திரத்தை நேராக அல்லாமல் சற்று கீழிருந்து மேல்நோக்கிப் பார்த்து காட்சிப்படுத்துகிறது. இது அந்தக் கதாபாத்திரத்தை பெரிதாக, அதிகாரம் மிக்கதாக, சக்தி மிக்கவனாகக் காட்டுகிறது. அதுவே ஹை ஆங்கிள் (High Angle) காட்சிகள் மேலிருந்து கீழ்நோக்கி ஒரு கதாபாத்திரத்தைக் காண்பிக்கின்றன. இது கதாபாத்திரத்தைச் சிறியதாக, பலவீனமாக, தனிமையாக, சோகமாகக் காட்ட உதவும் கோணம். இதன் ஒரு extreme வடிவம்தான் டாப் ஆங்கிள் (Top Shot அல்லது Bird's Eye View) கேமரா நேராக 90 டிகிரி கோணத்தில், பாத்திரத்துக்கு மேலிருந்து நேரடியாகப் பார்க்கும் வடிவம். போலவே பாட்டம் ஆங்கிள் (Bottom angle அல்லது Worm’s eye view) லோ ஆங்கிளின் தீவிர வடிவமாக இருக்கிறது.
இந்தக் காட்சியமைப்புகள், காட்சிக்கோணங்கள் என்பவை ஒரு சினிமாவைப் பொருத்தவரை டெக்னிகல் விசயங்கள் மட்டுமே அல்ல, ஓர் இயக்குநரின் ரசனை, திறமை சார்ந்து கையாளப்படுகிற கதைச் சொல்லல் நுணுக்கங்கள். இவற்றைப் பற்றிய அறிவு நம்மை இன்னும் தேர்ந்த சினிமா ரசிகர்களாக, படைப்பாளிகளாக மாற்ற உதவும்.