"என்னைச் சந்திக்க வருவோருக்கு 'கிரீன் கார்டு' போல நாட்டாமை குடும்பம் முத்திரை இருக்கும். இந்த முத்திரை இருந்தால் என்னை எளிதாகச் சந்திக்க முடியும்" இப்படி ஒரு முத்தை உதிர்த்தவர் நடிகர் சரத்குமார்.
நடிகர் சரத்குமார் புலன் விசாரணை படத்தில் அறிமுகமானவர். பத்திரிகையாளராக இருந்து வில்லன் நடிகராக அறிமுகமாகி , கதாநாயகனாகிப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சரத்குமார். தற்போது வரை திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்து வருகிறார். இன்றைய தேதியில் தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர்களில் சரத் முக்கியமானவர்.
பல தமிழ் நடிகர்களையும் போல, சரத்குமாருக்கும் அரசியல் ஆசை தொற்றிக் கொண்டது. இதையடுத்து, கடந்த 1996ம் ஆண்டு நடிகர் சரத்குமார் அரசியலுக்குள் நுழைந்தார். திமுக சார்பில் திருநெல்வேலியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எனினும், 2001ம் ஆண்டு திமுக சரத்குமாரை மாநிலங்களவை எம்.பியாக்கி அழகு பார்த்தது. கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்தில் திமுகவிலிருந்து விலகிக் கொண்டார்.
பின்னர், 2006ம் ஆண்டு அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்தார். 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வி கண்டது. அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, அதிமுகவிலிருந்து ராதிகா விலக்கப்பட்டார். தொடர்ந்து, சரத்குமாரும் அதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார்.
கடந்த 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சி நடிகர் சரத்குமாரால் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தனிக்கட்சி நடத்தி வந்த சரத்குமாரால் எந்த வெற்றியையும் பார்க்க முடியவில்லை. இதையடுத்து, 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தனது மனைவி ராதிகாவின் ஆலோசனையின்படி, பாஜகவில் தனது கட்சியை இணைத்துக் கொண்டார். தற்போது வரை பாரதிய ஜனதா கட்சியில்தான் நடிகர் சரத்குமார் பயணிக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ஆதரவாளர்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில் விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் இளைஞர் போல ஆடையணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் கலந்து கொண்டார். அவரைப் பார்த்தால் 70 வயது ஆனவர் போலவே தெரியவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், " 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்தி கொள்வது நமது அடையாளம். நமது குடும்ப அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைவரும் பச்சை குத்திக்கொள்ள வேண்டும். நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இந்த முத்திரை கிரீன் கார்ட் போன்றது. பச்சை குத்தி கொண்டால், நமது குடும்பம் என்று ஆகிவிடும். கையில் பச்சை குத்தியிருந்தால், என்னை எளிதில் நேரடியாகச் சந்திக்கலாம். ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையுடன் பச்சைகுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நிகழ்ச்சி நடந்த இடத்திலேயே அவரது ஆதரவாளர்கள் பலரும் தங்கள் கைகளில்' நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்தத் தொடங்கினர். நிகழ்ச்சியில் விருந்து மட்டுமல்லாமல் சரத்குமாரின் ஆதரவாளர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. நடிகர் சரத்குமார் நடித்த படங்களில் 'நாட்டாமை 'படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் நாட்டாமையாக இரு வேடங்களில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். இதன் நினைவாகவே, 'நாட்டாமை குடும்பம்' என்று தனது ஆதரவாளர்களை நடிகர் சரத்குமார் பச்சை குத்தக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதேவேளையில், பச்சை குத்துவது உடலுக்கு தீங்கானது என்றும் நடிகர் வடிவேலுவும் முத்துக்காளையும் ஒரு படத்தில்'கம்பெனி முத்திரை' என்று காமெடி செய்வார்களே... அந்த காமெடியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே சரத்குமார், "இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி, பாஜகவில் சேரப்போகிறேன் என்று சொன்னேன்.. அவர் ஓகே சொன்னார்' என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொன்னது கலாய்க்கப்பட்டது போலவே, இந்த கம்பெனி முத்திரையும் கலாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.