நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தை எழுதி இயக்கியும் இருந்தார். அடுத்ததாக இயக்குநர் ஆதித்யா தர் இயக்கித்தில் உருவான துரந்தர் படத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பிரதிபலித்தார். அந்த வரிசையில் நடிகர் மாதவன் நடித்த படம்தான் GDN: Edison of India. இந்தப் படத்தில் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார் மாதவன். இளம் பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கி 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கும் அளவுக்கு உயர்ந்த ஜி.டி.நாயுடுவாகவே படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளதாக படக்குழுவினர் சொல்கிறார்கள். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி இந்த படம் வெளியாகிறது.
குறிப்பாக கோவை மக்கள் இந்தப் படத்தைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், கோவையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஜி.டி. நாயுடு மியூசியத்தை இன்னமும் காணாமலிருப்பது தனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
கோவையில் தெலுங்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜி.டி. நாயுடு, அந்தக் காலத்திலேயே சுதேசிப் பொருட்களை கண்டுபிடித்தும், தயாரித்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். தற்போது, சொல்லப்படும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அந்தக் காலக்கட்டத்திலேயே தனி ஆளாக செய்து காட்டியவர் இவர். இந்தியாவில் தொழில்துறையில் முன்னணி நகரமாக கோவை மாறவும் வித்திட்டவர்.
கடந்த 1920ம் ஆண்டு ஒரே ஒரு பஸ்ஸை வாங்கி, மோட்டார் துறைக்குள் நுழைந்தார். இந்த நிறுவனத்துக்கு யுனெடெட் மோட்டார் சர்வீசஸ் (United Motor Services) என்று பெயர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 280 பஸ்கள் இருந்தன. அந்தளவுக்கு உழைத்தார்.
1930ம் ஆண்டு நியூ எலக்ட்ரிக் கம்பெனி (New Electric Company) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் எலக்ட்ரிக் மோட்டார் தயாரிப்பில் ஈடுபட்டது. மண்ணெண்ணெயில் ஓடும் ஃபேன், மேஜை ரேடியோ என பல வித்தியாசமான கண்டுபிடிப்புகளை ஜி.டி நாயுடு உருவாக்கினார்.
கடந்த 1945ம் ஆண்டு இவரது, முயற்சியின் காரணமாக கோவையில் Arthur Hope Polytechnic College என்ற பாலிடெக்னிக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதுதான், இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி. தற்போது இந்தக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தி வருகிறது. 1974 ம் ஆண்டு, தான் இறக்கும் வரை, இந்த சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார் ஜி.டி.நாயுடு. அவரின், அர்ப்பணிப்புணர்வையும், கண்டுபிடிப்புகளையும் பெருமைப்படுத்தும் விதத்தில்தான் GDN- படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவையில் அவரின் பெயரில் பிரமாண்டமான மேம்பாலமும், ஜி.டி. கார் மியூசியமும் (Ge Dee Car Museum) அமைந்துள்ளன.
விளம்பரத்துறையில் புகழ்பெற்ற இயக்குநரான கிருஷ்ணகுமார் ராமகுமார், இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் மாதவனின் ட்ரைகலர் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தில் மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
ஜி.டி. நாயுடுவைப் பற்றி பள்ளிப் புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் எவ்வளவோ படித்திருக்கிறோம். ஆனால், சினிமா என்கிற மாஸ் மீடியாவில் அவரது வாழ்க்கை வரலாற்றை கூறியிருப்பதால், எளிதாக இளைய தலைமுறையினரிடத்தில் அவரைப்பற்றிய உண்மைகள் மக்களைச் சென்று சேரும் என தாராளமாக நம்பலாம்.