மேட் இன் இந்தியா : டைட்டனின் கதை! #MadeInIndia: A Titan Story

வினய் காமத் எழுதிய டைட்டன் நிறுவனத்தின் வரலாறான, Titan: Inside India's Most Successful Consumer Brand எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனையையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தத் தொடரின் கதை.
 Naseerudin Shaw as JRD Tata & JRD Tata (Right)
Naseerudin Shaw as JRD Tata & JRD Tata (Right)
Published on

1970களின் இறுதியில் ஒருநாள் ஜேஆர்டி டாடாவின் அறையில், ஜேஆர்டிக்கு முன்பாக ஸீ என்பவர் நின்றுகொண்டிருக்கிறார். ஸீ என்று அழைக்கப்படும் ஸெர்க்ஸிஸ் தேசாய் டாடா நிறுவனத்தின் ஊழியர்களுள் ஒருவர். அப்போது ஸீயிடம் இருக்கும் பதற்றத்தை, அவரது முகத்திலும், கைகளிலும் நம்மால் தெளிவாக உணரமுடிகிறது. ஏதாவது தவறு செய்துவிட்டு அவரது பாஸான டாடாவின் முன்பு நின்றுகொண்டிருக்கிறாரா? இல்லை! ஸீ வெறும் ஊழியர் மட்டுமேயல்ல, ஜேஆர்டியின் அன்புக்குரியவர். ஸீக்கு அவர் ஒரு சிறந்த மெண்டாரும் கூட! கொஞ்ச நாட்களுக்கு முன்னால், டாடா பிரஸ் குழுமத்தின் வீழ்ச்சியை ஆராயப்போன ஸீ, இந்தியாவில் ஒரு புதிய ரிஸ்ட் வாட்ச் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உணர்ந்து, ஜேஆர்டியிடம் அதைச் சொல்லி அனுமதியும் வாங்கிவிட்டவர். இப்போது, அதை முறையாகத் தொடங்குவதற்காக டாடா மேலாண்குழுவின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. ’நீங்க வந்து ஒருவார்த்தை பேசிட்டா போதும்’ என்று ஜேஆர்டியை அழைப்பதற்காகத்தான் வந்து நிற்கிறார் ஸீ. ஆனால், அடுத்த அறையில் நடக்கவிருக்கும் அந்த மீட்டிங்குக்கு ஜேஆர்டியும் வந்துவிட்டால், அங்கே என்ன விவாதம் நடக்கமுடியும்? அவர் விருப்பமே ஒரு நொடியில் எல்லாவற்றையும் முடிவு செய்துவிடும். அதனால்தான் அவர் ’நான் வரவில்லை, நீயே போய்ப்பேசு’ என்று ஸீயைப் பார்த்துச் சொல்கிறார். அதற்குத்தான் ஸீயிடம் அந்தப் பதற்றம். ஜேஆர்டி, ஸீயைப் பார்த்துச் சிரிக்கிறார். அத்தனை அழகான ஒரு காட்சி அது!

ஒரு புதிய தொழில், தொழிற்சாலை என்பது கோடிகள் முதலீடாகப்போகும் ஒரு பெரிய காரியம். அரசு அனுமதி, கொலாபரேஷன்ஸ், வங்கி முதலீடு, தொழிற்சாலை அமைப்பு, தொழில்நுட்பம், வடிவமைப்பு, ஊழியர் சேர்ப்பு, உற்பத்தி, மார்க்கெடிங், போட்டிகள், மக்கள் தொடர்பு என்று எத்தனைச் சிக்கல்களை அது கொண்டுவரப்போகிறது என்பது ஜேஆர்டிக்கு மிக நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு பிராஜக்டின் முதன்மைப் பொறுப்பாளர், தான் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாண்குழுவையே சமாளிக்க முடியாவிட்டால், மற்றதையெல்லாம் எப்படிச் சமாளிக்க முடியும்? அதுதான் ஜேஆர்டியின் அந்தச் சிரிப்புக்கான பொருள்!

1980களின் இறுதி வரை, இந்தியக் கைக்கடிகாரச் சந்தையில் கோலோச்சிக் கொண்டிருந்தது இந்திய அரசு நிறுவனமான எச்.எம்.டி (HMT Limited / Hindustan Machine Tools Limited) யின் கைக்கடிகாரங்கள்தான். மேலும் பெருமளவில் வெளிநாட்டு வாட்சுகள் கள்ளச்சந்தையிலும் கிடைத்தன! எச்.எம்.டியின் வாட்சுகளின் தொழில்நுட்பம் மெக்கானிகல் அடிப்படையிலானது. அதே நேரம் வாட்சுக்கான குவார்ட்ஸ் தொழில்நுட்பம் ஜப்பானில் அறிமுகமாகியிருந்தது. இந்தியச் சந்தையின் வாட்ச் தேவை, ஒரு புதிய தொழில்நுட்பம் இரண்டையும் ஒன்றிணைத்துதான் இப்படியான ஒரு யோசனைக்கே ஸெர்க்ஸிஸ் தேசாய் வந்திருந்தார். அந்தச் சூழ்நிலையில்தான் இந்த 'Made In India: A Titan Story' தொடரின் கதை தொடங்குகிறது. அதன் பின் 6 எபிஸோடுகளில் மிக விறுவிறுப்பாக சென்று, 2002-ல் அப்போதைய உலகின் ஸ்லிம்மெஸ்ட் வாட்ச்சான ‘டைட்டன் எட்ஜ்’ (3.5mm) உருவாக்கத்தில் நிறைவு பெறுகிறது.

ஒருகாலத்தில் கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்க்கும் கருவி. ஆனால், அதை இந்தியர்களின் 'அடையாளமாகவும், ஆபரணமாகவும்' மாற்றிய பெருமை டைட்டனுக்கே உரியது. வினய் காமத் எழுதிய டைட்டன் நிறுவனத்தின் வரலாறான, Titan: Inside India's Most Successful Consumer Brand எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனையையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தத் தொடரின் கதை.

இந்தியாவிலும் உலகத் தரத்திலான கடிகாரங்களை உருவாக்க முடியும் என்ற கனவோடு 'டைட்டனை' உருவாக்கி, அதில் வெற்றியும் கண்ட கதையின் நாயகன் ஸெர்க்ஸிஸ் தேசாய் (Xerxes Desai) வேடத்தில் ஜிம் ஸர்ப் (Jim Sarbh) நடித்திருக்கிறார். பாத்திரத்தை உணர்ந்த மிக நுணுக்கமான நடிப்பு. அரசாங்க உரிமம் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தொடங்கி, தொழிற்சாலை அமைப்பு, நிதி நெருக்கடி, என அத்தனைத் தடைகளையும் தாண்டி, இறுதியில் ஐரோப்பிய முதலீட்டினால் ஏற்பட்ட வீழ்ச்சி வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை ஸீ எதிர்கொண்ட விதத்தை ஜிம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தொடரின் நாயகன் ஸீயாக இருந்தாலும், இன்னொரு முக்கியமான பின்புல கதாபாத்திரம் ஜேஆர்டி டாடாவின் (JRD Tata - Jehangir Ratanji Dadabhoy Tata) பாத்திரம். நஸ்ருதீன் ஷா (Naseeruddin Shah), ஜேஆர்டியாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில், இவர் நிஜமாகவே டாடா குடும்பத்தைச் சேர்ந்த, யாராவது அண்ணன் தம்பியாக இருப்பாரோ எனுமளவுக்கு பொருந்திப் போகிறார்! ஒரு பெரு நிறுவனத்தின் தலைவராக மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக (Mentor), புதிய சிந்தனைகளுக்குத் தோள் கொடுக்கும் ஒரு நண்பனாக அவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பு. நஸ்ருதீன் ஷாவின் சிறு புன்னகை, அமைதியான ஆனால் ஆழமான பார்வைகள் அனைத்தும் ஜே.ஆர்.டி டாடாவை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.

Made in India : A Titan story
Made in India : A Titan story
"தொழில் என்பது லாபம் ஈட்டுவது மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையைப் பெறுவது" என்பது ஜேஆர்டியின் வார்த்தைகள்.

'Made In India: A Titan Story' என்பது வெறும் ஒரு பிராண்டின் வளர்ச்சி பற்றிய சுயசரிதை மட்டுமல்ல; தன்னம்பிக்கை குறைந்திருந்த ஒரு காலத்தில், இந்திய மூளைகளும், இந்திய உழைப்பும் சாதித்துக் காட்டிய பெருமிதத்தின் வரலாறு. 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்று வந்ததால் மக்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை, பல்வேறு துறைகளிலும் இந்தியா எப்படி ஒரு சமூகமாக முன்னோக்கி ஓட உதவியது என்பதை நாமறிவோம். அதற்கொத்த சாதனைதான் இதுவும். நம் கைகளில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் முட்களுக்குப் பின்னால் இத்தனை போராட்டங்களும், தொலைநோக்குப் பார்வைகளும் இருந்திருக்கின்றன என்பதை உணர்த்தும் இந்தத் தொடர், நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சீரிஸ்! அமேசான் பிரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

Edge piece:

அந்த சமயத்தில், பிற மாநிலங்கள் இந்த பிராஜக்டை மறுத்த நிலையில், குறிப்பிட்ட அளவு பங்குகள், மற்றும் முழுமையாக தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற நிபந்தனைகளுடன், தமிழ்நாடு இந்தப் பிராஜக்டை வரவேற்றது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் (TIDCO, Tamilnadu) டாடா இண்டஸ்ட்ரீஸ் கை கோத்தது. 27.88% பங்கு TIDCO வுக்கு என்று ஒப்பந்தமிடப்பட்டது. உதாரணமாக கடந்த 2024ம் நிதியாண்டில் 247 கோடி ரூபாய் லாபத்தின் பங்காக தமிழ்நாட்டுக்கு வழங்கியது டைடன். இன்றைக்கு டைடனின் மதிப்பு சுமார். 87000 கோடி.

TITAN என்ற பெயரே, T-ata I-ndsustries TA-mil N-adu என்பதிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்!

Puthuyugam
www.puthuyugam.com