

ஹரி எனும் காவலதிகாரி டிஎஸ்பி பதவியிலிருந்து இறக்கப்பட்டு, இன்ஸ்பெக்டராக ஒரு ஸ்டேஷனில் பதவியேற்றுக்கொள்ள வருகிறார். மிகச்சீற்றமாக இருக்கிறார். கூடவே ஏதோ பிரச்சினை காரணமாக மருந்து மாத்திரைகளும் அவர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இப்படித்தான் கதை ஆரம்பிக்கிறது. முதல் நாளே ஓர் அரசு பஸ் கண்டக்டர், தன்னிடம் இருந்த தங்கச் சங்கிலியை அடகு வைக்கச் சென்றபோது அது போலி நகையாக மாறியிருப்பதைப் பற்றி புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் சாதாரண மோசடி போலத் தோன்றும் இந்த வழக்கு, பல குற்றச் சம்பவங்களின் பின்னணியை ஹரி கண்டுபிடிக்க வழிவகுக்கிறது. இறுதியில், அந்தச் சம்பவங்கள் அனைத்தும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த பேரிழப்புடன் தொடர்புடையவை என்பது தெரியவருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்குக் கொஞ்சம் காலத்துக்கு முன்புதான், ஒரு போதைமருந்து ஆசாமியைப் பிடித்து வழக்கு போட்டிருப்பார் ஹரி. அவன் அப்போது சில போக்ஸோ கேஸ்களிலும் சம்பந்தப்பட்டவனாக இருப்பது தெரியவரும். அவனிடம் ஹரியின் மகளும் ஒரு விக்டிமாக சிக்கியிருக்கும் செய்தியை அறியவரும் ஹரி, அவனைக் கஸ்டடியிலேயே கொன்றுபோட்டுவிடுகிறார். ஆனால், அந்தக் கேஸ் அத்தோடு முடிந்துவிடவில்லை. அவனுக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள். மிக ஆக்ரோஷமாக அதற்குப் பழி தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள். அதெப்படி ஒரு போக்ஸோ குற்றவாளிக்குப் பெண்கள் உட்பட இத்தனை லாயலான சில நண்பர்கள் இருக்க முடியும் என்று நமக்குத் தோன்றுகிறது. அதற்கான காரணம் உட்பட, அதன் முழு பின்னணியும் தற்போதைய வழக்கு விசாரணையில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு திருப்பமாக வெளிப்பட்டவாறே, கடைசி வரை விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை. வில்லன் குழுவில், ஒரு பெண் போலீஸ் துரத்தலின் போது இறந்துபோவது, இறுதிக்காட்சியில் பிரியாமணியின் வயதான அப்பா உதவுவது என பல எதிர்பாராதக் காட்சிகள் உண்டு.
அரசுப் பேருந்தில் வைத்து நடைபெறும் ஒரு சின்னச்சம்பவம், ஒரு ‘டோமினோ’ விளைவைப்போல பிரம்மாண்டமாக விரிந்துகொண்டே போவது ஒரு சிறந்த திரைக்கதை எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணம். இன்வெஸ்டிகேஷன் திரில்லராகத் தொடங்கும் கதை, பின்னர் ஆக்சன் திரில்லராக மாறுகிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் ’இலவீழா பூஞ்சிறா’ படத்தை எழுதி இயக்கிய ஷாகி கபிர். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் ஜீத்து அஷ்ரப். வேலையைப் பார்த்தால் அறிமுக இயக்குநர் போலத் தெரியவில்லை. திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை என நான்கு முக்கியமான டெக்னிகல் அம்சங்களும் ஒத்திசைந்து இயங்கி, ஒரு பரபரப்பான அனுபவத்தைக் கச்சிதமாகத் தந்திருக்கிறார்கள்.
குஞ்சாக்கோ போபன், பிரியாமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மென்மையான காதல் படங்களில் நமக்கு அறிமுகமான போபன் இப்போது இண்டென்ஸிவான கதைக்களங்களில் அதுவும் கிரைம், இன்வெஸ்டிகேஷன், ஆக்சன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதற்கு நியாயமும் செய்கிறார். இந்த ஆபீஃஸர் ஆன் டியூட்டி, திரில்லர் விரும்பிகளை நிச்சயம் ஏமாற்றமாட்டார். வீக்கெண்ட் பார்வைக்கு மிக ஏற்றது. நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.