கதைகளோடு விளையாடும் ஊடகங்கள்! #MicroDrama #VerticalDrama

கதைகள் மனிதனின் ஆதாரத் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். காலம் காலமாக, இந்த மனிதச் சமூகத்தில் செவி வழியாகக் கதைகள் வாழ்ந்தன. பின்னர் புத்தகங்களின் வழியே கதைகளைப் படித்தோம். அதன் பின்னர் சினிமா வந்தது. இப்போது...
கதைகளோடு விளையாடும் ஊடகங்கள்! #MicroDrama #VerticalDrama
Published on

ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தட்கா (Tadka) என்றொரு பகுதி சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தற்செயலாக விரல்பட்டு அதற்குள் போனதால், ஒரு விடியோவைக் கிளிக் செய்து பார்த்தேன். அது ஓர் இரண்டு நிமிட எபிசோடு. ஒரு கல்லூரி வளாகத்தில் கையில் ஊன்று கோலுடன் மாணவி ஒருத்தி வருகிறாள். அவளது ஊன்றுகோலைத் தட்டிவிட்டு அவளைத் தரையில் தள்ளிச் சிரிக்கிறார்கள் மூன்று மாணவிகள். கூடவே கத்தலான வசனம் வேறு, ”எங்களைப் போன்ற உயர் வர்க்கத்தினர் படிக்கும் இந்தக் காலேஜுக்குள் வருவதற்கே உனக்கெல்லாம் தகுதி கிடையாது. போ வெளியே”! ஆஹா, ஏதோ கதையின் நடுவிலுள்ள எபிசோடைத் தொட்டுவிட்டோம் போலிருக்கிறது என்று எண்ணி சோதித்துப் பார்த்தால், அப்படியில்லை. அதுதான் அந்தத் தொடரின் முதல் எபிசோடு. அப்படித்தான் அது தொடங்குகிறது. இவைதான் மைக்ரோ டிராமாக்கள் எனப்படுகின்றன.

கதைகள் மனிதனின் ஆதாரத் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். காலம் காலமாக, இந்த மனிதச் சமூகத்தில் செவி வழியாகக் கதைகள் வாழ்ந்தன. பின்னர் புத்தகங்களின் வழியே கதைகளைப் படித்தோம். அதன் பின்னர் சினிமா வந்தது. இப்போது, தொலைக்காட்சி, இணையம், ஸ்மார்ட்போன் என புதிய புதிய ஊடகங்கள் வழியே கதைகள் பயணிக்கின்றன. ஆனால், செம்புலப்பெயல் நீர் போல, கதைகள் சொல்லப்படும் ஊடகத்தைப் பொறுத்து, கதைகளின் தன்மையும் மாறிப்போவதை நாம் உணரமுடிகிறது. 

இந்த மாற்றம், தாண்டிச்செல்லும் வகையில் அத்தனை சாதாரணமானதாக இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. இதனால் கதையின் வடிவம், வேகம், கதாபாத்திரங்களின் தன்மை, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு, படைப்பாளியின் சுதந்திரம் என எல்லாமே சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றன. கதை சொல்லும் ஊடகங்களை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அவை எவ்வாறு கதையோடு விளையாடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சினிமா:

சினிமா இன்னும் இயக்குநரின் ஊடகமாகவே இருக்கிறது. ஒரு கதையை அதிகபட்சமாக மூன்று மணி நேரத்திற்குள் சொல்ல முயல்கிறது சினிமா. கதையின் தொடக்கம், வளர்ச்சி, உச்சக்கட்டம், முடிவு ஆகிய அனைத்தும் முழுமையாக ஒரே அனுபவமாக அமைய வேண்டும் என்பதே சினிமாவின் நோக்கம். இதனால், ஒவ்வொரு வரியும் மிக முக்கியமானது எனும் தன்மையோடு அமையும் சிறுகதையைப் போல, சினிமாவில் ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாகக் கதையை முன்னோக்கி நகர்த்த வேண்டியது அவசியம். தேவையற்ற காட்சிகள் படத்தின் பலவீனமாகிவிடுகின்றன.

தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்:

ஆனால், தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் நோக்கம் வேறு. அது ஒரு கதையைச் சொல்வதைவிட, பார்வையாளரை தினமும் அதே நேரத்தில் மீண்டும் தொலைக்காட்சியின் முன் அமர வைப்பதையே முதன்மை நோக்கமாகக் கருதுகிறது. அதனால், கதையின் இயல்பான வேகம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. 280 நாட்கள்தான் மனிதனின் கர்ப்பகாலம். ஆனால், ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கிறாள் எனும் நிகழ்வையே 560 எபிசோடுகளுக்குக் காண்பிக்கிறார்கள். ஒரே நிகழ்வுக்கு, ஒரே வசனத்துக்கு வெவ்வேறு கதாபாத்திரங்களின் முகபாவனைகள், பின்னணி இசை, ஃப்ளாஷ்பேக்குகள், மெதுவான நடை போன்ற உத்திகளால் நிரப்புகிறார்கள். சினிமாவில் கூறியது கூறல் அறவே கூடாது என்று நாம் நினைக்கும் நிலை, சீரியலைப் பொறுத்தவரை முற்றிலும் மாறாக இருக்கிறது. ஒரே விசயத்தை நாட்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களது பார்வையாளர்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே அரைக்கவனமாக இருப்பார்கள். அவர்களுக்குக் கதை மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டிய அவசியமிருக்கிறது என்கிறார்கள் இதன் படைப்பாளிகள்.

வெப்சீரிஸ்:

இதற்கு நேரெதிராக நிற்பது வெப் சீரிஸ். தொலைக்காட்சியின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, படைப்பாளிகளுக்கு ஒரு புதிய சுதந்திரம் கிடைக்கிறது. சினிமாவின் மூன்று மணி நேரக் கட்டுப்பாடும் இங்கே கிடையாது. ஒரு சீசன் ஆறு எபிசோடுகளாக இருக்கலாம்; பத்து எபிசோடுகளாகவும் இருக்கலாம். ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடமாக இருக்கலாம்; 70 நிமிடமாகவும் இருக்கலாம். கட்டாயமான விளம்பர இடைவேளைகளும் இல்லை. அதனால், கதையின் தேவைக்கேற்ப எபிசோடுகள் அமைக்கப்படுகின்றன. கதாபாத்திரங்களை மெதுவாக வளர்ப்பதற்கும், துணைக் கதைகளுக்குள் சென்று வரவும் அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாவலுக்கு நெருக்கமான அனுபவத்தை வெப் சீரிஸ்கள் உருவாக்குகின்றன. ஆனால், வலுக்கட்டாயமாக அடுத்தடுத்த சீசன் எனும் வியாபார அழுத்தம் இங்கே இருக்கிறது. கூடவே தணிக்கையற்ற தன்மையால், பாலுறவுக்காட்சிகள், தகாத வார்த்தைகளின் திணிப்பு ஆகியவற்றையும் காண்கிறோம். 

மைக்ரோ டிராமா:

கடந்த சில ஆண்டுகளில் உருவாகியிருக்கும் புதிய வடிவமான இந்த மைக்ரோ டிராமா அல்லது வெர்டிகல் டிராமா மனிதர்களின் எஞ்சிய நேரத்தை விழுங்குவதற்காகவே வடிவெடுத்திருக்கிறது. இங்கே கதையின் மையம் திரைக்கதை அல்ல; கருவி! அதாவது ஸ்மார்ட்போன். ரீல்ஸ் பார்க்கும் பார்வையாளர்களை இழுப்பது நோக்கம். ஒவ்வொரு எபிசோடும் அடுத்த எபிசோடைக் கிளிக் செய்யும் தூண்டுதலை உருவாக்க வேண்டும். அதனால், ஒரு மணி நேரக் கதையே, 2 நிமிடமே ஓடக்கூடிய முப்பது சிறிய பகுதிகளாக வெட்டப்படுகிறது. இதனால் கதைகளின் மென்மையான நுணுக்கங்களை (Nuances) இழந்து மிகையான உணர்ச்சிகளோடு இவை இருக்கின்றன. தொலைக்காட்சி சீரியல்கள் ஒரு சிறிய நிகழ்வை அளவுக்கு மீறி நீட்டிக்கின்றன என்றால், மைக்ரோ டிராமாக்கள் ஒரு கதையை அளவுக்கு மீறி சுருக்குகின்றன. எல்லாவற்றிலும் கதையின் தேவையைவிட, ஊடகத்தின் வணிகத் தேவையே மேலோங்கி நிற்கிறது. இதனால் பாதிக்கப்படுவது கதை!

இவை அனைத்தும் அடிப்படையாகக் கதைகளைச் சொல்ல முயன்றாலும், ஒவ்வொன்றின் நோக்கமும், கதை சொல்லும் விதமும் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. இதனால் கதைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஒன்றின் கதை இன்னொன்றுக்குப் பொருந்தாது என்ற அடிப்படையை நாம் உணரவேண்டும். இந்த ஊடகங்களின் தன்மையை, வேறுபாடுகளைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு எந்தக் கதைகள் எந்த ஊடகத்துக்குப் பொருத்தமானது என்பதை உணர்ந்து, அவற்றுக்கேற்ப உருவாக்க வேண்டும். அதுவே இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வாக அமையும்.

Puthuyugam
www.puthuyugam.com