ஷீப் டிடெக்டிவ்ஸ் #SheepDetectives #WeekendWatch

Sheep Detectives
Sheep Detectives
Published on

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஆட்டிறைச்சிக்கூடம் ஒன்று வருகிறது. கத்தி, வெட்டு, ரத்தம் எதுவும் காட்டப்படவில்லை. நமக்கு அது ஒரு சாதாரண இடம்தான். ஆனால், ஆடுகள் கம்பளிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன என்று நம்பும் இரண்டு செம்மறி ஆடுகள் அந்த இடத்துக்குள் போனால், அது எப்படி இருக்கும்? அந்த ஆடுகளுக்கு அது நிச்சயமாய் ஒரு நைட்மேர்தான். அந்த உணர்வு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

டென்ப்ரூக் எனும் கிராமத்தில், செம்மறி ஆடுகள் மீது மிகவும் ஈர்ப்பும், அன்பும் கொண்ட ஜார்ஜ் ஹார்டி என்பவன் ஒரு பண்ணை வைத்திருக்கிறான். அவற்றை அன்போடு பராமரிப்பது மட்டுமல்லாது, தினமும் மாலை நேரங்களில் அவற்றுக்கு கொலை மர்மக் கதைகளை வாசித்துக் காட்டுகிறான். அவையும் அதில் மிகுந்த ஈடுபாடு காண்பிக்கின்றன. மரணம் என்பது கதைகளில் மட்டுமே நடக்கும் ஒன்று என்றும், இறப்புக்குப் பதிலாக தாங்கள் மேகங்களாக மாறிவிடுவோம் என்றும் அவை நம்புகின்றன. ஜார்ஜ் அவற்றைக் கம்பளிக்காக மட்டுமே வளர்க்கிறான். அதனால், உலகின் எல்லா ஆடுகளுமே இப்படியொரு அழகான வாழ்க்கையைத்தான் வாழ்கின்றன என்று நம்புகின்றன.

ஒருநாள் ஜார்ஜ் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறான். காவல்துறை விசாரணை ஒருபுறம் தொடங்கினாலும், ஜார்ஜின் இழப்பைத் தாங்க முடியாத ஆடுகளும் தாங்களாகவே கொலையாளியைக் கண்டுபிடிக்க முடிவெடுக்கின்றன. புத்திசாலியான லில்லி, எதையும் மறக்காத மோப்பிள், தனிமை விரும்பி செபாஸ்டியன் ஆகிய ஆடுகள் இந்த விசாரணையை முன்னின்று கொண்டு செலுத்துகின்றன. ஜார்ஜின் உயிலில், அவர் ஒரு கோடீஸ்வரர் என்பதும், அவரது சொத்துகள் அமெரிக்காவிலிருந்து வந்த மகள் ரெபெக்காவுக்கு எழுதப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. இதனால் ரெபெக்கா மீது சந்தேகம் விழுகிறது. சில ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுகிறார். பிறகு என்னவாயிற்று, உண்மையான குற்றவாளி கிடைத்தானா என்பது கதை.

ஜார்ஜாக, ஹ்யூ ஜாக்மேன் நடித்திருக்கிறார். தொடக்கத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவு. ஆடுகளின் மறக்கும் தன்மை, அதில் ஒரு ஆடு மட்டும் எதையும் மறக்காமலிருப்பது, தனியே வாழும் செபாஸ்டின் எனும் ஆட்டின் கதை, தனித்துவிடப்பட்ட சின்னஞ்சிறு குட்டி ஆடு என ஒவ்வொரு ஆடுகளும் நம் மனதைக் கவர்கின்றன. நகைச்சுவையாகத் தொடங்கும் இவர்களின் துப்பறியும் பயணம் போகப்போக வேகமெடுக்கிறது. அந்த ஊரின் ஒற்றைப் போலீஸ்காரன், முடிவில் தன்னியல்பிலிருந்து பெருமாற்றம் அடைகிறான். செபாஸ்டினின் தியாகம் மனதை உருக்குகிறது. 

படத்தை இயக்கியிருப்பவர் கைல் பால்டா (Kyle Balda). த்ரீ பேக்ஸ் ஃபுல் (Three Bags Full) எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. நிஜ உலகத்தோடும், நிஜ மனிதர்களோடும், சிஜிஐயில் உருவாக்கப்பட்டுள்ள ஹைப்பர் ரியாலிஸ்டிக் ஆடுகள் இணைக்கப்பட்டுள்ள விதம் தொழில்நுட்ப வியப்பு. ஃப்ரேம்ஸ்டோர் நிறுவனம் இந்தப் படத்தில் விஎஃப்எக்ஸ் வேலைகளைச் செய்திருக்கிறார்கள். டைனோசர், ரோபாட்ஸ் போன்ற நாம் பார்த்திராத சிஜிஐ வேலைகள் எப்போதோ தொடங்கிவிட்டாலும், நிஜ விலங்குகளான யானை, சிங்கம் போன்றவை திரையில், ஃபோட்டோரியலிஸ்டிக் துல்லியமாக வரத்தொடங்கியது 2010-க்குப் பிறகான தி ஜங்கிள் புக் (The Jungle Book -2016), தி லயன் கிங் (The Lion King -2019) போன்ற படங்கள் வாயிலாகத்தான். அந்த லெகசியை இந்தப்படம் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

வாரயிறுதியில் குழந்தைகளோடு நிச்சயம் பார்க்க வேண்டிய படம். அமேசான் ப்ரைம் ஓடிடியில் கிடைக்கிறது. செபாஸ்டின், அந்தக்குட்டி ஆடு, ஜார்ஜ் போன்றோர் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படுவதற்கு அவர்கள் குளிர்காலத்தில் பிறந்தவர்களாகக் காரணம் சொல்லப்படுகிறது. ஆம், உலகெங்கும் மனிதர்களுக்கிடையேயான பாகுபாட்டுக்கான காரணங்கள் இப்படி அர்த்தமில்லாதவையாகத்தான் இருக்கின்றன. 

Puthuyugam
www.puthuyugam.com