மினியன்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் #Minions & Monsters

இதுவரைக்கான அனைத்துப் படங்களிலும் கெவின், ஸ்டூவர்ட், பாப் எனும் மூன்று மினியன்களைத்தான், அவர்கள் குழுவின் முன்னணிக் கதாபாத்திரங்களாக நாம் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அவர்களுக்குப் பதிலாக...
Minions & Monsters
Minions & Monsters
Published on

மினியன்ஸ், முதன்முதலாக திரையில் தோன்றியது 2010ல் வெளியான டெஸ்பிகபிள் மீ (Despicable Me) படத்தில்தான். அந்தப் படத்தின் கதாநாயகன் க்ரு (GRU), ஆனால் அவனொரு சூப்பர் வில்லன்- அவனது அடியாள் படையாக மினியன்ஸ் படை அதில் அறிமுகம் ஆகியிருந்தது. அந்த ஒரே படத்தின் மூலமாக உலகெங்கும் ரசிகர்களைத் தன் வசப்படுத்தின இந்தக் குட்டி மஞ்சள் மினியன்கள். இவர்களின் அழகும் கியூட்னஸும் ஒருபுறம் என்றால், அவர்கள் பேசும் மினியனிஸ் எனப்படும் அவர்களின் பிரத்தியேக மொழிக்கான ரசிகர்கள் என்றே ஒரு தனி கூட்டம் உண்டு!

2010-ல் வெளியான டெஸ்பிகபிள் மீ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டெஸ்பிகபிள் மீ 2 (2013), டெஸ்பிகபிள் மீ 3 (2017), டெஸ்பிகபிள் மீ 4 (2024) ஆகிய படங்களிலும் மினியன்களின் ஆட்சி தொடர்ந்தது. இதற்கு நடுவே தங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஸ்பின் ஆஃப் படங்களிலும் வரத் தொடங்கினார்கள். அப்படி வெளியான முதல் படம் மினியன்ஸ் (2015). இரண்டாவது படம் மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் குரு (2022). அந்த வரிசையின் மூன்றாவது படம்தான் இப்போது வெளியாகியிருக்கும் மினியன்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்! 

ஒரு சினிமா மியூசியத்துக்கு வரும் சின்னக் குழந்தைகளிடம் ஒரு வழிகாட்டி மினியன்ஸின் கதைகளைச் சொல்வதாகத் தொடங்குகிறது இந்தப் படத்தின் கதை. வழக்கம் போல, குருவை அவர்கள் சந்திக்கும் முன்பாக, தாங்கள் சேவை செய்வதற்கான தலைசிறந்த வில்லன்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சொதப்பல் வில்லன்களைத் தாண்டிப் போகும் போது, ஒரு பரபரப்பான வைல்டு வெஸ்ட் காட்சியைக் காண்கிறார்கள். ஒரு வில்லன், பின்னால் பலரும் துரத்திக்கொண்டு வர, கொள்ளையடித்த பணப்பொதியோடு, குதிரையில் சிட்டாகப் பறந்து போகிறான். அதோடு குதிரையிலிருந்து ரயிலிலும் தாவுகிறான். அடாடா, நமக்கொரு மாஸ்டர் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியோடு மினியன்கள் அவனைப் பின் தொடர்கிறார்கள். அதன் பின்தான் தெரியவருகிறது அது ஒரு சினிமா ஷூட்டிங் என்று. 

இதுவரைக்கான அனைத்துப் படங்களிலும் கெவின், ஸ்டூவர்ட், பாப் எனும் மூன்று மினியன்களைத்தான், அவர்கள் குழுவின் முன்னணிக் கதாபாத்திரங்களாக நாம் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அவர்களுக்குப் பதிலாக, ஜேம்ஸ், ஹென்றி, எட் எனும் வேறு மூவர் வருகிறார்கள். அதில் எட், காது கேளாத, வாய் பேசாத மினியனாக வருகிறது. இன்க்ளூஸிவ்னஸின் அடையாளமாக இது செய்யப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் ஒரு கலை விரும்பி. ஷூட்டிங்கில் அவர்களால் ஏற்பட்ட குழப்பத்துக்குப் பின்னர், ஒரு கட்டத்தில் ஒரு மான்ஸ்டர் சினிமாவை உருவாக்க விரும்புகிறது. அதில் நடிப்பதற்காக ஒரு மான்ஸ்டரைத் தேடி அவர்கள் போவதும், அதனால் ஏற்படும் சிக்கல்களும்தான் இந்தப் படத்தின் கதை. அட்டகாசமாக இருந்தது என்பதைத் தனியேவெல்லாம் சொல்லத் தேவையில்லை! சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், ஜார்ஜ் லூகாஸ் போன்றோரை க்யூட்டான கேமியோக்களில் பார்க்கமுடிகிறது. நம் வீட்டிலிருக்கும் குழந்தைகளையும், நமக்குள்ளிருக்கும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்று கண்டுகளிக்க வேண்டிய படம், இந்த மினியன்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்!

Puthuyugam
www.puthuyugam.com