கட்டாகுஸ்தி 2- ஒரு பார்வை

2022-ல் வெளிவந்த கட்டா குஸ்தி பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது?
Gatta Kusthi 2
Gatta Kusthi 2
Published on

கட்டாகுஸ்தி (2022) முதன்மையாக ஒரு காமெடி, பேமிலி டிராமாவாக இருந்தாலும், அதற்குள் சிறிய அளவில் பெண்ணுரிமை பேசிய படமாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக விளையாட்டின் மீதான ஆர்வம் கொண்ட பெண்கள் குடும்பம், கல்யாணம் போன்றவற்றால் எப்படித் தடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பேசியது. சாதாரண வணிகப் படங்களில், வாய்ப்புக் கிடைக்கும்போது இப்படியான கருத்துகளையும் போகிற போக்கில் பேச வேண்டும் என்பதுதான் முக்கியம். இப்போது வெளியாகியுள்ள கட்டா குஸ்தி -2-ம் அதே வேலையைச் சரியாகச் செய்திருக்கிறது. 

வழக்கமாக பார்ட்-2 படங்களுக்கு, முதல் படத்தின் வெற்றியை, மேலும் நெருக்கி அறுவடை செய்வது மட்டும்தான் நோக்கமாக இருப்பதால், இதன் மீது நமக்கு ஒரு பயம் இருந்தது உண்மைதான். அதையும் மீறி படம் சிறப்பானதாக வந்திருக்கிறது எனலாம். முதல் படத்தின் இறுதியில் வீராவும், கீர்த்தியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்குவதாகக் கதை முடியும். அதில் 'உன்னை உன் விருப்பப்படி விளையாட்டு வீராங்கனையாக ஆக்குகிறேன்' என்று வீரா வாக்களிப்பான். அதன் தொடர்ச்சியாகவே இந்தப் படத்தின் கதையும் தொடங்குகிறது. வீராவின் ஆதரவுடன் கீர்த்தி பெரிய அளவில் குஸ்தி விளையாட்டில் சாதித்து ஸ்டேட் சாம்பியனாக இருக்கிறாள். கூடுதலாக ரயில்வேயில் வேலை. இருவரின் காதலுக்கு சாட்சியாக ஒரு அழகான பெண் குழந்தை. வீரா, எந்த ஈகோவுமில்லாத வீட்டுக்கணவனாக, வீட்டு வேலைகள், சமையல் என வாழ்கிறான். மீண்டும் அவர்களுக்குள் ஒரு வில்லனால் புரிதல் சிக்கல் ஏற்பட்டு, டைவர்ஸ் வரை போகிறார்கள். அதைத் தாண்டி இறுதியில் மீண்டும் எப்படி இணைந்தார்கள் என்பது கதை!

முதல் பகுதி ஏனோதானோவென்று போகிறது, இருந்தாலும் போரடிக்கவில்லை. குறிப்பாக வீட்டுக்கணவனாக இருப்பதால் அக்கம்பக்கத்துப் பெண்கள் அவனை மொய்த்தெடுக்கிறார்கள், அதனால் ஆண்கள் பயப்படுகிறார்கள் போன்ற கோபாலா கோபாலா காட்சிகள் சில இருக்கின்றன. ஒரு ஸ்லீவ்லெஸ் மலையாள டீச்சர் வேறு வருகிறார். ஆனால், அவையெல்லாம் குறைவாக, அளவோடு எல்லை மீறாமல் இருந்ததால் நாம் தப்புகிறோம். நிறைய நகைச்சுவைக் காட்சிகளில் சிரிக்க முடிந்தது. இடைவேளைக்குப் பிறகு, குழந்தைப்பாசம், சிரிப்பு, புரிதல் எல்லாம் சரியாக அமைந்திருந்தன. குழந்தை மதிமலரிடம், வீரா கதை சொல்லும் காட்சி மனதைத் தொடுவதாக இருந்தது. நீதிமன்றக் காட்சியில் கீர்த்தியின் வழக்கறிஞர், தன் வாதத்தை எடுத்து வைத்துவிட்டு, ஃப்ளோவில் வீராவுக்குத் தூக்குத் தண்டனை கேட்கும் இடமெல்லாம் வெடிச்சிரிப்பு. போலவே கடைசியில் நடக்கும் குஸ்தியில் யார் ஜெயிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரமுடியாமல் நாம் திணறும்போது, இயக்குநரிடம் இன்னொரு நல்ல ஐடியா இருந்ததும் சிறப்பு.

வீராவாக விஷ்ணு விஷால், கீர்த்தியாக ஐஸ்வர்யா லஷ்மி. இவர்களுடன் கருணாஸ், காளிவெங்கட், முனிஷ்காந்த் என பலரும் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால் மட்டும் நடிப்புக்குப் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது. கதைகள் அவரைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கின்றன. கதைக்கு ஒரு நடிகரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். யோகி பாபு ஒரு காட்சியில் கேமியோதான் செய்திருக்கிறார், அதனால் பயப்பட வேண்டாம். குழந்தையாக வரும் ஸாரா ஸியானா மிக அழகான தேர்வு. அவரது நடிப்பில் கொள்ளை கொள்கிறார். இயக்குநர் செல்லா அய்யாவுவின் கணக்கில் இன்னொரு வெற்றி!

நிச்சயம் பார்க்கலாம்.

Puthuyugam
www.puthuyugam.com