பாளையங்கோட்டைச் சிறையில் இருக்கும் ஒரு கைதியைக் கொலை செய்வதற்காக ஒரு பெரிய கும்பல், காவலர்களைத் தாக்கிவிட்டு சிறைக்குள் அத்துமீறி உள்ளே நுழைகிறது. அந்தக் கும்பலின் முதல் வரிசையில் நான்கு முகங்கள் தெரிகின்றன. இது முதல் எபிசோடின் தொடக்கக் காட்சி. இதே காட்சிதான் இன்னொரு இடத்திலும் வருகிறது. இரண்டுக்கும் நடுவே, அவர்கள் கொல்ல வந்திருக்கும் கைதியான லிங்கத்தின் கதை விவரிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1980களின் இறுதியில் மிகவும் பிரபலமாக இருந்த ரவுடி லிங்கம். கன்னியாகுமரி லிங்கம் என்ற இந்தப் பெயரைக் கேட்டதுமே 40 வயது கடந்தவர்களுக்கு ஒரு முக்கியமான சம்பவம் நினைவுக்கு வரக்கூடும். அது 1996-ல் பாளையங்கோட்டை சிறையில் நடந்த லிங்கத்தின் கொலைச் சம்பவம். 32 பேர் கொண்ட ஒரு மிகப்பெரிய கும்பல் சிறைக்குள் புகுந்து காவலர்களைத் தாக்கி விட்டு, சிறையில் இருந்த லிங்கத்தைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. ஓர் ஆளைக் கொலை செய்வதற்காக அவன் வெளியே வரும் வரை கூட காத்திருக்காமல், ஒரு சிறைச்சாலையையே தகர்த்து, அதுவும் அத்தனை பேர் ஒன்றிணைந்து இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால், அந்த லிங்கம் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்பதுதான் நம் முன்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடித்தான் இந்தக் கதை தொடங்கி, விரிகிறது.
கதையின் இந்த முதல் சீசன் பெரும்பாலும் 1989 மற்றும் தொடரும் சில ஆண்டுகளில் நடக்கிறது. லிங்கம் எனும் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். காவல்துறையில் சேர்ந்து பணிபுரிவதற்கான முயற்சிகளில் இருக்கிறான். அடிப்படையில் சக இளைஞர்களைப் படிப்பு, அரசு வேலை, கபடி விளையாட்டு என்று நல்ல திசைகளை நோக்கிச் செலுத்தக் கூடியவனாக இருக்கிறான். உள்ளூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் செல்லப்பாண்டி, சாமியப்பன் எனும் இருவர் தலைமையிலான இருபெரும் குழுக்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் பூசல்! அவர்களுக்கு நடுவே ஒரு வக்கீல் துரை. அவரின் அன்புக்கும், அவரது தம்பி திருவின் அன்புக்கும் பாத்திரமாக இருக்கிறான் லிங்கம். ஒருநாள் அவன் செய்யாத ஒரு கொலைப்பழி அவன் மீது விழுகிறது. அந்த ஒரு சம்பவமே, நிற்காத குற்ற எந்திரத்துக்குள் அவனை எப்படி இழுத்துச் செல்கிறது என்று விவரிக்கிறது தொடர்.
முதல் காட்சியில் லிங்கத்தைக் கொல்லச் சிறைக்குள் புகும் நபர்களில் ஒருவரின் முகம் நமக்கு ஓரளவுக்குத் தெரிகிறது. மற்றவர்கள் யாரென்று தெரியவில்லை. அந்த ஒருவரைத் தவிர, பிறருக்குக் கதையோடு என்ன தொடர்பு என்பது விவரிக்கப்படவில்லை. அடுத்த சீசனில் இடம்பெறலாம்.
சில படங்களில் பிளாஷ்பேக்கில் நாஸ்டால்ஜி உணர்வை கச்சிதமாக ஏற்படுத்துவார்கள். ஆனால், இந்த முழுத் தொடரும், என்னவோ 1989-ல் எடுக்கப்பட்டு இப்போதுதான் ரிலீஸ் செய்யப்படுகிறதோ என்று நினைக்குமளவுக்கு முழுமையாக அந்தக் காலகட்டத்தின் வாசனையை நினைவூட்டுகிறது. ஒளிப்பதிவு, கலை இயக்கம் இரண்டும் அந்தளவுக்குத் தரமானதாக இருக்கிறது. நடிகர்கள் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல ஒரு கொடுங்கோன்மையான ஆளாக மாறும் லிங்கம் பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் கதிர். ஷாகிர், போஸ் வெங்கட், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி எனப்பலரும் நடித்திருக்கின்றனர். நடிகர் ஆர்யாவின் தம்பி ஷாகிரை ஏற்கனவே நாம் அமரகாவியம் படத்தில் பார்த்த ஞாபகம். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கிறார்.
கதை நகரும் ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டணிகள் மாறுகின்றன; நம்பிக்கைகள் சிதறுகின்றன; கொலைகள் தொடர்கின்றன.! நிறைய கெட்ட வார்த்தைகள். குழந்தைகள் பார்க்க உகந்தது அல்ல. சில குறைகள் இருந்தாலும் பெரியவர்கள் நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில் வெளியாகியிருக்கிற இந்த லிங்கம் வெப்சீரிஸ் இணையவாசிகளிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எழுத்தாளர் லட்சுமி சரவணகுமாருக்கு இயக்குனராக இது முதல் படைப்பு. ஆனால், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ், குண்டுவெடிப்புகள், பெரிய லொகேஷன்ஸ், பீரியட் எஃபெக்ட்ஸ் என கைதேர்ந்த இயக்குநரைப்போல லிங்கத்தை உருவாக்கியிருக்கிறார். விகடன் டெலிவிஸ்டாஸ் இத்தொடரைத் தயாரித்திருக்கிறது. தமிழ் வெப்சீரிஸ்களுக்கான வரலாறு மிகவும் சிறியதுதான் எனினும், அதில் பிரமாண்டத்திலும், மேக்கிங்கிலும் குறிப்பிடத்தக்க உயரத்தைத் தொட்டிருக்கிறது இத்தொடர் என்று சொல்லலாம். ஜியோஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.