தொட்ட துறைகளிலெல்லாம் வென்ற கலைஞன்.. கே.பாக்யராஜ்!

இருவரின் விருப்பத்தின்படியும் ’ஒரு கைதியின் டைரி’ பாக்யராஜ் இயக்கி, அமிதாப்பச்சன் நடிப்பில் ’ஆக்ரி ரஸ்தா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு பெருவெற்றி பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்தான்.
K Bhagyaraj
K BhagyarajChatGPT AI Image
Published on

தான் ஒரு பிரபலமான இயக்குநரான பிறகும், கே. பாக்யராஜ் திரைக்கதை எழுதிக் கொடுத்து, அவரது குரு பாரதிராஜா இயக்கிய படம் ‘ஒரு கைதியின் டைரி’. பெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்க விரும்புகிறார் அமிதாப்பச்சன். அப்போது பாரதிராஜா, அந்தப் படத்தை இயக்க பாக்யராஜை வடக்கே அனுப்பி வைக்கிறார். ஏற்கனவே 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை ஆகியவற்றின் ஹிந்திப் பதிப்புகளை இயக்கிய அனுபவம் பாரதிராஜாவுக்கு உண்டு. அதனால், தன்னைப் போலவே பாக்யராஜும் வடக்கில் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கம் காரணமாக இருந்திருக்கலாம். அது பாக்யராஜுக்கு முதல் ஹிந்தி படம். இருவரின் விருப்பத்தின்படியும் ’ஒரு கைதியின் டைரி’ பாக்யராஜ் இயக்கி, அமிதாப்பச்சன் நடிப்பில் ’ஆக்ரி ரஸ்தா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு பெருவெற்றி பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்தான்.

கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த ஒரு கைதியின் டைரி படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனான ஓர் அரசியல்வாதி வீரசிவாஜியின் சிலை திறப்பு விழாவில் பேசிக் கொண்டிருப்பார். அந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடு, போலீஸ் அதிகாரியான மகன் ஜேம்ஸின் பொறுப்பில் இருக்கும். ஆனால், அந்த நேரத்தில் அரசியல்வாதியைக் கொல்லப்போவதாக ஜேம்ஸின் தந்தை டேவிட் சூளுரைத்திருப்பார். எல்லோரும் பரபரப்பாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில், ஆடியன்ஸ் உட்பட யாரும் எதிர்பாராத விதமாக வீரசிவாஜியின் மேக்கப்பில் குதிரைச்சிலையில், தானும் ஒரு சிலையாகவே அமர்ந்திருப்பார் டேவிட். ஜேம்ஸ் தந்தை என்றும் பாராமல், அவரைச் சுட்டு வீழ்த்த, தந்தை டேவிட், சூடுபட்டாலும், வில்லனைக் கொல்லும் சபதத்தை நிறைவேற்றிவிட்டு இறந்துபோவார். 

இது நிச்சயமாக கூஸ்பம்ப்ஸ் கிளப்பக்கூடிய ஒரு கிளைமேக்ஸ் காட்சிதான். படமும் மிகப்பெரிய வெற்றிப் படம். இந்த கிளைமாக்ஸ் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது. ஆனால், பாக்யராஜ் எழுதிய ஒரிஜினல் கதையின் கிளைமாக்ஸ் இதுவல்ல, இதை பாரதிராஜா அவருக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ் எழுதிய கதையில், கிளைமேக்ஸில் துப்பாக்கி சூடு பட்ட தந்தை வில்லனை கொல்ல முடியாமல் விழுந்து கிடப்பார். அந்த சமயத்தில், டேவிட் இறந்து போய்விட்டான் எனும் நினைப்பில், வில்லனின் உண்மையான குணம் வெளிப்படும். அதைப் பார்த்து, தான் ஒரு போலீசாகவே இருந்தாலும் இந்த ஆளை நாமே கொன்று விடலாமா என்று ஜேம்ஸ் நினைக்கும் படியான ஒரு ஒரு நிலை ஏற்படும். அந்த நேரத்தில், விழுந்து கிடந்த டேவிட், தலையைத் தூக்கி கையில் இருந்த துப்பாக்கியால் வில்லனைக் கொன்று விட்டு அவரும் இறந்து போவார்.

அதாவது தந்தையின் முடிவு சரிதான் என்று மகன் உணரும் இந்த கூடுதல் முடிவு, ஆக்ரி ரஸ்தாவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கைதியின் டைரியில் அது இருக்காது. ஆக்ரி ரஸ்தாவின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் இயக்குநர், ஹீரோ அமிதாப் பச்சன் என அத்தனை பேருக்கும் பாக்யராஜின் க்ளைமாக்ஸில் எதிர்க்கருத்து இருந்தது. 'கைதியின் டைரி ஹிட் படம், அந்த க்ளைமாக்ஸை ஏன் மாற்ற வேண்டும்?' என்று சொன்னபோதும், தான் நினைத்ததைப் போலவே மாற்றி எடுத்து வெற்றிப்படமாக்கியவர் பாக்யராஜ். அந்த அளவுக்கு அவருக்கு தன் திரைக்கதையின் மீது நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இந்தியாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். 

பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டிருந்த 1980களில் தானும், ஓர் இயக்குனராக தனித்துவமாக வெளிப்பட்டவர் பாக்யராஜ். மேலும் அதுவரை மற்ற இயக்குநர்கள் செய்யத் துணியாத, இன்னொரு காரியத்தையும் அவர் வெற்றிகரமாகச் செய்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக் போன்ற புகழ்பெற்ற இளம் நடிகர்கள் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், பாக்யராஜ் தன்னையும் ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார். தானே இயக்கி நடிக்கும் பலர், அவருக்குப் பின்னால் வந்தாலும் பாக்யராஜைப் போல அதை வெற்றிகரமாகச் சாதித்தவர் இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம்.

கண்ணாடி அணிந்த முகம். அப்பாவியான தோற்றம், கீச்சுக்குரல், சண்டை நடனம் போன்ற விசயங்களில் ஒரு நிறைவின்மை என்பன பலவீனங்களாகப் பார்க்கப்பட்டாலும், அவையே அவரது பலமாகவும் அமைந்தன. அவரது கதைகள் அவருக்காகவே எழுதப்பட்டது போன்ற தனித்துவமான ஃபேமிலி டிராமாக்களாக இருந்தன. எளிய மனிதர்களைப் போன்ற கதாபாத்திரங்களில் அவர் கச்சிதமாகப் பொருந்திப்போனார். காதலன், கணவன் வேடங்களில் அவர் செய்த எல்லை தாண்டாத உறவு நுணுக்கங்கள் ரசனைக்குரியதாக இருந்தன. தமிழகத்தின் பெண்களில் பெரும்பாலானோரை தன் ரசிகர்களாக்கிக் கொண்டார். கணவன், கோபமாக இருக்கும் மனைவியைச் சமாதானப்படுத்த வேண்டுமானால், அல்வா, மல்லிகைப்பூவோடு, பாக்யராஜ் படத்துக்கு இரண்டு டிக்கெட்டுகளும் வாங்கிகொண்டு வருவான் என்று சமகால இலக்கியங்கள் பேசும் அளவுக்கான உயரத்துக்குப் போனார்.

பதினாறு வயதினிலே (உதவி இயக்குநர்), சிகப்பு ரோஜாக்கள் (வசனம்), நிறம் மாறாத பூக்கள் (கதை), புதிய வார்ப்புகள் (திரைக்கதை) என்று தன் பயணத்தை, பாரதிராஜாவோடு தொடங்கிய பாக்யராஜ், இயக்குநராக அறிமுகமான முதல் படம் 1979ல் வெளியான ’சுவரில்லாத சித்திரங்கள்’. அப்போதிருந்து 2000 வரை தொடர்ச்சியாக 20 வருடங்களில் சுமார் 40 படங்களை இயக்கியுள்ளார் பாக்யராஜ். அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக முந்தானை முடிச்சு போன்ற ஒரு கிளாஸிக் கிராமத்துப் படம் இன்னொருவருக்குச் சாத்தியமா என்பதே கேள்விக்குறிதான். இது நம்ம ஆளு போன்ற சாதி வேறுபாடுகளை விவாதிக்கும், விமர்சிக்கும் ஒரு படம் இன்றைய சூழலில் சாத்தியமே இல்லை என்றும் சொல்லிவிட முடியும்!

2010ல் மகன் சாந்தனுவின் நடிப்பில் வெளியான சித்து +2 படமே அவர் இயக்கிய கடைசி படம். அதன் பின்னர் நடிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தி கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தார். தன் படங்கள் மட்டுமல்லாது, திரைத்துறையே  ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கவும், செயல்படவும் கூடிய ஆளாக அவர் இருந்தார் என்று நினைவுகூரப்படுகிறார். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று மட்டுமல்ல இசையமைப்பிலும் புகுந்து பாடல்களை ஹிட்டாக்கியவர் பாக்யராஜ்! முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். தனது குரு பாரதிராஜா மறைந்த சில நாட்களிலேயே, தனது 73வது வயதில் நம்மைப் பிரிந்திருக்கிறார் கே.பாக்யராஜ். தனித்துவமான அவரது படங்களால் என்றைக்கும் நம்மோடிருப்பார்!

Puthuyugam
www.puthuyugam.com