குற்றங்கள் குறைவாக நடக்கிற, ஓர் அழகான மலைப்பாங்கான பகுதியில் இருக்கக்கூடிய போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ ஆக புதிதாகப் பணி நியமனம் செய்யப்படுகிறான் விஜய் இன்னும் இளைஞன். அந்தப் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கக்கூடிய பிற போலீஸ்காரர்கள் அத்தனை பேரும் அவனை இயல்பாக வரவேற்கிறார்கள். அழகான ஒரு பெண் கான்ஸ்டபிள் அவனை சைட் அடிக்கிறார். தொடக்கக் காட்சிகளில் விஜய் மிடுக்கான யூனிபார்மில் தன்னையே பார்த்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறான். அனைவரிடமும் அன்போடும், மரியாதையோடும் பழகுகிறான் இதெல்லாம் பார்ப்பதற்கே இதமாக இருந்தன. ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதைக்கு, இப்படி ஓர் இதமான போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை நாம் இன்னொரு படத்தில் பார்த்திருக்க முடியாது. இயக்குநர் ஏதோ ரசனையான ஆள் போலிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆன, சிதைந்து போன ஓர் உடல் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து ஆனமலை ஃபினான்ஸ் எனும் ஒரு நிதி நிறுவனத்தில் கொள்ளை நடக்கிறது. அதன் பின் மேலும் சில கொல்லப்பட்ட உடல்கள் கிடைக்கின்றன என்று கதை சூடு பிடிக்கிறது. சரியான துப்பு கிடைக்காமல் விஜய் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிறான். ஏற்கனவே இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில், அவன் உதவிக் கண்காணிப்பாளருக்கு ரிப்போர்ட் செய்து கொண்டிருக்கிறான். இந்த நிலை, இந்த கேஸில் திணறிக் கொண்டிருக்கும் அவனுக்கு அனுபவம் இல்லாதவன், திறமை இல்லாதவன் எனும் அவப்பெயர்கள் ஏற்படக்கூடிய இக்கட்டான சூழலாக மாறுகிறது. தீவிரமான ஒரு புலனாய்வில் இறங்கும் விஜய், கொலைக்கானக் காரணங்களைக் கண்டுபிடித்தானா, கொலையாளிகளை கண்டுபிடித்தானா என்பது கதை!
கிரைம் இன்வெஸ்டிகேஷன் ஜானர் படங்கள், குறிப்பாக யார் கொலையாளி வகை ஹூடனிட் (whodunnit) படங்கள், நாம் பார்த்துச் சலித்துபோன ஒரு வகைமை! ஆனாலும், அதில் இன்னும் புதுமையாக சொல்லப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருந்தது. கும்பளங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ் படங்களில் நடித்த ஷேன் நிகம், விஜயாக தனி ஹீரோவாக நடித்திருக்கிறார். சிறப்பான நடிப்பு. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமதமாக இருந்தது. ஷோபி திலகன், சானியா ஃபாத்திமா, தினேஷ் பிரபாகர் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பாடல்கள், காமெடி, காதல் என எந்த எக்ஸ்ட்ரா லக்கேஜும் இல்லாமல், எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயமாக விறுவிறுவென ஓடி முடிகிறது படம்! ஜித்து ஜோஸப்பின் உதவியாளர், மார்ட்டின் ஜோஸப் இயக்கியிருக்கிறார். திரைக்கதை அமைப்பு ஜோமன் ஜான், லிண்டன் தேவஸியா. உன்னிகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப்பிடிக்கிறது. மலையாள மூலமான இப்படம், தமிழாக்கத்தோடு ஜியோஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. நிச்சயம் பார்க்கலாம்.