நக்சலைட் ஆக முயன்ற பவன் கல்யாண்; சீரஞ்சீவி செய்த காரியம்!

'உன் அண்ணணாக சிரஞ்சீவியாக இல்லாவிட்டால், குடும்பப் பொறுப்புகள் உனக்கு இருந்திருந்தால் உன் சம்பளத்தையும் கடின உழைப்பையும் நம்பி யாராவது இருந்தால், நீ இது போன்ற காரியத்தைச் செய்ய முடிவு செய்திருப்பாயா? '
Pawan Kalyan
Pawan Kalyan
Published on

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரர். சீரஞ்சீவிக்கு ஆந்திர அரசியலில் கிடைக்காத வெற்றி பவன் கல்யாணுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஏஎன்ஐ (ANI) நிறுவனத்தின் பாட்காஸ்டில் பங்கேற்ற பவன் கல்யாண், தான் நக்ஸலைட் ஆக மாற ஆசைப்பட்டதாகவும், ஆனால், தனது சகோதரர் சிரஞ்சீவி அதைத் தடுத்து, தனது மனதை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ ஸ்மிதா பிரகாசுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ''1980-களில் உலகில் நடந்த பல சம்பவங்கள் எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தன. பதின்ம வயதில் இருந்த தான், தென்னாப்பிரிக்க நாட்டின் இனவெறிப் பிரச்னை, தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இலங்கையின் விடுதலைப் புலிகள் இயக்கம், பனிப்போர்ச் சூழலின் தாக்கம், காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் போன்றவை எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்தக் காலக்கட்டத்தில், நான் நக்சலைட் இயக்கத்தில் சேர தீர்மானித்தேன். நான் துப்பாக்கியைக் கையில் எடுக்கவே விரும்பினேன். நக்சலைட்கள் நடத்திய சில கூட்டங்களிலும் பங்கேற்றேன். எனது, சகோதரர் சிரஞ்சீவிக்கும் இதுபற்றித் தெரிய வந்தது. ஒரு நாள், என்னிடத்தில் அமைதியாக அவர் பேசினார். 'இத்தகைய ஆவேசம் எங்கிருந்து வருகிறது?' என்று அவர் என்னிடத்தில் கேட்டார். 'நான் அநீதிக்கு எதிராகப் பேசுகிறேன்; நாம் இதையெல்லாம் செய்ய வேண்டும்' என்று பதில் சொன்னேன். எனது உறுதியைக் கண்டு அவர், என்னைப் பற்றி மிகவும் கவலைப்படத் தொடங்கினார். எனது, 17 முதல் 21 வயது வரை அந்த மனநிலையே எனக்குள் இருந்தது. அதுதான் அத்தகைய செயல்களில் ஈடுபடத் தூண்டும் வயது.

Pawan Kalyan and Chiranjeevi
Pawan Kalyan and Chiranjeevi

அந்த சமயத்தில், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். எனவே, இந்தத் தருணத்தில், துப்பாக்கியை கையில் எடுப்பதுதான் தீர்வாக இருக்கும் என்றும் கருதினேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாத இடங்களில், மாணவர்களுடன் இணைந்து நடத்தப்படும் 'ஜன சபைகளில்' பங்கேற்றேன். குறும்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ஆவணப்படங்களை உருவாக்கவும் மும்பைக்கும் சென்றேன். அவற்றில், எதிலுமே நான் திருப்தி அடையவில்லை. எனக்குள் ஒரு தேக்கநிலையும் கோபமும் இருந்தது.

அப்போதுதான் என் அண்ணன் என்னிடம் பேசினார். அவர் ஒரே ஒரு விஷயத்தை என்னை பார்த்து கேட்டார் 'உன் அண்ணணாக சிரஞ்சீவி இல்லாவிட்டால், குடும்பப் பொறுப்புகள் உனக்கு இருந்திருந்தால் உன் சம்பளத்தையும் கடின உழைப்பையும் நம்பி யாராவது இருந்தால், நீ இது போன்ற காரியத்தைச் செய்ய முடிவு செய்திருப்பாயா? ' என்று என்னிடத்தில் கேட்டார். என்னால் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. என்னிடம் பதில் இல்லை. நான் அமைதியாக இருந்துவிட்டேன். பின்னர், ஆன்மீகம் பக்கம் என்னை திருப்பினேன். தொடர்ந்து, நடிப்புப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்'' என்று கூறியுள்ளார்.

1996-ம் ஆண்டு பவன்கல்யாண் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' படத்தின் மூலம் கல்யாண் பாபுவாகத் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்தே 1998ம் ஆண்டு வெளியான 'தொலி பிரேமா' படம்தான் அவரது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சமீப காலகட்டத்தில் 'ஹரி ஹர வீர மல்லு', 'தே கால் ஹிம் ஓஜி' மற்றும் 'உஸ்தாத் பகத் சிங்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது சுரேந்தர் ரெட்டி இயக்கும், பெயரிடப்படாத ஒரு படத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் தகவல் உள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com