எந்த ஒரு விஷயத்திலும் உருவாகும் நல்ல மாற்றத்தை நம்மால் மிக எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். ஓர் உணவின் முதல் கவளத்தை வாயில் வைத்த உடனேயே தெரிந்துபோய்விடும், இது ஓர் அற்புதமான உணவு. இதன் சுவை எப்போதோ, எங்கேயோ நாம் உணர்ந்த அந்த அசாத்தியமான நினைவை மீண்டும் தூண்டிவிடுகிறது. இது சரியான பொருட்களைக் கொண்டு, ஒரு சமையல் வல்லுநரால், ஆரோக்கியமான முறையில் கவனத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொள்வதற்கு நாம் சமையல் வல்லுநராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 1977ல், தமிழ்நாட்டின் டூரிங் டாக்கீஸ்களில் 16 வயதினிலே படத்தைப் பார்த்து கொண்டாடிய ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அப்படியான உணர்வுதான் இருந்திருக்கும்.
தொடக்கத்தில் புராணப் படங்களையும், ராஜா ராணி கதைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 1950-க்குப் பிறகு சினிமாவின் வடிவமும், சொல்லப்படும் கதைகளும் பெரிய மாற்றத்துக்குள்ளாயின. சமூகச் சிந்தனையோடு கூடிய சமகாலக் கதைகளை சினிமாக்கள் பேசின. ஆனால், அவை நல்ல கருத்துகளோடு இருந்தாலும், நம்முடையதான கதைகள் எனும் உணர்வைத் தரவில்லை, எங்கோ யாருக்கோ நடப்பவை எனும் எண்ணத்தையும், புத்தகங்களில் பாடங்களைப் படிப்பதைப்போன்ற உணர்வையும்தான் கொடுத்துக்கொண்டிருந்தன. அதைப் புரட்டிப்போட ஒரு பாரதிராஜாதான் வரவேண்டியிருந்தது.
வெய்யிலில், காடுகழனிகளில், கடுமையாக உழைத்துவிட்டு வந்து; மாடு, கன்றுகளுக்கு தீனி போட்டு கட்டிவைத்துவிட்டு; பிள்ளைகளைப் பசியாற்றித் தூங்க வைத்து பெரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு; கால்கடுக்க சில கிலோமீட்டர்கள் நடந்தோ, அல்லது கணவனோடு சைக்கிளிலோ, வசதியிருந்தால் குடும்பம் குட்டிகளைக் கூட்டிக்கொண்டு மாட்டுவண்டியிலோ பயணித்து; போகும் வழியிலிருக்கும் அய்யனாருக்காக கன்னத்தில் போட்டுக்கொண்டு; அருகிலிருக்கும் டூரிங் டாக்கீஸுக்குப் போனால், அன்று அது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அதே வெயிலை, அதே காடுகழனிகளை, மாடுகன்றுகளை, தெருவில் விளையாடும் நம் பிள்ளைகளை, மருமகளோடும், பக்கத்து வீடுகளோடும் வம்பு வளர்த்துக்கொண்டிருக்கும் நம் வீட்டுப் பெரிசுகளை, அவர்களுடைய கருப்புசாமியை, மாட்டுவண்டியை, சைக்கிளில் மனைவியை அழைத்துச் செல்லும் கணவன்களை திரையில் நம் பெண்கள் கண்டார்கள். கண்டாங்கிச் சேலை கட்டிக்கொண்டு நாற்று நடும் அவர்களையே அவர்கள் திரையில் பார்த்தார்கள். அந்த உணர்வு எப்படி இருந்திருக்கும் என்பதை இன்று நாம் உணர்ந்து கொள்வது சிரமம்தான். ரோஜா, காதலன் போன்ற ஆல்பங்களோடு ஏஆர். ரகுமான் எனும் ஓர் இசையமைப்பாளர் நம் உலகத்துக்குள் நுழைந்தபோது நாம் எப்படி அங்குமிங்குமாக பதறியபடி, காணாததைக் கண்ட மாதிரி, பித்துப்பிடித்துத் திரிந்தோமோ… அப்படியோர் அனுபவமாக அது இருந்திருக்கலாம்.
சினிமா என்பது கலை. கலை என்பது கேளிக்கை மட்டுமேயல்ல. கலை நம்மைச் செதுக்குகிறது, நம் ரசனைகளை, சிந்தனையை மாற்றியமைக்கிறது. அருகில் வாழ்பவனோடு அன்பைப் பேண, விட்டுக்கொடுக்கக் கற்றுக்கொடுக்கிறது. அதைச் செய்ய வேண்டுமானால், முன்னதாக அது நம்முடையது எனும் உணர்வு ஏற்பட வேண்டும். அதைத்தான் பாரதிராஜாவின் படங்கள் ஏற்படுத்தின.
ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு பணமும், பகட்டுமான ஒரு டாக்டரின் மீது காதல் வருகிறது. அது அசலானது, நியாயமானது. ஆனால், அந்த டாக்டரின் குணமும், சிந்தனையும் சரியில்லை, அவன் தகுதியான மனிதனில்லை என்று தெரியவரும் போது காதலைக் கைவிடுகிறாள். காதல் கைவிடத் தகுந்ததுதான். பணம், பகட்டை விடவும் அன்பும், நம்பிக்கையும்தான் வாழ்க்கைக்கு அவசியமானவை. அதை ஒரு சப்பாணியால் தரமுடியும் என்றால் அவனை ஏற்பதுதான் சரியான முடிவு என்பதை மயிலு மூலமாக காதலுக்கும், திருமண வாழ்க்கைக்கும் எது முக்கியம் என்பதை உணர்த்தினார். ஒரு சின்னச் சீட்டு விளையாட்டு, அதில் சம்பந்தமில்லாத ஒருவனின் சின்ன ஏய்ப்புக்கூட, இன்னொருவனின் வாழ்க்கையில் அவன் வாழ்நாள் முழுமைக்குமான காயத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிடும் எனும் உண்மையைக் கிழக்குச் சீமையிலே படம் சொன்னபோது நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதென்ன இப்படியானதொரு கணவன், மனைவி வாழ்க்கை; எதற்காக இந்த மனிதன் தன் வாழ்க்கையையே இப்படித் தியாகம் செய்திருக்கிறான்? அவனது எளிய ஆசைதான் எத்தனை நியாயமானது என்று ‘முதல் மரியாதை’ நம்மைத் தூங்கவிடாமல் செய்தது. சினிமாவிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். அப்படி தமிழ் சினிமாவை, தமிழர்களுக்கான சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா.
1977ல் திரைத்துறைக்குள் நுழைந்த பாரதிராஜா 1995 வரை பல அற்புதமான படங்களைத் தந்திருக்கிறார். ஆனால், கடைசி வரை ஓய்ந்துவிடாமல் இயங்கியவர். பல நுட்பமான முயற்சிகளைச் செய்தவர். 16 வயதினிலே, புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே போன்ற அற்புதமான கிராமத்துக் கதைகளைத் தந்தவர், அத்தோடில்லாது புதுமைப்பெண், வேதம் புதிது, கருத்தம்மா போன்ற அழுத்தமான சமூகக் கருத்துகள் கொண்ட கதைகளையும் பேசினார். சிகப்பு ரோஜாக்கள், டிக்டிக்டிக், ஒரு கைதியின் டைரி போன்ற திரில்லர் கதைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி, தமிழில் புதிய ஜானர் கதைகள் உருவாக வழிகாட்டினார். கடைசி 20 வருடங்களாக ஒரு நடிகராகவும் நம் மனதைக் கவர்ந்தவர். ஆயுதஎழுத்து, பாண்டியநாடு, குரங்குபொம்மை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் அவரது நடிப்புக்காகக் குறிப்பிடத்தகுந்தவை. மகாராஜா போன்ற படங்களில் வந்த கேமியோ தோற்றங்களில் ஒரு காட்சியில், ஒரு வசனத்தில் கூட வசீகரித்தவர்.
ஓர் இயக்குநராக, ஆலமரத்தைப்போல ஏராளமான கிளைகளை, விழுதுகளைத் தன் திரை வாரிசுகளாக உருவாக்கியவர். மணிவண்ணன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், மனோபாலா போன்றோர் இவரது உதவியாளர்களாக இருந்து பின்னர் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள். அவர்களது உதவியாளர்களைப் பட்டியலிட்டால் அது ஆர்கே.செல்வமணி, விக்ரமன், சுந்தர் சி, சீமான், பாண்டிராஜ், ராசு மதுரவன், எச்.வினோத் என்று நீண்டுகொண்டே போகிறது. கார்த்திக், பாண்டியன், பாக்யராஜ், மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, சந்திரசேகர், ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரதி என நடிகர்களாகவும், நடிகைகளாகவும் இவர் அறிமுகம் செய்த நபர்களின் எண்ணிக்கையும், அதில் சாதித்தவர்கள் எண்ணிக்கையும் மிகப்பெரியது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா போன்ற தமிழ் சினிமாவின் இணையற்ற ஆளுமைகளின் உருவாக்கத்தில் இவருக்கும், இவரின் ஆளுமையில் அவர்களுக்கும் பங்குண்டு.
இயல்பிலேயே மிகவும் உணர்வுப்பூர்வமான மனிதரான பாரதிராஜா, முன்னதாக 2025ல் தன் ஒரே மகன் மனோஜை இழந்த, தாங்க முடியாத வேதனையிலிருந்தார். இதோ அவரும் தனது 84வது வயதில் நம்மை விட்டு நீங்கியிருக்கிறார்.
அவரைப் பற்றிப் பேச எவ்வளவோ இருக்கிறது. ஆனால். அஞ்சலி செலுத்திவிட்டு வந்த இளையராஜா செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கில் சொன்னதுதான் காதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
"பேசறதுக்கு என்ன இருக்கு.. பேசறதுக்கு ஒண்ணும் இல்ல..."
சென்று வாருங்கள் பாரதிராஜா. உங்கள் படங்கள் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பாடங்களாக இருக்கும்!