"ஆணாதிக்கமா... எங்கள் வீட்டிலா?" ராம் சரண் மனைவி Open Talk! #Upasana

ராம்சரண் நடித்து சம்பாதிக்கிறார். ஆனால், உபாசனா பாரம்பரிய தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா, பிரதாப் சி. ரெட்டி அப்பலோ மருத்துவமனையை நிறுவியவர்.
Ram Charan’s wife Upasana Konidela,
Ram Charan’s wife Upasana Konidela,Instagram/upasanakaminenikonidela
Published on

நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தங்கள் குடும்பத்தில் ஆண்-பெண் இரு பாலாரும் சமமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராம்சரணின் 'பெத்தி' படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இவரின், மனைவி உபாசனா கொனிடேலா, மிகச்சிறந்த பெண் தொழிலதிபர் ஆவார். கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி மதிப்புள்ள Zydus Group நிறுவனத்தின் இயக்குநராக உபாசனா உள்ளார். இந்த நிறுவனத்தில் மட்டும் 27 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். அப்பலோ 24/7 நிறுவனத்திலும் போர்டு மெம்பராக உபாசனா இருக்கிறார். இந்த நிறுவனம் நோயாளிகளுக்கு ஆன்லைன் கன்சல்ட்டன்டிங், டாக்டர் அப்பாயின்ட்மென்ட் ஆகியவற்றை பெற்று தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. உபாசனாவின் தாத்தா பிரதாப் சி. ரெட்டிதான் அப்பலோ மருத்துவமனையின் நிறுவனர் ஆவார்.

தெலுங்கு மண்ணில் புகழ்பெற்ற காமினேனி குடும்பத்தில் பிறந்த உபாசனா, படிப்புக்கு பிறகு, தங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஃபேமிலி ஹெல்த் பிளான் இன்சூரன்ஸ் (FHPL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் அவர் இருக்கிறார். உபாசானாவின் தாயார் ஷோபனா காமினேனி, குடும்பத்தின் தொழில்களை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றியதுடன், மகளின் தொழில் முனைவோர் வாழ்கைக்கும் ஒரு முக்கிய உத்வேகமாக இருந்துள்ளார்.

சமீபத்தில், உபாசனா அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் குடும்பமாக தொழில் செய்கிறோம். ஒரு தொழில் குடும்பம் என்பதால், எங்களுக்கென்று தனியாகக் குடும்ப அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டுள்ளது. சொத்து தொடர்பாக எந்தச் சண்டையும் ஏற்படாமல் இருக்க, நாங்கள் அந்த அரசியலமைப்பு சட்டத்தையே பின்பற்றுகிறோம். எங்கள் குடும்பத்தில் எந்தச் சண்டைக்கும் சொத்து ஒருபோதும் காரணமாக இருக்கக்கூடாது. இது என் தாத்தா வகுத்த சட்டம். குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கு சமமான பங்குகள் இருப்பதை என் தாத்தா உறுதி செய்துள்ளார். எங்கள் வீட்டிலும் ஆணாதிக்கம் இருந்தது. ஆனால், அது முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு விட்டது. பெண்கள் மிகவும் வலிமையாக இருந்து, தங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்கினர். எங்கள் குடும்பத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்று சொல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்கிறார்.

Ram Charan and Upasana
Ram Charan and Upasana(Photo: Ram Charan/ Instagram

நடிகர் ராம் சரண் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க சினிமா குடும்பத்தில் இருந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தவர். இவரின் தந்தை நடிகர் சீரஞ்சீவி. தற்போது, நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ராம்சரண் அறியப்படுகிறார். ஒரு படத்திற்கு 70 கோடி முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள். விளம்பரங்கள் மூலமாகவும் ராம்சரண் சம்பாதிக்கிறார்.

அதோடு, கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி (Konidela Production Company) மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் ராம்சரண் ஈடுபட்டுள்ளார். இந்த நிறுவனம், கைதி நம்பர் 150 மற்றும் சயீ ரா நரசிம்ம ரெட்டி (Sye Raa Narasimha Reddy) போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், ஹைதராபாத் போலோ மற்றும் ரைடிங் கிளப்பை (Hydrabad  Polo and Riding Club) நிறுவி நடத்தி வருகிறார்.

ராம் சரணும் உபாசனாவும் தங்களது கல்லூரி காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ராம் சரண் தனது பிளாக்பஸ்டர் படமான 'மகதீரா' (Magadheera) படப்பிடிப்பில் இருந்த சமயத்தில், நட்பு காதலாக மலர்ந்தது. உபாசனா வெளிநாட்டில் தனது படிப்பைத் தொடர்ந்தபோது, ராம்சரணின் பிரிவு அவரை வெகுவாக பாதித்துள்ளது. அப்போதுதான், ராம்சரண் மீது தான் காதல் கொண்டிருப்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார். இப்போது, இந்தத் தம்பதியினர் தெலுங்குத் திரையுலகில் மிகவும் மதிக்கப்படும் தொழில்முனைவோராக கருதப்படுகின்றனர். க்ளின் காரா (Klin Kaara) சிவராம் மற்றும் அன்வீரா ஆகிய மூன்று குழந்தைகளும் இந்த தம்பதிக்கு உண்டு.

உபாசனாவுடனான தனது உறவைப் பற்றிப் பேசிய ராம் சரண் , “பொதுவாக வீட்டில் உபாசனாதான் அதிகாரம் செலுத்துவார். ஒரு நடிகராக எங்கே இருக்கிறேன்... எவ்வளவு நேரம் வேலை செய்கிறேன்... எப்போது உறங்குகிறேன்... எப்போது கண்விழிப்பேன் என்று தெரியாது. எல்லாமே நமது ஷெட்யூலை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. இதனால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு வீட்டை வடிவமைத்து அதில் வாழ்வது கடினம். திருமணத்துக்கு பிறகு, அனுசரித்துச் செல்ல வேண்டிய பல விஷயங்கள் உள்ளன” என்று கூறினார்.

Puthuyugam
www.puthuyugam.com