நடிகர் சல்மான்கான், பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார். தற்போது 60 வயதானாலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். வாரத்தில் 6 நாட்கள் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்பவர். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இளமைக் காலத்தில் சல்மான்கானுக்கு சில காதல்கள் இருந்தன. சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் போன்ற நடிகைகளுடன் அவர் டேட்டிங் செய்ததாக தகவல்கள் உண்டு. அதில், ஐஸ்வர்யா ராயுடன் சல்மான் கொண்டிருந்த காதல் மிகத் தீவிரமாக இருந்தது. ஐஸ்வர்யா ராயுடன் சல்மான் இணைந்து நடித்த “ஹம் தில் தே சுக்கே சனம்” என்ற படம் ஹிட் அடித்தது. இந்த சமயத்தில்தான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது.
ஆனால், ஐஸ்வர்யாவுடன் இருந்த தீவிரமான காதல் காரணமாக சல்மான் பல நேரங்களில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஐஸ்வர்யாவை பல வழிகளில் சல்மான் துன்புறுத்தியதாகவும் சொல்லப்பட்டது. நடிகர் ஷாருக்கானுடன் 'சல்தே சல்தே' என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்த போது, படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சல்மான், தகராறில் ஈடுபட்டார். இதனால், அந்தப் படத்தில் இருந்தே ஐஸ்வர்யா தூக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்தப் படத்தைத் தயாரித்த ஷாருக்கான், பின்னாளில் ஐஸ்வர்யாவை நீக்கியதற்காக வருத்தப்பட்டதாக கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'சல்தே சல்தே' படத்தில் ஐஸ்வர்யா இடத்தில், ராணி முகர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது மட்டுமல்ல, ஒரு நாள் நள்ளிரவில் மது அருந்தி விட்டு, ஜஸ்வர்யா வீட்டுக்கே சென்று சல்மான் தகராறில் ஈடுபட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா சல்மானுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டார். அதற்குப் பிறகும், சிலருடன் சல்மான் காதலில் இருந்தார். இத்தாலிய மாடல் லூசியானாவை காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், யாரையும் சல்மான்கான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிமையில்தான் வசிக்கிறார்.
ஆனாலும்,60 வயலும் சல்மான்கான் உடற்பயிற்சி செய்வதை மட்டும் விட்டுவிடவில்லை. கடந்த 17ம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்த கையோடு, தனது சட்டையில்லாத படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார் சல்மான்.
அந்த புகைப்படத்துக்கு சல்மான் கொடுத்த கேப்ஷனில் , “எனக்கு நானே, தனியாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தனிமையை நாமே தேர்வு செய்வது. அதாவது, விருப்பத்தின் பேரில் தனியாக இருப்பது. மற்றொன்று உன்னுடன் யாரும் இருக்க விரும்பாதபோது ஏற்படுவது. இதற்குப் பிறகு, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே முடிவு செய்துகொள்” என்று கூறியிருந்தார்.
சல்மானின் இந்த பதிவு அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்து விட்டது. அவரது ரசிகர்கள், 'தனிமையில் இருக்க முடிவெடுப்பது என்பது தவறல்ல. நமது சுதந்திரத்தையும், திறமையையும் வளத்தெடுக்க தனிமை வெகுவாக உதவும் 'என்று சல்மானின் பதிவில் கமெண்ட் செய்துள்ளனர். சல்மானின் முன்னாள் காதலியான சங்கீதா பிஜ்லானியும் இந்த பதிவில் 'Uff என்று fire emoji- யுடன் கமெண்ட் செய்துள்ளார். இருவரின் காதல் உடைந்து விட்டாலும், சங்கீதா தொடர்ந்து சல்மானுடன் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலும் அவரின் உடலமைப்பைக் கண்டு வியந்து பலரும் பாராட்டியுள்ளனர். பாலிவுட்டின் உண்மையான 'பிட்னெஸ் ஐகான்' சல்மான்தான் என்றும் கமெண்டில் தெரிவித்துள்ளனர்.
சல்மான் கடைசியாக 'சிக்கந்தர்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கல்வானில் நடந்த இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலை மையமாக வைத்து, இந்தப் படம் எடுக்கப்படுகிறது.அடுத்து, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாராவுடன் சேர்ந்து சல்மான்கான் நடிக்கவுள்ளார்.