கருப்பு –சூர்யாவுக்கான கம்பேக்?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா நடிப்பில் கருப்பு திரைப்படம் நேற்று வெளியானது. அதன் விமர்சனத்தைப் பார்க்கலாம்..
Karuppu Movie
Karuppu Movie
Published on

கேரளாவிலிருந்து மகளின் மருத்துவ சிகிச்சைக்காக, மகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார் இந்திரன்ஸ். அவர்கள் சிகிச்சைச் செலவுக்காக கொண்டுவந்த 60 பவுன் நகை திருடுபோகிறது. போலீஸ் திருடர்களைப் பிடித்து நகையை உடனடியாக மீட்டுவிட்டாலும், உண்மையான சிக்கல் அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. போலீஸ்காரர்களின் தில்லுமுல்லுகளிலும், மீட்கப்பட்ட நகையை வாங்குவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சிக்கிக் கொள்கிறார் இந்திரன்ஸ். லஞ்சத்திலும், ஏமாற்று வேலைகளிலும் மூழ்கித் திளைக்கும் வக்கீலான ஆர்ஜே.பாலாஜியை வைத்துக்கொண்டு நகையை மீட்கப் பாடாய்ப்படுகிறார் அவர். ஒரு கட்டத்தில், நீதிமன்ற வளாகத்தில் சிலையாக நிற்கும், வேட்டைக் கருப்புவே அவருக்காகக் களமிறங்குகிறார். அதன்பின் என்னவாயிற்று என்பது கதை!

வெளியீட்டு தாமதம், முதல் நாள் காட்சிகள் ரத்து ஆகியவை படத்தின் மீது ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருந்தன. 2021ல் கோவிட் சிக்கலால், ஓடிடியில் வெளியான ஜெய் பீம் எனும் ஓர் அற்புதமான படத்துக்குப் பின்னர் சொல்லிக்கொள்ளும் வகையில் ஹிட் எதுவுமில்லாமல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சூர்யாவுக்கு இந்தப் படமாவது சிறப்பாக வந்திருக்கிறதா எனும் எதிர்பார்ப்பு வேறு. அதனால் தியேட்டர் நிரம்பி வழிந்தது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா என்று கேட்டால் - ஈயம் பூசின மாதிரியும்.. பூசாத மாதிரியும் என - இருவிதமான பதில்தான் வருகிறது.

ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா நடிப்பில் வந்திருக்கும் கருப்பு, வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல், கோர்ட்ரூம் டிராமா, கடவுள் ஃபேண்டஸி, அதிரடி சண்டைக் காட்சிகள் என வித்தியாசமான ஒரு கலவையாக இருக்கிறது. வேட்டைக் கருப்புவின் பாத்திரத்துக்குப் பொருத்தமான கம்பீரம், அதிரடி என சூர்யா அதகளம் பண்ணியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் கருப்பு நிற மேக்கப்பில், சிலைத்தோற்றத்தில் வரும் கருப்புவாக சூர்யா கூஸ்பம்ப்ஸ் கிளப்புகிறார். ஆனால், வீக்கான திரைக்கதையால் அவரது முயற்சியனைத்தும் வீணாகிப்போகிறது.

அஜித், விஜய், சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து எக்கசக்கமான ரெஃபரன்ஸ் காட்சிகளைக் காட்டி இளைஞர்களை ஏமாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர். பொதுவாக நகைச்சுவை மற்றும் சமூக விமர்சன பாணியில் கதை சொல்லிப் பழகிய இயக்குநர், இதில் ஒரு வித்தியாசமான டோனில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் அது வேலை செய்கிறது, அவ்வளவுதான். மற்றபடி, சிறப்பான ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. சூர்யாவின் சண்டைக்காட்சிகளில் சாய் அபயங்கரின் பின்னணி இசை தெறிக்கிறது. திரிஷா, ஸ்வாஸிகா, நட்டி எல்லோரும் இருக்கிறார்கள், அவ்வளவுதான். சூர்யாவை விடவும் அதிக நேரம் வருமளவுக்கு ஒரு பெரிய வில்லன் கதாபாத்திரத்தை அவருக்காக எழுதிக் கொண்டிருக்கிறார் ஆர்ஜே.பாலாஜி. ஆனால், அந்தப் பாத்திரத்துக்கான நியாயத்தை அவராலேயே செய்யமுடியவில்லை. அதை வேறு யாராவது திறமையான நடிகருக்கு வழங்கியிருக்கலாம். 


கடவுளால் கூட மாற்ற முடியாத ஒரு மோசமான சிஸ்டம் இங்கே இருக்கிறது, அதைச் செய்யமுடியுமா என்று ஒரு கடவுளுக்கே சவால் விடப்படுகிறது என்பது எத்தனை வலுவான ஒன்லைன்! ஆனால், இந்த அழுத்தமான ஒன்லைனுக்கு நியாயம் செய்யும்படியான எதுவுமே படத்தில் நடக்கவில்லை. படத்தில் மருந்துக்கும் லாஜிக் இல்லை. சூர்யாவுக்கான பில்டப் காட்சிகளில் செலுத்திய உழைப்பை கொஞ்சமேனும் திரைக்கதைக்காக ஆர்ஜே.பாலாஜி செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  

Puthuyugam
www.puthuyugam.com