சிங்கீதம் சீனிவாசராவ்: 94 வயது இளைஞன்

சினிமாவை… ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக, கலைப்படைப்பாக, அரசியல் களமாக, சமூக விழிப்புணர்வுக் கருவியாக என பல கோணங்களில் அணுகுகிறார்கள். சிங்கீதம் சீனிவாசராவ் சினிமாவை தன் கையிலிருக்கும் ஒரு மேஜிக் குச்சியைப் போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
Singeetham Srinivasarao
Singeetham Srinivasarao
Published on

’சிங் கீதம்’ (Sing Geetham) எனும் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். சமீபத்தில், அதன் டீஸர் வெளியாகி பெரிய அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது.

1931ல் பிறந்த சிங்கீதம் சீனிவாசராவுக்கு இப்போது வயது 94. தனது 25 வயதில், பாதாளபைரவி, மாயாபஜார் போன்ற ஐகானிக் படங்களை இயக்கிய, தெலுங்கின் மிகப் பிரபலமான இயக்குநரான கேவி. ரெட்டி அவர்களின் உதவியாளராக சினிமாவுக்குள் வந்தவர் சிங்கீதம். பின்னர், 1972ல் நீதி நிஜயதி எனும் தெலுங்குப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். 40 வயதில் இயக்குநராகத் அறிமுகமாகி, 60க்கும் அதிகமான படங்களை இயக்கிய அவரது பயணம் 50 வருடங்களைத் தாண்டி, இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 90 வயதைத் தாண்டியும் சினிமாவில் ஆர்வமாக இயங்கிவரும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood), அலெஹான்ட்ரோ ஜொடோராவ்ஸ்கி (Alejandro Jodorowsky) போன்ற உலகளாவிய இளைஞர்களின் வரிசையில் வைத்துப் பாராட்டப்பட வேண்டியவர் சிங்கீதம்!

சினிமாவை… ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக, கலைப்படைப்பாக, அரசியல் களமாக, சமூக விழிப்புணர்வுக் கருவியாக என ஒவ்வொரு படைப்பாளியும் அவரவர்களுக்குப் பிடித்தமான கோணங்களில் அணுகுகிறார்கள். சிங்கீதம் சீனிவாசராவ் சினிமாவை தன் கையிலிருக்கும் ஒரு மேஜிக் குச்சியைப் போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதைக்கொண்டு வியப்பூட்டும் மாயங்களை நிகழ்த்தியிருக்கிறார். 

திக்கற்ற பார்வதி, மயூரி போன்ற பெண்களை மையப்படுத்திய சமூகக் கதைகளை சினிமாவாக உருவாக்கி விருதுகளைக் குவித்த சிங்கீதம், திரிலோக சுந்தரி, ஆதித்யா369, பைரவ தீபம் போன்ற ஃபேண்டஸி படங்களையும் உருவாக்கியதன் மூலம், தென்னிந்தியாவின் ஃபேண்டஸி படங்களின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆதித்யா369 ஒரு டைம் டிராவல் கதை! மற்றும் குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்களையும் இயக்கியிருக்கிறார். இப்படிப் பல வகையான (Genre) சினிமாக்களை தயக்கமின்றி முயற்சித்திருக்கிறார். 

Singeetham Kamal Combo
Singeetham Kamal Combo

தெலுங்கில் ’சொம்மகடிதி சோககடிதி’ (தமிழில் இரு நிலவுகள்) படத்தில்தான் சிங்கீதமும், கமல்ஹாசனும் முதன்முறையாக இணைகிறார்கள். இருவருக்குமிடையே 23 வயது வித்தியாசமிருந்தாலும், ஒத்த ரசனையும், நகைச்சுவை உணர்வும் இருவரையும் நண்பர்களாக்குகிறது. 

அவருக்கு நற்பெயரையும், தேசிய விருதையும் பெற்றுத்தந்த, அவரது இரண்டாவது படமான திக்கற்ற பார்வதிக்குப் பிறகு, முழுதும் தெலுங்கு, கன்னட மொழிகளிலேயே இயங்கி வந்தாலும், கமல்ஹாசனின் நட்புக்குப் பிறகு, ராஜ்கமலின் முதல் தயாரிப்பான, கமலின் நூறாவது படமான ராஜபார்வை எனும் கிளாஸிக் படத்தின் மூலமாக தமிழ்த்திரைக்கு மீண்டும் வந்தார் சிங்கீதம். பிறகு, தமிழில், இதுவரை 9 படங்களை சிங்கீதம் இயக்கியிருக்கிறார். அவற்றில் 6 படங்கள் கமல்ஹாசன் நடித்தவை. மிகக் குறிப்பாகக் கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத படங்களான பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மும்பை எக்ஸ்ப்ரஸ் போன்ற தனித்துவமான நகைச்சுவைப் படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்! இருவருமே சினிமாவின் டெக்னிக்ஸ் மீது தீவிரமான காதல் கொண்டவர்கள், அதனால்தான் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் போன்ற டெக்னிகல் சவால் நிறைந்த படங்களை இணைந்து சாத்தியமாக்கியிருக்கிறார்கள். ரசிகர்களால் அதிகமும் கவனிக்கப்படாமல் போன, இந்தியாவின் முதல் டிஜிடல் சினிமாவான மும்பை எக்ஸ்ப்ரஸை இயக்கிய பெருமையும் இவரையே சேர்கிறது. சினிமா பேச ஆரம்பித்த பின்னர், மொழிகள் கடந்து வசனங்களே இல்லாமல் ’பேசும் படம்’ எனும் ஒரு சினிமாவை எடுக்கமுடியும் என்று நிரூபித்ததும் இந்தக் கூட்டணிதான்.

Ilayaraja Singeetham Srinivasarao and Kamal
Ilayaraja Singeetham Srinivasarao and KamalRKFI

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கடந்த ஆண்டு, ’அபூர்வ சிங்கீதம்’ எனும் பெயரில் சிங்கீதம் சீனிவாசராவுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. நான்கு நாட்கள் தொடர் நிகழ்வாக நடந்த அதில், இருவரும் இணைந்து எடுத்த படங்கள் திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்த உரையாடலும் நடந்தது. அதில் இளையராஜா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா, அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே சொன்னது இது:

”ராஜபார்வை இசை விவாதத்துக்காக ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார் சிங்கீதம். அப்போது என்ன சிச்சுவேஷன் என்று இவரைக் கேட்டேன், அதற்கு ‘நான் கமலுக்கு ஒரு படம் டைரக்ட் பண்ணப்போறேன். இன்னும் கதை ரெடியாகல. நாளாகழிச்சி பூஜை போடப்போறோம். அதனால நாளைக்கு சாங் ரெக்கார்டிங் பண்ணனும். இதுதான் சிச்சுவேஷன்’ என்று சொல்கிறார்ங்க...”

நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்த அனுஹாசன், ”எங்க கம்பெனியில நிறைய படம் பண்ணியிருக்கீங்களே, ராஜ்கமல்ல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விசயம் என்ன சார்?” என்றொரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அவரது பதில்.

“ரஸம்!”

”ஆமா, சாருக்கு மதிய உணவில் ரசம் ரொம்பப் பிடிக்கும், அதைக் குறிப்பிட்டுக் கேட்பார். ஸ்பெஷலா பண்ணுவோம்” என்று அதற்கு விளக்கம் வேறு சொன்னார் அனு. ஆனால், அதற்கு சிங்கீதம் குறுக்கிட்டுச் சொன்னது,

“அந்த ரஸம் மட்டுமில்ல!”

என்ற பின்னர் கூட அனுவுக்குப் புரியவில்லை. பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த கமலுக்குப் புரிந்துவிட்டது, சிரித்தார். அவர் ‘ரசனை’யைக் குறிப்பிட்டிருக்கிறார்! அப்படியான சேட்டை பிடித்தவர்தான் இந்த சிங்கீதம்! மனிதர், ‘சிங் கீதம்’ சினிமாவில் அப்படி என்னதான் செய்து வைத்திருப்பார் என்று பார்க்கும் ஆவல் எழுகிறதல்லவா?

Puthuyugam
www.puthuyugam.com