தயாரிப்பில் சதம் அடிக்கும் முன் நடந்த சோகம்..! #RBChoudary

நடிகர் விஜய் முதலில் ஆக்ஷன் ஹீரோவாகத்தான் தமிழில் நடிக்க தொடங்கினார். அவரை, காதல்கதை பக்கம் திருப்ப வைத்த படம் எது தெரியுமா?
RB Choudary
RB Choudary
Published on

பிரபல தமிழ் படத் தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸின் ஆர்.பி. சவுத்ரி திடீரென விபத்தில் பலியாகியுள்ளது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பல படங்கள் இவர் தயாரித்ததுதான்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் ஆர்.பி சவுத்ரி. சென்னையில் முதலில் தங்கம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர், மலையாள சினிமாவுக்குள் நுழைந்து தயாரிப்பாளரானார். அடிக்கடி சொந்த ஊரான உதய்பூருக்குச் செல்வார். அப்படிச் சென்றபோதுதான் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மரணமடைந்தார்.

1990களில் ஆர்.பி. சவுத்ரி முதலில் குட் நைட் மோகனுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்கத் தொடங்கினார். இவர், குட்நைட் மோகனுடன் இணைந்து தயாரித்த முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடித்தது. அந்த படம்தான் 'புது வசந்தம்'. விக்ரமன் இயக்கத்தில் முரளி, ஆனந்த்பாபு, சித்தாரா, சார்லி, ராஜா ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை களத்துடன் இந்த படம் வெளியானது. எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. 'புது வசந்தம்' படத்துக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்தது. இதனால், ஆர்.பி. சவுத்ரி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் தயாரிப்பாளரானார். அடுத்து . கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 'புரியாத புதிர் ' படத்தை தயாரித்தார். இந்தப் படமும் ஹிட்டானது.

RB Choudary
RB Choudary

ஒரு கட்டத்தில் குட்நைட் மோகனிடம் இருந்து பிரிந்தார். அப்போது, குட் என்ற பெயரை மட்டும் வைத்து, 'சூப்பர் குட் பிலிம்ஸ் ' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இதற்கிடையே, நடிகர் விஜய் 1992ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு 'என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தார். பிறகு 1993ம் ஆண்டு 'செந்தூரப்பாண்டி '1994ம் ஆண்டு 'ரசிகன்' 1995ம் ஆண்டு 'தேவா' ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இந்தத் தருணத்தில்தான் சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் 'பூவே உனக்காக' படத்தில் விஜய் நடித்தார். விக்கிரமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் விஜயை லவ் ஹீரேவாக தமிழ் திரையுலகுக்கு காட்டியது. சொல்லப்போனால், தமிழ்த் திரையுலகில் விஜய்க்கு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இதுவென்றும் சொல்லலாம்.

அடுத்து, சூப்பர் குட் பிலிம்ஸ் விஜயை வைத்துத் தயாரித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை எழில் இயக்கியிருந்தார். பின்னர், 'திருப்பாச்சி' வெளியானது. நடிகர் விஜயை வைத்து ஆர்.பி. சவுத்ரி எடுத்த இந்தப் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகம்.

இது மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற 'சேரன் பாண்டியன்' 'நாட்டாமை ' , 'சூரியவம்சம்' 'மாயி' , 'ஆனந்தம்' போன்ற படங்களும் இவரது தயாரிப்புதான். கடைசியாக 2025ம் ஆண்டு 'மாரீசன்' படத்தையும் ஆர்.பி. சவுத்ரி தயாரித்திருந்தார்.1988ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் தூணாக இருந்தார். தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 99 படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. புதுமுகங்களை அறிமுகப்படுத்த, திறமையான இயக்குநர்களை கண்டறிந்து வாய்ப்பு வழங்க, புதுமுக இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க ஆர்.பி. சவுத்ரி தயங்கியதே இல்லை. இதுதான், அவரது வெற்றியின் ரகசியம் என்றும் சொல்லலாம்.

ஆர்.பி. சவுத்ரியின் மனைவி பெயர் மக்ஜாபென் (Mahjabeen) இவரது மகனான நடிகர் ஜீவா தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மற்றொரு மகனான ஜித்தன் ரமேசும் தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். ஆர்.பி. சவுத்ரிக்கு சுரேஷ் சவுத்ரி, ஜீவன் சவுத்ரி என மேலும் இரு மகன்கள் உண்டு. இதில், சுரேஷ் சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார். ஜீவன் சவுத்ரி இரும்புக் கம்பெனியை நிர்வாகம் செய்கிறார்.

'மாரீசன்' சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 99வது படம் என்பதால், நூறாவது படத்தயாரிப்பைக் காண அவர் இல்லாதது அவர் குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com