பார்த்தாலே பசியெடுக்க வைக்கும் ஐந்து திரைக் காட்சிகள்!

தமிழ் சினிமாவிலும், பிரபு, சத்யராஜ், ராஜ்கிரண், என பலரும் இப்படியான உணவோடு சம்பந்தப்பட்ட சில மறக்க முடியாத காட்சிகளில் அட்டகாசம் பண்ணியிருந்தாலும், சட்டென நினைவில் வரும் சில காட்சிகளைப் பார்ப்போம்!
Karthi in Kaithi
Karthi in Kaithi
Published on

வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. வீட்டுக்கு வந்த ஒரு தூரத்து உறவினரோடு சாப்பிட அமர்ந்தேன். வழக்கம் போல எனது தட்டில் இரண்டு கைப்பிடியளவு சோறு இருந்தது. எனக்கு அதுவே போதும். மூன்று கைப்பிடி இருந்தால், அதைப் பார்க்கும்போதே எனக்கு வயிறு நிறைந்த ஓர் உணர்வு ஏற்பட்டுவிடும். ’என்னத்தைத்தான் சாப்பிடுகிறீர்களோ, இதைச் சாப்பிட நான் இப்படிப் பொங்கிப்பொரித்து வேறு வைக்க வேண்டுமா?’ என்று என் மனைவியும் அவ்வப்போது கோபித்துக்கொள்வதுண்டு, என்னவோ அவர் ஒரு சட்டிச்சோறு சாப்பிட்டுத் தள்ளிவிடுபவரைப்போல! அவரும் என்னைப்போலவே கொஞ்சமாக சாப்பிடக்கூடியவர்தான். விருந்தினர்கள், அவர்கள் சாப்பிடும் அளவை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைச் சங்கோஜத்தில் தள்ளிவிடக்கூடிய நானெல்லாம், நியாயப்படி இப்படி அவர்களோடு சேர்ந்து சாப்பிட அமரவே கூடாது. அதற்காக, அவர்களைத் தனியே சாப்பிடச் சொல்வதும் மரியாதையாக இருக்காது இல்லையா?! 

நல்லவேளையாக இந்த விருந்தினர் சங்கோஜப்படும் வகையாகவெல்லாம் தெரியவில்லை. சோற்றுப் பானையே காலியாகிவிட்டது, என் மனைவி அவரது விருந்தோம்பலின் உச்சமாக, அவருக்குக் கூட எடுத்து வைத்துக் கொள்ளாமல், இருந்த உணவு அனைத்தையும் கொண்டு வந்து போட்டும், கடைசியில் அவர் வயிறு நிறைந்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் இவர் வருவது ஏற்கனவே தெரிந்து, வழக்கத்தை விட அதிகமாகவேதான் பொங்கி வைத்திருந்தார் என் மனைவி. கடைசியில், எங்களது திருட்டுவிழியைப் பார்த்துப் புரிந்துகொண்டுதான் இலையிலிருந்து எழுந்தார் அவர். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, 5 கிலோ பிரியாணி சேலஞ்ச், 50 புரோட்டா சேலஞ்ச், 100 இட்லி சேலஞ்ச் என என்னென்னவோ யூடியூப் விடியோக்கள்தான் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தன. ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரு நாள் உடன் படித்த நண்பன் ஒருவன், புரோட்டா சாப்பிடப்போகும்போது 38 ஆஃப் பாயில்களை விழுங்கிய சம்பவமெல்லாம் என் நினைவுக்கு வந்துபோனது. 

தமிழ் சினிமாவிலும், பிரபு, சத்யராஜ், ராஜ்கிரண், என பலரும் இப்படியான உணவோடு சம்பந்தப்பட்ட சில மறக்க முடியாத காட்சிகளில் அட்டகாசம் பண்ணியிருந்தாலும், சட்டென நினைவில் வரும் சில காட்சிகளைப் பார்ப்போம்!  

1. கரிசக்காட்டுப்பூவே

இந்தப் படத்தில் நெப்போலியன், தம்பி வினீத்துக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி, பக்கத்திலிருக்கும் விவேக் இலையிலிருந்து சோற்றையும், செந்தில் இலையிலிருந்து மட்டன் பீசையும் எடுத்து கவளமாக உருட்டித் தின்று காண்பிப்பார். டிரையல் காண்பிப்பதற்கே அவர் பக்கத்து இலையில்தான் கை வைப்பார். இத்தனைக்கும் அவர் இலையில் 5 பேர் சாப்பிடுகிற அளவில் சோறு இருக்கும். அந்தக் காட்சியில் விவேக்கும், செந்திலும் காட்டுகிற ரியாக்‌ஷன்ஸ் ரசனையாக இருக்கும்! 

2. பாட்டுக்கு நான் அடிமை

இதில், படுகஞ்சரான கவுண்டமணியின் வீட்டுக்கு, மைத்துனர் ராமராஜன் வருவார். வேறு வழியின்றி குடும்பமே சுற்றிலும் உட்கார்ந்து அவருக்கு உணவு பரிமாறுவார்கள். வேட்டியைத் தளர்த்திக்கொண்டு ராமராஜன் வடை, பாயாசத்தோடு சாப்பாட்டை வெளுத்துக் கட்டுவார். கடைசியில் கையை ஊன்றி எழுந்தபடி, இலையை எல்லோருமாக சேர்ந்து எடுத்துப்போட வேறு அழைப்பார். அதில் கவுண்டமணி, பாண்டுவின் ரியாக்‌ஷன்ஸ் ஹைலைட்டாக இருக்கும்!

3. வெண்ணிலா கபடிக்குழு

நண்பர்களோடு ஹோட்டலுக்குப் போகும் சூரி, அங்கே 50 புரோட்டா சாப்பிடும் பந்தய அறிவிப்பைப் பார்த்து அதில் கலந்துகொள்வார். அதில் சூரி எளிதாக ஜெயித்துவிட்டாலும், அந்த மாஸ்டர், சூரியை ஏமாற்றுவதற்காக போங்காட்டம் ஆடுவார். அப்போது யாரும் எதிர்பாராதபடி, ‘கோட்டையெல்லாம் அழிங்க, முதல்லருந்து 50 புரோட்டா சாப்பிடுறேன்’ எனும் சூரியின் வசனம், அந்த மாஸ்டரை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, அவருக்கு ‘புரோட்டா சூரி’ எனும் பெயரையே வாங்கிக்கொடுத்தது.

4. வெடிகுண்டு முருகேசன்

’பர்க்கர், டக்கீலோ, ஸ்ப்ரிங்ரோல், கபாப்’ என இல்லாத பலவற்றையும் கேட்டு சர்வரைக் கலவரப்படுத்திவிட்டு, கடைசியில் ’என்னய்யா எப்பப்பாத்தாலும் இட்டிலி, வடை, தோசைன்னு… எதையாச்சும் புதுசுபுதுசா கண்டுபிடிச்சித் தின்னாத்தான்யா நாடு முன்னேறும்’ என்று புதிய தத்துவம் ஒன்றையும் உதிர்ப்பார் வடிவேலு. கடைசியில், இட்லி, தோசை, புரோட்டா என வெளுத்துக்கட்டிவிட்டு, பில்லுக்கான பணத்தையும் கொடுக்காமல், அத்தனை பேருக்கும் டேக்கா கொடுத்துவிட்டு ஓடிவிடுவார்.

5. கைதி

மேற்சொன்ன நகைச்சுவைப் பட்டியலில் இருந்து, கைதி படத்தில் வரும் இந்தக் காட்சி சற்று வித்தியாசப்பட்டாலும் இதுவும், ஒரு முக்கியமானக் காட்சிதான். தமிழ்நாட்டின் எழுதப்படாத தேசிய உணவான பிரியாணியை மையப்படுத்துகிறது. ஒரு இக்கட்டான சூழலில், காத்திருக்கும் ஒரு பெரிய வேலையில் இறங்குமுன்பாக, நின்று நிதானமாக, அத்தனை வருடச் சிறை வாழ்க்கையின் பசியை, கார்த்தி போக்கிக்கொள்வதாக இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பிரியாணியை வாளியில் எடுத்து வந்து, தன் முன்னால் கொட்டி, முகமெங்கும் வியர்த்து வழிய கார்த்தி ஒரு பிடி பிடிக்கும் இந்தக் காட்சி, தமிழ் சினிமாவின் ஐகானிக் காட்சியாக அமைந்துவிட்டது.

Puthuyugam
www.puthuyugam.com