பல வருடங்களுக்குப்வருடங்களுக்குப் பிறகு மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் படம். அவர்களோடு வேறு சில பல நட்சத்திரக்கள் என்று பேட்ரியாட் மலையாளத் திரைப்படம், அதனாலேயே பார்வையாளர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. தமிழ்ப்பதிப்பு இல்லாமல், மலையாளத்தில் மட்டுமே வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபகத்ஃபாசில், ராஜீவ்மேனன், குஞ்சாக்கோபோபன், ரேவதி, நயன்தாரா என ஸ்டார்கள் நிறைந்திருக்கிறார்கள்.
இதன் இயக்குநர் மகேஷ் நாராயணன், மலையாள சினிமாவின் பிரபலமான எடிட்டராவார். தமிழில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 1&2 படங்களில் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பாக ஒரு கமல் படத்தை இயக்கப்போவதாக அடிபட்ட பெயர் இவருடையதுதான். இப்படியொரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் ஒரு ஸ்பை ஆக்ஷன் திரில்லர் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தில் ஸ்பை இருக்கிறார்கள், ஆக்ஷன் இருக்கிறது, திரில்லிங் இருக்கிறது. ஆனால், மொத்தமாக ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படமாகத்தான் படம் இல்லை.
இந்திய ராணுவத்துக்காக அல்லது உயர்மட்டப் பயன்பாட்டுக்காக பெரிஸ்கோப் எனும் ஸ்பைவேர் ஒன்று வாங்கப்படுகிறது. அதை ஒரு அமைச்சர் (ராஜீவ்) தன் பையன் (ஃபகத்) கம்பெனிக்கும் சேர்த்து தாரைவார்த்துவிட, அவர் அதை வைத்து என்னென்னவோ திட்டமிடுகிறார். அதன் பக்கவிளைவுகளால் சிலர் பாதிக்கப்பட, அதனால் சிலபல தலைகளும் உருள, அறிவியல் ஆலோசகர் மம்முட்டி களமிறங்குகிறார். அதன் பின் என்னவாயிற்று என்பது கதை!
ஆனால், அதன் பின் இன்னதுதான் என்றில்லாது என்னென்னவோ ஆகிக்கொண்டே இருப்பதுதான் ஒரு கட்டத்தில் நம்மைச் சலிப்பூட்டிவிடுகிறது. ராஜீவ், மம்முட்டியை தேசத்துரோகியாக வடிவமைக்கிறார். மம்முட்டி, லண்டனில் போய் உட்கார்ந்துகொண்டு வளவளவென்று யூடியூப் நடத்திக் கொண்டிருக்கிறார். ஃபகத் ஊர், உலகத்திலுள்ள எல்லா சிசிடிவியையும் எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். யார் யாரெல்லாமோ என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.
ஒரு எக்ஸ்டெண்டட் கேமியோ பாத்திரத்தில் மோகன்லால் வருகிறார்! அவர் வந்த பிறகாவது படம் பிக்கப் ஆகும் என்று பார்த்தால் அப்போதும் அப்படியேதான் இருக்கிறது. அது சரி, பிரச்சினை வளவளவென்றிருந்த திரைக்கதையில் இருக்கும் போது அவரும்தான் என்ன செய்வார் பாவம்! ஆக்ஷன் படம் என்றாகிவிட்டது, அதிலாவது புகுந்து விளையாடியிருக்கலாம். ஒன்றுக்கு இரண்டாய் மாஸ் ஹீரோக்கள் வேறு இருக்கிறார்கள். ஆனால், பாத்திர வடிவமைப்பைப் பாருங்கள், ஒருவருக்கு ஒரு கால் இல்லை, இன்னொருவருக்கு உடம்பு சரியில்லை, எப்போதும் ட்ரிப்ஸ் பாட்டிலும், கையுமாய் அலைந்துகொண்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? மான்கொம்பு சண்டைதான் போட வேண்டும் போலிருக்கிறது! இத்தனைக்கும் ஒரு சேஸ், ஒரு லிஃப்ட் சண்டை, ஒரு துப்பாக்கி சண்டை, ஒரு விமானத்தில் சண்டை என படத்தில் ஐந்தாறு ஆக்ஷன் காட்சிகள் வருகின்றன. பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, டாம் க்ரூஸ் போல பாராசூட்டில் குதித்தெல்லாம் காண்பிக்கிறார் மம்முட்டி! ஆனால், நாம்தான் ஒரு ஆக்ஷன் படத்தை பின்டிராப் சைலண்டோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, ஆர்ட் ஒர்க், எடிட்டிங், இசை எல்லாம் சிறப்பாகவே இருந்தன. மேக்கிங்கும் பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால், வீக்கான திரைக்கதைக்கு முன்னால் இதெல்லாம் எந்த மூலைக்கு? உலகளாவிய ஆக்ஷன் படங்களைப் உள்ளங்கையில் பார்த்துக்கொண்டிருக்கும் நமது கவனத்தைச் சற்றேனும் ஈர்க்க வேண்டுமென்றால், திரைக்கதையில் ஆக்ஷனுக்கான ஹைமொமண்ட்ஸை முதலில் உருவாக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாய் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் வரவேண்டும். படத்தின் முக்கியமான பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் ஆக்ஷன் இயக்குநராவது இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சண்டைக்காட்சிகள் படத்துக்கான நியாயத்தைச் செய்யவில்லை. மொத்தத்தில், பேட்ரியாட் மிக வீக்காக இருக்கிறார்.