யூத் : சினிமாவில் பள்ளிக்கூடங்கள் #Youth

இப்படியான சினிமாக்கள் இன்றைய மாணவர்களை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், லாஜிக்கலான இன்னொரு கேள்வி நமக்கு எழுகிறது! உண்மையில் இப்படியான பள்ளிகள் எங்கேதான் இருக்கின்றன?
Youth Movie
Youth MoviePaarvathaa Entertainments
Published on

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள, கென் நடித்து இயக்கியிருந்த ’யூத்’ எனும் படத்தைப் பார்க்க நேர்ந்தது. முழுவதும் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சுற்றி நடப்பது போன்ற கதையமைப்பு. பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ளாமல், குடும்பச் சூழ்நிலை தெரியாமல், படிக்காமல், பொறுப்பில்லாமல் தறுதலையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சில மாணவர்கள் படம் முழுவதும் காண்பிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, அவர்கள் எந்நேரமும் சக மாணவிகளுக்குப் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாணவிகளும் கிட்டத்தட்ட அவ்வாறே! இறுதிக்காட்சிகளில், ஹீரோ மாணவனானவன் திருந்துவது போல கதை அமைக்கப்பட்டிருந்தாலும், முக்கால்வாசி படத்தில் இப்படியான காட்சிகள்தான் நிறைந்திருந்தன. இப்படியான சினிமாக்கள் இன்றைய மாணவர்களை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், லாஜிக்கலான இன்னொரு கேள்வி நமக்கு எழுகிறது! உண்மையில் இப்படியான பள்ளிகள் எங்கேதான் இருக்கின்றன? 

நாமும் பள்ளிக்கூடம் சென்றுதான் படித்திருக்கிறோம், வளர்ந்திருக்கிறோம். இப்போது நமது பிள்ளைகளும் தமிழ்நாட்டின் பள்ளிகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் நாளெல்லாம் வகுப்புகளில் பாடத்தைக் கவனிக்க வேண்டும், மாலையில் டியூஷனுக்குச் செல்ல வேண்டும், இரவு வீட்டுப்பாடங்களைச் செய்ய வேண்டும்! ஒவ்வொரு மாதமும் திருப்புதல் தேர்வுகள் (Revision Tests) நடக்கின்றன, இரண்டு மாதங்கள் ஓடி விட்டால் ஒரு பருவத் தேர்வு வந்துவிடுகிறது. ஒவ்வொரு தேர்வுகளுக்கு முன்னாலும், வழக்கத்தை விடவும் அதிக கவனத்துடன் படிக்கிறார்கள். இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது ’நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது சினிமாவுக்கு போய் வரலாம் அல்லவா’ என்று நாம்தான் கட்டாயப்படுத்தி பிள்ளைகளை அனுப்ப வேண்டியதாக இருக்கிறது நிலைமை! இதற்கிடையே கொஞ்ச நேரம் ஸ்மார்ட்போன்களில் நண்பர்களோடு விளையாட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் சற்று நேரம் கிரிக்கெட் இவற்றையெல்லாமும் செய்கிறார்கள். அத்தனை தூரம், இன்றைய பிள்ளைகள் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். பள்ளிகளின் நற்பெயருக்காகவோ அல்லது சொந்த ஈடுபாடோ எதுவானாலும், ஆசிரியர்களுக்கும் அந்தத் தீவிரப் பொறுப்புணர்வு இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்தான். 

இதையெல்லாம் தாண்டி அவர்களின் வயதையும், அந்த வயதுக்கே உரிய பாலின ஈர்ப்புகளையும் நாம் புரிந்துதான் வைத்திருக்கிறோம். சக மாணவிகள்/ மாணவர்கள் மீதான ஈர்ப்பு அவர்களுக்கு இருக்கலாம், பள்ளிகளில் அரிதாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்கள், கேலி செய்து கொள்வார்கள் அல்லது சற்றே அதிகபட்சமாக கனவுகளிலும் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் புரிந்துகொள்ளத் தக்கவைதான்.

ஆனால், இந்தப் படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மாணவிகளை, ஹீரோ பையன், ஒருவர் பின் ஒருவராகக் காதலித்துக்கொண்டே இருக்கிறான். பகல் நேரம் முழுதும் பள்ளியில் அவனுக்கு இதுதான் வேலை! மாலை நேரத்தில், பிற மாணவர்களோடு இந்தப் பெண்களை முன்னிட்டு முரட்டுத்தனமாக அடித்துக் கொள்கிறார்கள். வீடு திரும்பியதும் போனில் காதலிக்கிறார்கள், முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அம்மாவுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாகப் பொய் சொல்லி வீட்டுக்குக் கூட்டிப் போகிறார்கள். அதற்கு அந்த அம்மாவும் ஒத்துழைக்கிறார். எந்த அம்மா? பிள்ளையையும், அந்தப் பிள்ளையின் படிப்பையுமே தன் எதிர்காலமாக நினைத்து வாழும் ஓர் ஏழை அம்மா! அப்பாவும் சற்றே இதுபற்றிப் புலம்புவதோடு நின்று கொள்கிறார். பள்ளிகளில் ஆசிரியர்கள் யாரும் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. பையன் எல்லா தேர்வுகளிலும், எல்லா பாடங்களிலும் ஃபெயிலாகிக் கொண்டே இருப்பது குறித்தெல்லாம் யாருக்கும், எந்தக் கவலையும் இல்லை. அவனது நண்பர்களுக்கு அவனுடைய காதலுக்கு உதவுவதைத் தவிர்த்து வேறு வேலையே கிடையாது. இதெல்லாம் இன்றைய மாணவர்களை எப்படி பாதிக்கும் என்பது ஒரு புறமிருந்தாலும், இதையெல்லாம் ஒரு கதை என்று நாம் எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்து பார்ப்பது? கதைகளே, மனிதனை பரிணாம வளர்ச்சியடையச் செய்தன என்பதையெல்லாம் இந்த இளம் படைப்பாளிகள் அறிவார்களா? 

முன்னதாக, அழகி, பசங்க, 96 போன்ற பல படங்களில் பள்ளிக்கூடங்களும், காதல்களும் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. அழகியில் பள்ளிக்கூடம் இருந்தது, காதல் இருந்தது, ஆனால் இரண்டும் சேர்ந்திருக்கவில்லை! பசங்க படத்தில் சின்னக்குழந்தைகளின் உலகம் அழகாகக் காண்பிக்கப்பட்டிருந்தே தவிர, அதில் காதல் இல்லை. போலவே 96 படமும், மிக அழகான ஒரு பள்ளிக்கூடத்தைக் காண்பித்தது. அங்கே எல்லோரும் படித்தார்கள். ஒரே ஒரு ஹீரோ மாணவன் மட்டுமே காதலை வளர்த்துக்கொண்டான், அம்மாணவியும் அதை அறிந்தும் அறியாததுபோலவும் அனுமதித்தும் அனுமதியாதது போலவும் நடந்து கொள்ள, அந்த வயதுக்கேயுரிய அழகியலாக மட்டுமே அது தெரிந்தது.

Love and Friendship in School life
Love and Friendship in School lifeGemini AI Image

ஆனால், இந்த ‘யூத்’ செய்தது என்ன? 

திரைப்படங்கள் என்பன வெறும் பொழுதுபோக்குக்கானவை மட்டுமல்ல, அதுவும் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அவை இன்னும் தீவிரமானவை! இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. 'யூத்' போன்ற எதார்த்தத்திற்குப் புறம்பான, பொறுப்பற்றத் தன்மையைக் கொண்டாடும் படங்கள் மாணவர்களிடம் பல எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

படத்தில் வரும் ஹீரோவைப் போல, பொறுப்பில்லாமல், படிக்காமல், காதலித்துக்கொண்டு, சண்டையிட்டுக்கொண்டு திரிவதுதான் ‘கெத்து’, ‘மாஸ்’, ‘ஸ்டைல்’ எனும் தவறான கருத்தாக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துகிறது. அப்படியே அதைத் தவறு என்று உணர நேர்ந்தாலும், கடைசி நேரத்தில் திருந்தி, படித்துக் கலெக்டராகிவிடலாம் எனும் அறியாமையில் சிக்கிக் கொள்வார்கள். பருவ வயதில் ஏற்படும் இயல்பான, பாலின ஈர்ப்பை இந்தப் படம் மலினமாக்குகிறது. வைரத்துக்குப் பதிலாகக் கண்ணாடிக் கல்லைப் போற்றுவது போல, சரியான வயதில் ஏற்படும் உண்மையான காதல் உணர்வுகளையும், பொறுப்புகளையும், அதன் உன்னதமான அழகையும் இதனால் இழக்க நேரிடலாம். தேர்வுகள், மதிப்பெண்கள், ஆசிரியர்களின் அறிவுரைகள் ஆகியவற்றைப் படம் முற்றிலும் புறக்கணிக்கிறது. இது, படிக்காவிட்டாலும் வாழ்க்கை நல்லபடியாக ஓடிவிடும் போலிருக்கிறது என்ற ஆபத்தான சிந்தனையை மனதில் விதைக்கலாம். பெற்றோர்கள் மிகவும் பலவீனமாகவோ அல்லது பிள்ளைகளின் தவறுகளுக்குத் துணை போவது போலவோ காட்டப்படுகிறார்கள். இது மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் கவலைகளையும், எதிர்பார்ப்புகளையும் மதிக்காமல் இருக்க வழிவகுக்கும். பெற்றோர்களின் நியாயமானக் கண்காணிப்பே அவர்களுக்குச் ’சுமை’யாகவும் தெரியும். அதே நேரம், இப்படியான படங்கள் அனைத்து மாணவர்களையும் பாதிக்கும் என்று நாம் நினைத்திடவில்லை, ஆனால், இதனால் ஒரு மாணவன் பாதிக்கப்பட்டாலும் அது துயர்தானே? ஒரு சினிமா, விளையாட்டுத்தனமான ஒரு மாணவனை படிப்பின் மீது திருப்பச் செய்யவேண்டுமா? அல்லது நன்றாகப் படிக்கும் மாணவன் ஒருவனது கவனத்தைச் சிதறடிக்க வேண்டுமா?

சினிமா என்பது ஒரு கலை வடிவம் என்றாலும், சமூகத்திற்கு, குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு அது வழங்கும் செய்திகள் மிகவும் முக்கியமானவை. நமது திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதார்த்தமான, ஊக்கமளிக்கும் நல்ல கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஊடக விழிப்புணர்வை (Media Literacy) ஏற்படுத்த வேண்டும். சினிமாவின் அபத்தங்களுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்கவும், ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம்!

Puthuyugam
www.puthuyugam.com