நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள' ஜனநாயகன்' படம் தேர்தல் முடிவுகள் வெளி வந்ததும், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்ததால், அவரின் கடைசிப்படமாக 'ஜனநாயகன் ' பார்க்கப்பட்டது. அவர்கள் தரப்பிலும் அப்படியான செய்திகளே கசியவிடப்பட்டன. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. கே.வி.என் புரொடக்ஷ்ன் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த படம் தயாராகியுள்ளது. நடிகர் விஜய் இந்தப் படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடிக்க, பூஜா ஹேக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டிய இந்த படம் சிக்கலில் சிக்கிக் கொண்டது. அட்வான்ஸ் புக்கிங் மட்டும் 100 கோடி வசூலாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஜனநாயகன் முழுப்படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக படத்தின் எடிட்டர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த நிலையில், சென்சார் போர்டிலுள்ள அனைத்து பிரச்னைகளையும் படத் தயாரிப்பு நிறுவனம் தீர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.எனவே, தேர்தல் முடிவு வெளியான பிறகு, மே 8ம் தேதி 'ஜனநாயகன்' படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. இது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும். நடிகர் விஜய் நடித்த கடைசிப்படம் என்று கூறப்படுவதால், அவரின் ரசிகர், ரசிகைகளும் படத்தைக் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
'ஜனநாயகன்' படம் ரிலீஸ் செய்யப்படுவதால், நடிகர் விஜய் கடும் உற்சாகத்தில் இருந்த விஜயிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் திருச்செந்தூர் சென்று முருகரை வழிபடும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு அவர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார். விஜயுடன் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மேலும், 8 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக அதிகாலையில் திருச்செந்தூர் சென்றடைந்தார். கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. மதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நடிகர் விஜயைக் காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்தனர். அதிகாலையில் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து கோயிலுக்கு சென்ற விஜய், முருகரை மனமுருகி வழிபட்டார். அப்போது, அவருக்கு கோயில் சார்பாக பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் ரசிகர்கள் விஜய் கையில் வெற்றியின் அடையாளமான வேல் வழங்கி வாழ்த்தினர். முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கும் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முருகன் சூரபத்மனை வதம் செய்து வெற்றி பெற்ற தலம் இது. தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறவும், 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்ட வெற்றிக்காகவும் நன்றி செலுத்த முருகக் கடவுளை விஜய் வழிபட்டதாக , அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.