நடிகர் ஜெயராம் மலையாளத்தில் 1986-ம் ஆண்டு 'அபரன்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், மலையாளத்தில் முன்னணி நடிகராக மாறினார். 1992ம் ஆண்டு வெளியான 'கோகுலம்' படத்தின் வழியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பெற்றார்.
நடிகர் ஜெயராம் ஒரு முறை பெரிய சர்ச்சையில் சிக்கினார். 2010ம் ஆண்டு ஜெயராம் நடித்து 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் வேலைக்காரப் பெண்ணை வளைத்து போட முயலும் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்தப் படம் குறித்து மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'நிஜ வாழ்க்கையில் நீங்கள் இப்படியா?' என்று கேட்கப்பட்டது. அப்போது, ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. எருமை மாதிரி இருப்பாள். அவளைப் போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?' என்று பதிலளித்து விட்டார். அவரின், இந்த பதில் தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தது. பெரிய எதிர்ப்பு எழுந்தது. ஜெயராம் தமிழகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. சென்னை வளசரவாக்கத்திலுள்ள ஜெயராமின் வீடு நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்டது. இதனால், பதறிப் போன ஜெயராம், கண்ணீல் மல்க தமிழ்ப் பெண்களிடத்தில் மன்னிப்பு கேட்டார். அப்போது, 'நானும் தமிழ்நாட்டுக்காரன்தான். அப்படியிருக்க நான் அப்படி பேசியிருக்கக் கூடாது' என்று ஜெயராம் உருக்கமாக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அந்தப் பிரச்னை அத்துடன் முடிவுக்கு வந்தது.
நடிகர் ஜெயராமின் தாயார் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தந்தைக்கு பாலக்காடு. சிறு வயதில் கும்பகோணத்தில்தான் அவர் வசித்து வந்துள்ளார். பின்னர், மலையாளப்படங்களில் நடித்துப் பிரபலமானாலும், அவர் குடும்பத்துடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். இவரது, மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழகத்தைச் சேர்ந்த தாரிணி காளிங்கராயர் என்ற பெண்ணைத்தான் மணம் முடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயராமைச் சுற்றி மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது. இப்போது, மலையாளிகள் அவர் மீது பாய்ந்துள்ளனர். கடந்த 23ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. காளிதாஸ் ஜெயராம், அவரின் மனைவி தாரிணி, நடிகர் ஜெயராம் , பார்வதி ஆகியோர் சென்னையில் வாக்களித்தனர். சென்னையிலுள்ள வாக்குச்சாவடியில் காளிதாஸ் ஜெயராம் வாக்களிக்க கியூவில் நிற்கும் புகைப்படமும் வெளியானது. இதைப் பார்த்ததும், மலையாளிகள் கொதித்துப் போனார்கள். 'படம் நடிப்பது இங்கே, பணம் சம்பாதிப்பது இங்கே... ஆனால், வாக்களிப்பது மட்டும் சென்னையிலா? இனி உங்கள் படங்களை சென்னையில் ரிலீஸ் செய்து கொள்ளுங்கள். இவர்கள், நடித்த படங்கள் கேரளத்தில் வெளியிடக் கூடாது ' என்றும் காட்டமாக விவாதிக்க தொடங்கினர்.
இதையடுத்து , காளிதாஸ் தன்னையும் தனது குடும்பத்தினரையும் விமர்சித்தவர்களுக்கு அமைதியான முறையில் இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'நான் சென்னையில் வசிக்கிறேன். எங்கே வசிக்கிறோமோ... அங்கே வாக்களிப்பதுதான் ஜனநாயகக் கடமை' என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, பலரும் காளிதாஸ் ஜெயராமுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியுள்ளனர். 'பிறப்பால் மலையாளிகளாக இருந்தாலும், ஜெயராம் குடும்பத்தினர் நீண்ட காலமாக சென்னையில்தான் வசிக்கின்றனர். எனவே, அவர்கள் அங்கு வாக்களித்ததில் என்ன தவறு இருக்கிறது ?' என்றும் விமர்சித்தவர்களுக்கு நெட்டிசன்களே பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் ஜெயராம் மட்டுமல்ல சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. அவரும் இங்கேதான் தனது வாக்கைப் பதிவு செய்தார் . நடிகர் ரகுமான், நடிகை ஊர்வசி போன்றவர்களும் இங்கேதான் வாக்கினைப் பதிவு செய்தனர் . இவர்களெல்லாம் பல ஆண்டு காலமாக சென்னையில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.