ரியாலிட்டி ஷோக்கள் என்ன செய்கின்றன? #RealityShows

ரியாலிட்டி ஷோக்கள் (Reality Shows) இன்று நம்மிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவை பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் மனநிலை, ரசனை மற்றும் மதிப்பீடுகளை மாற்றியமைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இப்போது மாறியுள்ளன.
Tamil Reality Shows
Tamil Reality Shows
Published on

உங்கள் டிவி ரிமோட்டை எடுத்து ரேண்டமாக ஏதாவது ஒரு தமிழ் சேனலில், ஏதாவது ஒரு சீரியலைப் போட்டுப் பாருங்களேன். ஒரு பெண், இன்னொரு பெண்ணைக் கவிழ்க்கவோ, பழிவாங்கவோ நினைத்துத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார். அல்லது இரண்டு பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். நமது பெண்கள், இப்படியான டிவி சீரியல்களில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை இன்னும் பிற்போக்குத் தனங்கள் மலிந்த மாமியார்- மருமகள்- நாத்தனார் போன்ற குடும்ப உறவுகளையே சுற்றிச்சுற்றிப் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன… என்று விமர்சித்துக் கொண்டிருக்கும் போதே, ஆண்கள் மட்டுமென்ன ரொம்ப முதிர்ச்சியா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் பிக்பாஸின் ஒரு எபிஸோடைக்கூட தவறவிடுவதில்லை. இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள், குக்கு வித் கோமாளியை ஒரு எபிஸோடு தவறவிடாமல் பார்ப்பவராக இருக்கலாம். சூப்பர் சிங்கரையும், நீயா நானாவையும் ஒரு எபிஸோடு தவறவிடாத என் நண்பர்களை அறிவேன். 

இப்படியாக ரியாலிட்டி ஷோக்கள் (Reality Shows) இன்று நம்மிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. நீயா நானா, பிக்பாஸ், குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, சொல்வதெல்லாம் உண்மை, சூப்பர் சிங்கர், மாஸ்டர் செஃப், தமிழோடு விளையாடு போன்ற பல தமிழ் நிகழ்ச்சிகள் சக்கை போடு போடுகின்றன. ஆனால், அவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் மனநிலை, ரசனை மற்றும் மதிப்பீடுகளை மாற்றியமைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இப்போது மாறியுள்ளன என்று கருதப்படுகிறது. 

1. சமூகத்தில் நேர்மறைத் தாக்கங்கள்


ரியாலிட்டி ஷோக்களில் சாமானிய மனிதர்களின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது. பாடல், நடனம், நடிப்பு, நகைச்சுவை, சமையல் போன்ற தங்கள் தனிதிறமையால் புகழ் பெற அவை ஒரு கருவியாக அமைகின்றன. இது ’யாரும் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கையைச் சமூகத்தில் விதைக்கிறது. திருநங்கைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் பல்வேறு வாழ்வியல் பின்னணி கொண்டவர்களைப் பிரதான ஊடக வெளிச்சத்திற்கு இவை கொண்டு வருகின்றன. இந்தப் பன்முகத்தன்மை (Inclusivity) அவர்கள் மீதான சமூகப் பார்வையை, தவறான புரிதல்களை நேர்மறையாக மாற்ற உதவுகிறது. மனநலம், பாலினச் சமத்துவம், தனிமனித உரிமைகள் போன்ற பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயங்களை இத்தகைய நிகழ்ச்சிகள் விவாதப் பொருளாக மாற்றுகின்றன. இது மிக ஆரோக்கியமானது. நீயா நானா, தமிழா தமிழா போன்ற விவாத நிகழ்ச்சிகளில் அரசின் செயல்பாடுகள், மூட நம்பிக்கைகள், அறிவியலுக்கு எதிரான செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. உறவுச்சிக்கல்கள், சமூக ஒழுங்குகள் போன்றவை விவாதிக்கப்படுகின்றன. நிகழ்ச்சி முடிந்தபின், சமூக ஊடகங்களிலும் அவை அலசப்படுகின்றன. இவை தனிப்பட்ட ஒருவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தவிர, அந்த தனிப்பட்ட ஒருவர் மூலமாக சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கின்றன.


2. எதிர்மறைத் தாக்கங்கள் மற்றும் சவால்கள்


மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, சண்டைகளை ஒளிவு மறைவின்றிப் பார்ப்பதால், 'வாயெரிஸம்' (Voyeurism - பிறர் வாழ்வை எட்டிப் பார்த்தல்) எனும் பழக்கம் நமக்கு ஊக்குவிக்கப்படுகிறது, அது தனியுரிமையின் (Privacy) மதிப்பைக் குறைக்கிறது. 'ரியாலிட்டி' என்று அழைக்கப்பட்டாலும், சுவாரசியத்திற்காகப் இந்நிகழ்ச்சிகளின் பல தருணங்கள் திட்டமிட்டுத் தூண்டப்படுகின்றன. இதை அறியாத நேயர்கள், இந்தப் போலி பிம்பங்கள் (Scripted Reality) தரும் மாயையினால் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சிலர் நிஜ வாழ்க்கையிலும் அதே போன்ற நாடகத்தனமான எதிர்வினைகளை (Dramatic Reactions) செய்யக்கூடும், எதிர்பார்க்கக்கூடும். ஒரு சில மணிநேரத் தொகுப்புகளைப் பார்த்துவிட்டு, ஒரு மனிதனின் குணநலனை முழுமையாகத் தீர்மானிக்கும் நிலைக்குப் போகிறோம். இது சமூக வலைதளங்களில் 'சைபர் புல்லியிங்' (Cyber Bullying), தீர்ப்பளிக்கும் மனநிலை (Judgmental Culture) மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு வழிவகுக்கிறது. சண்டைகள், அழுகை மற்றும் ஆக்ரோஷமான விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், வன்முறை மற்றும் கோபம் என்பது ஒரு சாதாரணமான விஷயம்தான் (Normalizing toxicity) என்ற எண்ணம் இளைஞர்களிடையே பரவவும் வாய்ப்புள்ளது.

3. சந்தைப்படுத்தலும் நுகர்வோர் கலாச்சாரமும்


ரியாலிட்டி ஷோக்கள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, இவை மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை உருவாக்குகின்றன. விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் கலாச்சாரத்தை மிகத் தீவிரமாகப் பரப்புகின்றன. ஒரு போட்டியாளர் பயன்படுத்தும் உடை முதல் அவர் பேசும் மொழி வரை அனைத்தும் ஒரு 'பிராண்ட்' ஆக மாற்றப்படுகிறது. தமிழ் சரியாக பேச வராத ஷாலின் ஸோயா, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆங்கராக ஆக்கப்படுகிறார். இதெல்லாம் ஒரு வகையான பிராண்டிங்!

ரியாலிட்டி ஷோக்கள் என்பவை இருபுறமும் கூர்மையாக கத்தியைப் போன்றவை. அவை சமூகத்தின் கண்ணாடியாகச் செயல்பட்டு, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தாலும், அந்தக் கண்ணாடி சில நேரங்களில் பிம்பங்களை வளைத்தும் காட்டுகிறது. பல நேரங்களில் டிஆர்பியைக் குறிவைத்து எழுதப்படும் திரைக்கதைகளாகவும் இருக்கின்றன. ஒரு பார்வையாளராக, இவற்றிலிருந்து எதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், எதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற 'ஊடக விழிப்புணர்வு' (Media Literacy) நமக்கிருந்தால், இவற்றால் எந்த பாதிப்புமிருக்காது.

Puthuyugam
www.puthuyugam.com