"ஃபிட்டாக இருப்பது எப்படி?"- ஆர்யா பகிர்ந்த ரகசியம்! #Fitness

''தினமும் காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவும் மஞ்சள் பொடி, எலுமிச்சைச்ச் சாறு கலந்து குடிப்பேன். சிலர், இதில் தேன் அல்லது தேங்காய் எண்ணைய் கூட கலந்து குடிப்பார்கள். ''
actor arya in gym
actor arya in gym
Published on

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘மிஸ்டர் X’ படத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் 20 அடி ஆழமான நீச்சல்குளத்தில் ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, வெற்றுடம்பில் பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் ஆர்யா நடித்த காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, 15 முதல் 16 டிகிரி வரை இருந்த நீர் குளிர்ந்திருந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், “பெரும்பாலும் இந்திய சினிமாவில் தண்ணீருக்கடியிலான காட்சிகள் ஆறு அடி ஆழத்தில் மூழ்கிய மேடைகளைப் பயன்படுத்தியே எடுத்து வந்தோம். ஆனால் மிஸ்டர் X- படத்தில் நடிகர் ஆர்யா ஆழமான கடலில் 20 அடி ஆழத்திற்கு செல்லும் காட்சியை தத்ரூபமாக எடுக்க வேண்டியிருந்தது. தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் முயற்சிக்காத ஒன்றை இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட கடினமான காட்சிகளில் நடிக்க உடலில் தனித்திறன் கொண்டிருக்க வேண்டும். நடிகர் ஆர்யா உடலை பிட்டாக வைத்திருப்பவர். சமீபத்தில் அவர் ஜிம்மில் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்தால் 45 வயது ஆர்யாவா இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு ஜிம்மில் பயிற்சிகளை அட்டகாசமாக மேற்கொண்டு பிட்டாக உள்ளார். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஆர்யா எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை.

actor arya underwater seen

தனது பிட்னெஸ் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது, ''உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பேன். நண்பர்களுடன் ஏதாவது, டீ கடைக்குச் சென்றால் கூட , டீ மற்றும் பிஸ்கட்டுடன் முடித்துக் கொள்வேன். அப்போது, அவர்கள் 'இந்தா போண்டா சாப்பிடு... நல்லாருக்கும், கொத்து பரோட்டா சாப்பிடு... நல்லாருக்கும்' என்று ஆசை காட்டுவார்கள். ஆனால், நான் சாப்பிட மாட்டேன். வெளிநாடுகளுக்குப் படபிடிப்புக்கு சென்றாலும், எனது சமையல்காரரைக் கொண்டு சமைத்து சாப்பிடுவேன். அது, பெரும்பாலும் கபாப் மற்றும் ரொட்டியாகத்தான் இருக்கும். மற்ற நண்பர்கள் அந்த நாட்டில் என்ன பாப்புலரான உணவோ அதைத் தேடிப்போய் சாப்பிடுவார்கள். ஆனால், எனக்கு எனது அறையிலேயே எனக்கான உணவு முடிந்து விடும்.

தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவும் மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு கலந்து குடிப்பேன். சிலர், இதில் தேன் அல்லது தேங்காய் எண்ணைய்கூட கலந்து குடிப்பார்கள். டீ, காபிக்கு பதிலாக இந்த பானம் உடலுக்கு மிகவும் நல்லது. காலை பிரேக்பாஸ்ட்டில் கண்டிப்பாக முட்டை இருக்கும். நான் முற்றிலும் அரிசி உணவை தவிர்க்கவில்லை. தினமும் 200 கிராம் வரை சாதம் எடுத்துக் கொள்வேன். என்ன உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால், நாம் அவற்றை எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.

டின்னர் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவேன். தற்போது, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதனால், காலை பிரேக்பாஸ்ட்டுக்கு பிறகு, மதியம் லஞ்ச் 2.30 மணிக்கு சாப்பிடுகிறேன். இரவு உணவு எடுத்துக் கொள்வதில்லை. அடுத்த நாள் காலை ஜிம்மில் பயிற்சியை முடித்த பிறகு, மீண்டும் காலை உணவு சாப்பிடுகிறேன். அதாவது, கிட்டத்தட்ட 8 முதல் 16 மணி நேரம் உணவு எடுத்துக் கொள்வதில்லை. இரவில் நன்றாக உறங்குகிறேன். பொதுவாக, நன்றாக சாப்பிட்டால்தான் நல்ல உறக்கம் வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது தவறு. நாம் உறங்கும் போதுதான், நமது உடலின் உள்ளுறுப்புகள் பணிகளை செய்ய தொடங்கும். இரவில் நிறைய சாப்பிட்டால், உடல் செரிமானத்துக்கே உடல் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே, இரவு உணவைக் குறைவாக எளிதாக ஜீரணிக்க கூடியதாக சாப்பிடுங்கள். இனிப்பு, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மன அழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கிறது.'' இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.

‘மிஸ்டர் X’ படம் ஏப்ரல் இன்று (ஏப்ரல் 17) ரிலீசாகிறது. நடிகர் ஆர்யாவுடன் மஞ்சுவாரியார், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் த்ரில்லர் ஸ்பெஷலாம்!

Puthuyugam
www.puthuyugam.com