மொழிகள் கடக்கும் நமது சினிமா ரசனை!

அன்பும், மனித நேயமும்தான் நாடுகளின் எல்லைக்கோடுகளை வலுவிழக்கச் செய்யும் கருவிகள் என்பார்கள். அதில் சினிமாவுக்கும் பங்கிருக்கிறது. கலை என்பது மனிதர்களின் ஆதார மொழி!
Majid Majidi Movies
Majid Majidi Movies
Published on

மொழிகள் வெவ்வேறானாலும், மனித உணர்வுகள் ஒன்றுதான் என்பதை உலக சினிமாக்கள் நமக்குத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. ஒரு காலத்தில் மேலோட்டமான பொழுதுபோக்கு சாதனமாக இருந்த சினிமா, இன்று OTT தளங்களின் வருகையால், தமிழ் ரசிகர்களின், இளைஞர்களின் ரசனையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சினிமா, மொழிகள் கடந்து எப்படி நம்மை இணைக்கிறது?

சினிமா என்பது ஒரு 'காட்சி மொழி' (Visual Language) ஊடகம். ஒரு தாய் தன் குழந்தையைப் பிரிந்து அழும் காட்சியில், அவர் என்ன மொழி பேசுகிறார் என்பது முக்கியமல்ல, அந்த அழுகை தரும் வலி நம் எல்லோருக்குமானது. ஒரு ரஷ்யக் குடும்பத்தின் சமையலறையையோ அல்லது ஒரு கொரியன் தெருவையோ பார்க்கும்போது, அவர்களின் பண்பாடு நமக்கு அறிமுகமாகிறது. நாம் நம்முடன் ஒப்பிட்டுக்கொள்ள அதில் எதுவோ இருக்கிறது. அது ’அந்நியர்’ என்ற எண்ணத்தை மாற்றி, சக மனிதர்கள் எனும் புரிதலை உருவாக்குகிறது. வறுமை, ஊழல், காதல் மற்றும் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை போன்ற சமூகப் பிரச்சினைகள் நமக்கானவை மட்டுமல்ல, உலகெங்கும் பொதுவானவை. ஒரு நாட்டில் எடுக்கப்பட்ட படம் மற்றொரு நாட்டுப் பார்வையாளனுடன் ஒன்றிப் போவது இந்தக் காரணங்களால்தான்.

1. ஈரானிய சினிமா: எதார்த்தமும், எளிமையும்!


2000த்தின் தொடக்க காலங்களில் நம் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், உலக சினிமா விழாக்களில் மஜித் மஜிதியின் சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி கலர் ஆஃப் பாரடைஸ் போன்ற ஈரானியப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து சிலாகித்து கட்டுரைகள் எழுதி வைப்பார்கள். அப்போது ஆஹா, நாமெல்லாம் இப்படியான படங்களைப் பார்க்கமுடியாதா எனும் எண்ணம் ஏற்படும். ஆனால், கொஞ்ச காலத்திலேயே சிடிக்களும், சிடி பிளேயர்களும் அறிமுகமாகி, ஈரானிய சினிமாக்கள் மட்டுமல்ல, உலகின் உன்னதமான படங்கள் பலவும் நம்மை வந்தடைந்துவிட்டன. அது தமிழ் ரசிகர்களிடம், சினிமா குறித்த ரசனை மாற்றத்தை ஏற்படுத்தின. பிரம்மாண்டமான செட்கள், கோடிக்கணக்கான பட்ஜெட் இல்லாமலேயே, ஒரு சிறுவன் தொலைத்த செருப்புகளை மையமாக வைத்து மனித மனங்களை உலுக்கும்படியான உலகத்தரம் வாய்ந்த கதைகளைச் சொல்ல முடியும் என்பதை அவை உணர்த்தின.

Korean Movies and Web Series
Korean Movies and Web Series



2. கொரிய சினிமா: திரைக்கதை வேகம்!


ஓடிடிகளின் வரவுக்குப் பிறகு நம்மிடையே பிரபலமாகியிருக்கும் இன்னொரு மொழி கொரியன். தி கால் (The Call - 2020), டிசிஷன் டு லீவ் (Decision to Leave - 2022) போன்ற கொரிய சினிமாக்களும், ஸ்குவிட் கேம் (Squid Game), ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட் (All of Us Are Dead) போன்ற 'கே-டிராமாக்கள்' (K-Dramas) என்று வகைப்படுத்தப்படும் தொடர்களும் இன்று தமிழகத்தின் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். வர்க்க வேறுபாடு, குடும்ப அமைப்புகள் போன்றவற்றில் கொரியச் சூழலுக்கும் தமிழகச் சூழலுக்கும் இருக்கும் ஒற்றுமை, தமிழ் ரசிகர்களை அந்தப் படங்களோடு எளிதில் ஒன்றச் செய்கிறது. போலவே, இசை என்பதைத் தாண்டி உலகளாவிய அளவில் ஒரு 'கலாச்சார நிகழ்வாக' (Global Phenomenon) மாறியுள்ள K-Pop எனும் கொரிய இசை வடிவமும் நம்மிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உங்கள் வீட்டுச் சிறார்களைக் கேட்டுப் பாருங்கள். பிடிஎஸ் (BTS - Bangtan Sonyeondan), பிளாக்பிங்க் (Blackpink), எக்ஸோ (Exo) போன்ற இசைக்குழுக்களைப் பற்றிய தகவல்கள் நிச்சயம் கிடைக்கும்.

3. ஜப்பானிய அனிமே (Anime): எல்லையில்லா கற்பனை!


ஜப்பானிய 'அனிமே' படங்கள் அதன் கருத்தாழமிக்க கதைகளுக்காக உலகப்புகழ் பெற்றவை. போரின் பின் விளைவுகளை, வலிகளை, உணர்வுகளையெல்லாம் அனிமேஷனில் எவ்வளவு கவித்துவமாகக் கடத்த முடியும் என்பதை அவை நிரூபித்தன. ஆனால், 2000க்குப் பிறகான அனிமே படங்களின், தொடர்களின் வீச்சு தமிழ்நாட்டின் இளைஞர்கள் வரை வந்து சேர்ந்திருக்கிறது. அனிமே கலாச்சாரம் ஒரு மிகப்பெரிய ரசனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கதையின் ஆழமும், கதாபாத்திர வடிவமைப்பும் (Character Arcs) அனிமேஷனில் எவ்வளவு வலிமையாக வெளிப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஜுஜுட்சு கைசன் (Jujutsu Kaisen), டெத் நோட் (Death Note) போன்ற புகழ்பெற்ற தொடர்களோடு சமீபத்தில் ஒரு டிரைலாஜி சினிமாவாக வெளியாகி தமிழ்நாட்டிலேயே சக்கைபோடு போட்ட டிமோன் ஸ்லேயர் (Demon Slayer: Kimetsu no Yaiba – Infinity Castle) போன்ற படங்களுமே இதற்குச் சான்றுகள்.

அன்பும், மனித நேயமும்தான் நாடுகளின் எல்லைக்கோடுகளை வலுவிழக்கச் செய்யும் கருவிகள் என்பார்கள். அதில் சினிமாவுக்கும் பங்கிருக்கிறது. கலை என்பது மனிதர்களின் ஆதார மொழி! இந்த ரசனை மேம்பாடு, கலாச்சாரக் கலப்பு அதை இன்னும் மேம்படுத்தட்டும்!

Puthuyugam
www.puthuyugam.com