”நானென்ற சொல் இனி வேண்டாம், நீயென்பதே இனி நான்தான்… இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை, இதுபோல வேறெங்கும் சொர்க்கமில்லை!”- நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி எனும் மறக்கமுடியாத, அற்புதமான இளையராஜாவின் பாடலுக்கு, காதலின் குரலாக வந்தவர் ஆஷா போஸ்லே! அதே குரல்தான், நமது மண்ணின் இசையான, ‘செண்பகமே... செண்பகமே’ பாடலையும் பாடியிருக்கிறது. அலைபாயுதேவின், ’செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்’ என்ற துள்ளலான பாடலைப் பாடியவரும் அவரே! மூன்றும் மூன்று விதமானவை! ஆஷாவைப் போன்றதொரு பன்முகத்தன்மை (Versatile) கொண்ட ஒரு பாடகரைக் காண்பது அரிதானது!
ஆஷா போஸ்லே (Asha Bhosle) இந்தியத் திரைப்பட இசையுலகின் மிகவும் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். 1933ஆம் ஆண்டு பிறந்த அவர், ஏப்ரல் 12 அன்று தனது 92வது வயதில், மூப்பு காரணமான நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவரது தந்தையான இசை வல்லுநர் தீனநாத் மங்கேஷ்கர் (Deenanath Mangeshkar) அவர்களின் வழிகாட்டுதலால், இசையின் அடிப்படைகளை கற்றுக்கொண்ட ஆஷா, அவருடைய சகோதரி லதா மங்கேஷ்கரைப் (Lata Mangeshkar) போலவே சிறு வயதிலேயே இசையுலகிற்கு வந்துவிட்டார். லதா மங்கேஷ்கர் இந்திய இசை வரலாற்றின் ஒரு சகாப்தம் என்பதால், இசையுணர்வு இவர்களின் குடும்பத்தில் இயல்பாகவே ஓடியதில் வியப்பில்லை.
அதே நேரம் மிகப்பெரும் ஆளுமைகளின் உடன்பிறப்பாகவோ, மகனாகவோ, மகளாகவோ இருக்கும் நிலை என்பது அத்தனை எளிதானதல்ல. தனக்கான அடையாளத்தை உருவாக்கிடவும், நிரூபிக்கவும் மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியது வரும். லதா மங்கேஷ்கரால், அந்த நிலை ஆஷாவுக்கும் இருந்தது. மேலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், இளம் வயது திருமணம், அதுசார்ந்த சிக்கல்கள் என மனதளவிலான பாதிப்புகளும் இருந்தன.
இந்த சவால்களை எல்லாம் தாண்டி, ஆஷா போஸ்லே மற்றவர்களைப் போல பாடாமல், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பயணத்தைத் தொடங்கினார். இசையமைப்பாளர் ஓபி. நய்யருடன் (O. P. Nayyar) இணைந்தது அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கூட்டணி மூலம் ஆஷா ஒரு புதிய குரல் அடையாளத்தை உருவாக்கினார். அது கம்பீரமான, ஸ்டைலிஷான, துள்ளலான (Bold, Stylish, Rhythmic) ஒரு குரல்! காதல், துயரம், கவர்ச்சி, மகிழ்ச்சி — என எந்த உணர்வாக இருந்தாலும் அதை உயிரோட்டமாக வெளிப்படுத்தும் வல்லமை அந்தக் குரலுக்கு இருந்தது.
அடுத்து ஆஷாவின் இசைப் பயணத்தில், முக்கியமான இடம் இசையமைப்பாளர் ஆர்டி பர்மனுக்கு (R. D. Burman) உண்டு. இவருடன் இணைந்து உருவாக்கிய “Dum Maro Dum”, “Piya Tu Ab To Aaja” போன்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் தேர்வாக உள்ளன. அதேபோல் எஸ்டி. பர்மன் (SD. Burman), கய்யாம் (MZ. Khayyam), இளையராஜா (Ilayaraja) மற்றும் ஏஆர். ரகுமான் (A. R. Rahman) போன்ற இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு சிறப்பான பாடல்களைத் தந்துள்ளார். அதோடு கிளாஸிகல், வெஸ்டர்ன், நாட்டுப்புற இசை, கஸல், பாப், காபரே (Classical, Western, Folk, Ghazal, Pop, Cabaret) என ஏராளமான இசை வடிவங்களையும் மிகச் சிறப்பாக முயற்சித்தவர் ஆஷா. லதா மங்கேஷ்கர், பி. சுசீலா, எஸ். ஜானகி, எஸ்பி. பாலசுப்ரமணியம் போல மிக அதிக பாடல்களைப் பாடியவர்கள் எனும் பட்டியலிலும் ஆஷா போஸ்லேவுக்கு இடமுண்டு. குறைந்தபட்சமாக 12000+ பாடல்கள் அவர் பாடியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
அவருடைய இசைப் பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருதையும், இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.
ஆஷா போஸ்லே ஒரு பாடகி மட்டுமல்ல; இந்திய சினிமா இசையின் பரிணாமத்தை பிரதிபலிக்கும் ஒரு சின்னமாக விளங்குகிறார். அவரது குரல், பல தலைமுறைகளின் நினைவுகளிலும், உணர்வுகளிலும் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். லதாவும், ஆஷாவும் இல்லாத இந்தியத் திரையிசையை நினைத்துப் பார்க்க சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற பாடல்கள் ஒருபோதும் மரிப்பதில்லை. அந்த இசை மணம், காலங்கள் கடந்தும் காற்றில் நீடித்திருக்கும்.