

இந்தாண்டு தொடக்கத்தில், வாச்சாத்தி (Vachathi – The Long March For Justice) சம்பவம் குறித்து, கம்யூனிஸ்ட் தோழர்கள் உருவாக்கிய ஆவணப்படம் ஒன்று வெளியாகி நம் அனைவரையும் உலுக்கியெடுத்தது. முன்னதாகவே நாம் வாச்சாத்தி குறித்து அறிந்திருக்கிறோம். ஆனால், அவையெல்லாமே அச்சு மற்றும் பிற ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலமாக கிடைத்த ஒரு உருவகம்தான். தகுந்த ஆதாரங்களோடு, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களோடு, களத்தில் நின்ற போராளிகளின் அனுபவங்களோடு நாம் அந்த நிகழ்வை ஓர் ஆவணமாகப் பார்க்கும் போது கிடைக்கும் மனநிலையே வேறுதான். அதைத்தான் சரியான ஆவணப்படங்கள் செய்கின்றன.
சினிமாக்கள் கனவுகளை விற்கின்றன என்று கொண்டால், ஆவணப்படங்கள் (Documentaries) முகத்தில் அறையும் உண்மைகளை, சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருகின்றன. ஒரு கேமரா, ஒரு மைக்ரோஃபோன் மற்றும் ஒரு துணிச்சலான உண்மை இருந்தால் போதும், அதிகாரத்தையே வீழ்த்தும் வலிமை கொண்ட கருவிகளாக ஆவணப்படங்களை மாற்றிவிட முடியும்.
ஆவணப்படம் என்பது வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல, அது ஒரு நிகழ்வின் சாட்சியம். காலத்தால், சுவடுகள் அழிந்துபோகாமல் பாதுகாக்கவும், அதிகார மையங்களால் மறைக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும் ஆவணப்படங்களே முதன்மைக் கருவிகளாக இருக்கின்றன.
1. விழிப்புணர்வு மற்றும் கல்வி (Awareness & Education)
பல நேரங்களில் ஒரு சமூகப் பிரச்சினை பற்றிய தரவுகள் அரசாங்க அறிக்கைகளில் தூங்கிக் கொண்டிருக்க நேர்கிறது. அது ஓர் ஆவணப்படமாக மாறும்போதுதான், மக்களிடம் வீரியமாகச் சென்று சேரமுடியும். சூழலியல் மாற்றங்கள், பழங்குடி மக்களின் நில உரிமைப் போராட்டங்கள் அல்லது நோய்கள் பற்றிய விழிப்புணர்வை, வெறும் அறிக்கைகளால் மட்டுமே மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட முடியாது. உலகளாவிய அளவில் 'Inconvenient Truth' போன்ற ஆவணப்படங்கள்தான் புவி வெப்பமடைதல் குறித்த பார்வையை மக்களிடம் கொண்டு சேர்த்தன. நிஜ நோயாளிகளின் ஆவணப்படங்களை ஒவ்வொரு சினிமாவின் தொடக்கத்திலும் இணைத்ததன் மூலமாக, புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை நம் மக்களிடம் கொண்டு சென்று, ஒரு சமூக மாற்றத்தையே நம்மால் உருவாக்க முடிந்தது.
2. குரலற்றவர்களின் குரல் (Giving Voice to the Voiceless)
அதிகாரம் மற்றும் பணபலம் இல்லாத எளிய மனிதர்களின் கதைகளைச் சொல்ல ஆவணப்படங்கள் ஒரு மேடையாக அமைகின்றன. பாதிக்கப்பட்ட மனிதர்களே நேரடியாகத் திரையில் தோன்றித் தங்கள் வலிகளைப் பேசுகிறார்கள். அந்த உண்மைக்கு இருக்கும் வலிமை தனித்துவமானது. இது பார்வையாளர்களிடம் ஒரு மிகப்பெரிய அனுதாபத்தையும் (Empathy), நீதிக்கான வேட்கையையும் உருவாக்குகிறது.
3. வரலாற்று ஆவணம் (Historical Record)
சினிமாக்களிலும் நிஜ சம்பவங்கள், இரண்டாம் உலகப்போர் போன்ற வரலாற்றுத் தருணங்கள் பேசப்படுகின்றனதான். ஆனால், சினிமாக்கள் எப்போதுமே வரலாற்றை மிகைப்படுத்துகின்றன, அல்லது சுவாரசியத்துக்காகவும், சினிமாவின் வடிவத்துக்காகவும் உண்மையை திரித்துவிடுகின்றன, வசதிக்கேற்ப வளைத்துவிடுகின்றன. ஆனால், ஆவணப்படங்கள், கடந்த கால வரலாறுகளை சாட்சிகளின், தரவுகளின் அடிப்படையில் ஆய்கின்றன. நிகழ்காலத்தில் நிகழும் சம்பவங்களை, போராட்டங்களை, கலாச்சார மாற்றங்களை அப்படியே பதிவு செய்து நம்பிக்கைக்குரிய வரலாறாக மாற்றுகின்றன.
அதே வேளையில், ஆவணப்படங்கள் எனும் போர்வையில், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தையோ அல்லது அரசியல் நோக்கத்தையோ திணிக்கும் 'பரப்புரை' (Propaganda) வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது. தகவல்களைத் தங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுத்து வழங்குவது, உணர்ச்சிகரமான பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு மூலமாக பார்வையாளர்களை திசைதிருப்புவதும் (Manipulation) சாத்தியமே! தி டிண்டர் ஸ்விண்ட்லர் (The Tinder Swindler) எனும் ஆவணப்படம் சைமன் லிவிவ் என்ற நபர், டிண்டர் செயலி வழியாகப் பெண்களை ஏமாற்றிப் பல கோடி ரூபாய்களைப் பறித்ததை விளக்கியது. ஆனால், ஆவணப்படம் என்ற வரையறைகளைத் தாண்டி, குற்றவாளியின் தரப்பை விவரிக்காமல், பரபரப்பான பின்னணி இசை, மிகைப்படுத்தப்பட்ட சித்தரிப்புக் காட்சிகள் போன்றவற்றோடு ஒரு சினிமாவைப் போல பார்வையாளர்களுக்கு திரில்லை ஏற்படுத்துவதும், பயமுறுத்துவதும்தான் அதன் நோக்கமாகயிருந்தது என்ற பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டது. எனவே, ஒரு ஆவணப்படம் சொல்லும் தரவுகள் எவ்வளவு உண்மையானவை, அதன் பின்னணியில் இருப்பவர்களின் நோக்கம் என்ன என்பதைப் பகுத்தறியும் திறனும் வாசகர்களுக்கு மிகவும் அவசியம்.
உண்மையான ஆவணப்படங்கள் சமயங்களில் 'இயக்கமாக' (Movement) மாறுகின்றன. ஆவணப்படங்கள் மூலம் திரட்டப்படும் பொதுக்கருத்து (Public Opinion), சில நேரங்களில் நீதிமன்றங்கள் அல்லது அரசாங்கங்களை ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் தலையிடவோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டுவரவோ தூண்டும் வலிமை கொண்டதாகவும் அமைகின்றன. சினிமா நம்மை ஒரு கனவுலகிற்கு அழைத்துச் சென்று சமூக மாற்றத்திற்கான விதைகளைத் தூவுகிறது என்றால், ஒரு நல்ல ஆவணப்படம் அந்த நிஜங்களின் வழியே அதைச் செய்கிறது. சினிமா நம்மைச் சிந்திக்க வைக்கிறது, ஆனால் ஆவணப்படம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது.