லீடர்- அண்ணாச்சியின் அதிரடி! #LeaderReview

என்னங்க கதையை சொல்லிட்டீங்க என்று நினைக்க வேண்டாம். இது தொடக்கம்தான். இதன் பின்னர்தான் இருக்கிறது டிவிஸ்ட்டு மேல டிவிஸ்ட்டு!
Saravanan in Leader Movie
Saravanan in Leader Movie
Published on

தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கும் சரவணன், மனைவி இல்லாமல், தன் குழந்தையோடு அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில், ஹார்பரில் நடந்து கொண்டிருக்கும் ஓர் இல்லீகல் நடவடிக்கையை கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா. அது விசயமாக ஹார்பருக்குள் இருக்கும் வில்லனை எளிதாக அடிக்கடி போய் பார்த்துக்கொண்டிருக்கும் அண்ணாச்சியின் உதவியை ஆண்ட்ரியா நாட, அது வில்லனுக்குத் தெரிந்துவிடுகிறது. வில்லன் அண்ணாச்சியை சந்தேகப்பட, படம் பட்டாசாக பிக்கப் ஆகிறது. என்னங்க கதையை சொல்லிட்டீங்க என்று நினைக்க வேண்டாம். இது தொடக்கம்தான். இதன் பின்னர்தான் இருக்கிறது டிவிஸ்ட்டு மேல டிவிஸ்ட்டு!

ஆண்ட்ரியா திட்டம் ஃபெயிலியர் ஆகிறது, ஆனால், அவரது திட்டமே இல்லை! அந்தக் குழந்தை அண்ணாச்சியின் குழந்தைதான், ஆனால் அது அவரை அங்கிள் என்றுதான் கூப்பிடும்! வில்லன் செத்தது நிஜம்தான், ஆனால் அவன் சாகவில்லை! கண்டெயினருக்குள்ளே இருந்தது அமோனியா உரம்தான், ஆனா அது வெடிகுண்டு மாதிரி வெடிக்கும்! அண்ணாச்சி கார் மெக்கானிக்தான், ஆனால் அவருக்கு கார் ஓட்டத் தெரியாது! கடைசியில் அண்ணாச்சியின் கடை சரவணா ஸ்டோர்ஸ்தான், ஆனா அவர் நல்லி சில்க்ஸ் கடைக்கு ஓனர் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகிற அளவுக்கு இயக்குநர் டிவிஸ்ட்டு மேல டிவிஸ்ட்டு வைத்துக்கொண்டே போகிறார். ஆனால், நல்லவேளையாக இதெல்லாம் சொதப்பாமல், பரவாயில்லை எனுமளவுக்கு இருந்துதான் ஆச்சரியம்! மனைவியை அவர் சுடுவதற்கான காரணம் சற்றுப் போதாமையாக இருந்தது, கிளைமாக்ஸ் வில்லன் டிவிஸ்ட் சற்று டூமச்சாக இருந்தது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும், மொத்தமாக இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு நீண்ட பிளாஷ்பேக் காட்சிகளைத் தவிர படம் எங்கும் பெரிதாக போரடிக்கவில்லை!

Leader Movie Still
Leader Movie Still

தெறி, விக்ரம் மாதிரி பார்த்தக் கதைகளையே திருப்பிப்போட்டு, வேறு காம்பினேஷனில் பட்டி டிங்கரிங் பார்த்துக் கொடுத்தால்தான் என்ன, சுவாரசியமான திரைக்கதை எழுதி அதை ஒழுங்காக எடுத்தால் போதாதா என்ன? அப்படித்தான் செய்திருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சரவணன், முதல் படத்திலிருந்த அவரது தோற்றம், பில்டப் என பல பிரச்சினைகளை சரி செய்திருக்கிறார். கதை முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார். நடிப்பு மட்டும் வரவில்லை, ஆனால் அது பரவாயில்லை, இங்கென்ன எல்லோரும் அப்படியே நடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்களா என்ன? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ கதையாக ’நாந்தாண்டா டிரைவரு’ என்பது போல நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் பல ஹீரோ நடிகர்களுக்கு மத்தியில், லெஜண்டு சரவணன் எவ்வளவோ பரவாயில்லை. அடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்னால், ஜிகர்தண்டா மாதிரி குருசோமசுந்தரத்தை பிடித்துவந்து பத்து நாள் டிரைனிங் எடுத்தால் எல்லாம் சரியாகிவிடப்போகிறது. நீங்கள் தாராளமாக அடுத்தடுத்து படம் பண்ணுங்கள் அண்ணாச்சி.

ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு எல்லாம் எந்தத் தனித் திறமையும் தேவையில்லை, அத்தனையும் ஸ்டண்ட் இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் கூட்டணி பார்த்துக் கொள்ளும் என்பது மீண்டும் ஒரு முறை இந்தப் படத்தில் நிரூபணமாகியிருக்கிறது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ் எல்லாம் எப்படி ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாகத் தெரிகிறார்கள் என்பதை இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இயக்குநர் துரை செந்தில்குமார் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் அவருக்குத் துணை நின்றிருக்கிறார்கள். போரடித்துக் கொண்டிருந்தால், தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்!

Puthuyugam
www.puthuyugam.com