லாஜிக் பார்க்காதீங்க சார்! #LogicsInMovies

சினிமா என்பது ஒரு 'கனவு உலகம்'. அங்கே போய் லாஜிக் பார்ப்பது என்பது, ஒரு மேஜிக் ஷோவில் வந்து உட்கார்ந்துகொண்டு மேஜிக் மேன் எப்படிப் புறாவைக் கொண்டு வந்தார் என்று கேமரா வைத்துக்கொண்டு ஆராய்வது போன்றது.
Lubber Bandhu and Thai Kizhavi
Lubber Bandhu and Thai Kizhavi
Published on

சமீபத்தில் வெளியான தாய்க்கிழவி படத்தின் தொடக்கக் காட்சியில், பொன்னுத்தாயி குளித்துக் கிளம்பி வட்டி வசூல் செய்ய தெருவில் இறங்குகிறார். அப்போது அங்கே கோலி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சின்னப்பையன் அவரைப் பார்த்துவிட்டு, ‘பொன்னுத்தாயி வசூலுக்கு வர்றா, பொன்னுத்தாயி வசூலுக்கு வர்றா’ என்று தெருக்களில் கத்திக்கொண்டே ஓடுகிறான். ஊரே அதுகேட்டு வீட்டுக்குள் ஒளிந்துகொள்கிறது. ஆனால்,

1. பொன்னுத்தாயியிடமிருந்து யாரும் தப்பப்போவதில்லை. 

2. அப்படியானால், அந்தப் பையனுக்கு ஏனிந்த வேண்டாத வேலை? யாராவது சம்பளம் கொடுத்து, ‘பொன்னுத்தாயி வந்தால் சொல்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்களா? அல்லது நான் வருவதை ஊருக்குள் ‘பராக்’ சொல்லச் சொல்லி பொன்னுத்தாயியே அவனுக்குச் சம்பளம் தருகிறாரா?

இப்படித்தான் லப்பர் பந்து படத்தின் தொடக்கக் காட்சியில், வேலைக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடச் செல்வான், பூமாலை. அவனைத் தேடி வரும் மனைவி யசோதாவைப் பார்த்து பூமாலையும், நண்பர்களும் ஓடி ஒளிந்துகொள்வார்கள். யசோதா அதிரடியாக ஒரு டிராக்டரை ஓட்டிக் கொண்டுவந்து, கிரிக்கெட் விளையாடும் பிட்ச்சை, உழுது சிதைத்துவிட்டுப் போவார்.

1. யசோதாவுக்கு அந்த டிராக்டர் எப்படிக் கிடைத்தது? அவர்களது ஏழ்மை நிலையில் அவளிடம் ஒரு டிராக்டர் இருக்கச் சாத்தியமில்லை.

2. அப்படியே அது வேறு ஒருவருடையது, இவர் இரவல் வாங்கிக்கொண்டு வந்தார் என்று வைத்துக்கொண்டாலும், யசோதாவின் வாழ்சூழலில் அவருக்கு டிராக்டரை ஓட்டத் தெரிய வாய்ப்பேயில்லை.

சினிமா என்பது ஒரு 'கனவு உலகம்'. அங்கே போய் லாஜிக் பார்ப்பது என்பது, ஒரு மேஜிக் ஷோவில் வந்து உட்கார்ந்துகொண்டு மேஜிக் மேன் எப்படிப் புறாவைக் கொண்டு வந்தார் என்று கேமரா வைத்துக்கொண்டு ஆராய்வது போன்றது. இப்படியான, லாஜிக் மீறல்களில் சில முக்கியமான வகைகள் இருக்கின்றன, அவற்றுக்கான நோக்கம் வெவ்வேறானது. மேற்சொன்ன காட்சிகளில் மீறப்பட்டுள்ள லாஜிக்கின் நோக்கமென்ன?

Fight Scenes
Fight Scenes

சண்டைக் காட்சிகள் (Physics/Action Logics)

இது நம் எல்லோருக்கும் தெரிந்ததே! ’ஹீரோ விட்ட உதையில், அந்த வில்லன் பறந்து போய், இரும்புக் கம்பத்தில் மோதி, அந்தக் கம்பம் வளைந்து போகிறதே! அப்படிப் பார்த்தால், இரும்புக் கம்பத்தை வளைக்கிற அளவுக்கு வில்லனின் உடம்பு அவ்வளவு உறுதியாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?’ என்று நான் உங்களைக் கேட்டால், ’அடப்போங்க சார், நாமென்ன பிஎஸ்ஸி பிசிக்ஸா படிக்கிறோம்? அவர் ஹீரோ! ஒரு சண்டைக் காட்சியில் இரும்புக் கடப்பாரையை வளைப்பார். இறுதிக்காட்சியில் மலையுச்சியிலிருந்து ஓர் அரைக்கீரைச் செடியின் தண்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பார். இதையெல்லாம் நாம் கணக்கெடுத்துக் கொண்டிருக்க முடியுமா? இதென்ன கல்லூரி வகுப்பா? தியேட்டர் சார் இது!’ என்று கடிந்துகொள்வீர்கள். சரிதான், இவை நமது அட்ரினலின் சுரப்பை அதிகரித்து நம்மை பரபரப்பாக்குவதற்காகவே பொதுவாக சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுமானக் காட்சிகள் (Establishment Logic)

ஒரு கதாபாத்திரம் அல்லது ஒரு சம்பவம் எவ்வளவு பெரியது அல்லது தீவிரமானது தெரியுமா என்பதைச் சொல்ல கதையின் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, கதைக்குப் பொருத்தமில்லாத காட்சிகளால் செய்யப்படும் மீறல்கள் இவை. திடுக்கென எங்கிருந்தோ ஒரு வழிப்போக்கன் வந்து, ’அவன் யாரு தெரியுமா? அவங்க அப்பா யாரு தெரியுமா? அவங்க தாத்தா யாரு தெரியுமா? அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார்!’ என்று பில்டப் கொடுப்பார். காரணம், இயக்குநருக்கு அந்தக் கதாபாத்திரத்தின் 'மாஸ்' அந்த நிமிடமே எஸ்டாப்ளிஷ் ஆகிட வேண்டும். அதைச் செயல்கள் மூலம் காட்ட நேரமில்லாத போது, இப்படிச் செய்வார்.

KGF Establishment Scene
KGF Establishment Scene

முட்டுச்சந்துக் காட்சிகள் (Convenience Logics)

கதையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேறு வழி தெரியாமல் இயக்குநர் விழிபிதுங்கி நிற்கும் போது கைகொடுப்பவை இவை. ஹீரோ துப்பறியப்போனால், அந்த வில்லன் ரகசிய அறைக்கதவுகளை திறந்து வைத்துக்கொண்டே இவர் பிடித்துச் செல்ல வசதியாக திரும்பி உட்கார்ந்துகொண்டு கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பார். அல்லது வில்லன் கதவைப் பூட்டியே வைத்திருந்தாலும், ஒரு ஹேர்ப்பின்னை வைத்துக்குடைந்தே அந்தக் கதவைத் திறந்துவிடுவார் நமது ஹீரோ. ஒரே ஒரு நாள் உங்கள் வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு பூட்டை, ஒரு ஹேர்ப்பின்னை வைத்து திறக்க முயற்சித்துப் பாருங்கள், நான் சொல்ல வருவதன் அர்த்தம் புரியும்!

Sivaji
Sivaji

செண்டிமெண்ட் காட்சிகள் (Emotional Logic)

கதைப்போக்கில் நீங்களாக உணர்ச்சிவயப்பட்டு அழுதுவிட்டால் தப்பித்தீர்கள். அல்லது இயக்குநர் கையிலெடுக்கும் ஆயுதம் இது. பழங்களை இயல்பாக பழுக்கவிடாமல், புகைபோட்டு, அடித்துப் பழுக்க வைப்பதற்குச் சமானமான விஷயம் இது. ஆபரேஷன் தியேட்டரில் கிடக்கும் ஹீரோ பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் கைவிட்ட பிறகு, ஹீரோயின் வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார். அது ஹீரோவின் கன்னத்தில் பட்டதுமே, சுண்டு விரல் துடிக்கும்... மானிட்டரில் 'பீப்' சத்தம் வரும்... ஹீரோ உயிர் பிழைத்துவிடுவார். நாமும் மகிழ்ச்சியில் கண்ணீர் உகுக்க வேண்டியதுதான்!

இப்போது, மேற்சொன்ன, தாய்க்கிழவி, லப்பர்பந்து காட்சிகளின் லாஜிக் தவறுகள் என்னெவென்று புரிந்திருக்கும். அவை கதாப்பாத்திரக் கட்டுமானத் தேவைக்கான லாஜிக் மீறல்கள்! தாய்க்கிழவி எவ்வளவு கறார் தெரியுமா? அவள் வந்தால் ஊரே அலறும், என்பதைக் காட்ட அந்தப் பையனை நிஜமாகவே அலற வைத்திருக்கிறார் இயக்குநர்! யசோதா, மனதளவில் எத்தனை உறுதியானவள், கணவன் மீதான பிடியை எவ்வளவு இறுக்கமாக வைத்திருக்கிறாள் என்பதற்கான காட்சி அது. அவ்வளவுதான், அதுவும் ஒருவகையான கதை சொல்லல் உத்திதான். கதையில்தான் சரி, தவறுகள் எல்லாம்! கதை சொல்லும் டெக்னிக்குகளில் சரி, தவறுகள் கிடையாது. சினிமாவில் லாஜிக் தேடுபவர்களுக்குக் கிடைப்பது தலைவலி; மற்றவர்களுக்குக் கிடைப்பது கொண்டாட்டம்!

Puthuyugam
www.puthuyugam.com