சினிமா தணிக்கை குறித்தான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிற நேரத்தில், நம் முன்னால் அமைதியாக வந்து நின்றிருக்கும் இன்னொரு பெரிய கேள்வி -ஓடிடி தளங்களுக்கு தணிக்கை தேவையா? திரையரங்குகளுக்கான விதிகள், தொலைக்காட்சிக்கான கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கும்போது, இணையத்தின் வழியாக நேரடியாக மக்களின் கைகளுக்கே சென்று சேர்ந்துவிடும் இந்த ஓடிடி எனும் புதிய காட்சி ஊடகத்தை எப்படிச் சமாளிப்பது என்ற குழப்பத்தில் அரசும், சமூகமும் விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கின்றன.
திரையரங்கம், டிவியைப் போலல்லாது ஓடிடி ஒரு தனிமனிதத் தேர்வு ஊடகமாக வித்தியாசப்பட்டு நிற்கிறது. இதுவே தணிக்கை விவாதத்தையும் சிக்கலாக்குகிறது. ஓடிடியில் வெளிவரும் சில தொடர்கள் மற்றும் படங்கள் அதிகமான வன்முறை, நிர்வாணம், மற்றும் கடுமையான மொழிகளை கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் இதைத் துய்க்கும் சூழலில், அவர்களுக்கு இவை ஏற்றதா எனும் நமது கவலையும் நியாயமானதே!
அதே நேரம், ஓடிடி தளங்கள் வழங்கும் சுதந்திரம் படைப்பாளிகளுக்கு முன்பு இல்லாத அளவுக்கு பரந்தவெளியைத் தந்துள்ளது. அரசியல், மதம், சமூக முரண்பாடுகள் போன்ற சென்சிடிவ் விஷயங்களை நேரடியாகவும் துணிச்சலாகவும் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளைச் சென்றடைய முடியாத பல கதைகள், ஓடிடியில் உருவாகி வருகின்றன. இதனால், கலைச் சுதந்திரம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.
அப்படியானால், ஓடிடிக்கும் தணிக்கை அவசியமில்லைமா?
அமெரிக்காவில் OTT தளங்களுக்கு அரசின் நேரடித் தணிக்கை என்பது கிடையாது. அங்குள்ள சட்டம், பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, நெட்ஃபிக்ஸ் அல்லது அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களின் உள்ளடக்கத்தைத் தாங்களே தணிக்கை செய்து கொள்கின்றன (Self-Regulation). வன்முறை அல்லது ஆபாசமான காட்சிகளில் முறையான எச்சரிக்கை வாசகங்களை இடுவதோடு, பெற்றோர்கள் தங்கள் வயது முதிராத பிள்ளைகள் பார்ப்பதைக் கட்டுப்படுத்த, சிறப்பான 'Parental Control' வசதிகளை வழங்குகின்றன. அரசின் தலையீடு என்பது மிகக்குறைந்த அளவிலேயே அங்கு உள்ளது.
பிரிட்டனில் 'Ofcom' என்ற அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு ஊடகங்களை மேற்பார்வை செய்கிறது. அங்கு தணிக்கையை விட 'வகைப்படுத்துதலுக்கு' (Classification) அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பிபிசி போன்ற தளங்கள் கடுமையான விதிகளைப் பின்பற்றுகின்றன. குறிப்பாக, குழந்தைகள் பார்க்கக் கூடாத காட்சிகள் ஒளிபரப்பப்படும்போது, வயதுச் சரிபார்ப்பு (Age Verification) முறையை அவர்கள் மிக உறுதியாக பின்பற்றுகிறார்கள். விதிகளை மீறும் பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் தண்டனைக்குள்ளாகும்.
ஆனால், உலகிலேயே மிகவும் கடுமையான தணிக்கை முறையைக் கொண்டுள்ள சர்வாதிகார நாடு சீனா. அங்கு வெளிநாட்டு OTT தளங்களுக்கு அனுமதி கிடையாது. சீனாவின் சொந்தத் தளங்கள் அரசின் நேரடித் தணிக்கைக்கு உட்பட்டவை. சீனக் கலாச்சாரத்திற்கு எதிராகவும், அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும் அல்லது அரசியல் ரீதியான விமர்சனங்களைக் கொண்ட ஒரு சிறு காட்சியைக் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு காட்சியும் அரசின் தணிக்கைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே ஒளிபரப்பப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலை சினிமாக்களை தணிக்கை செய்யும் CBFC அமைப்பைப் போல OTT தளங்களுக்கு என்று 'முன்-தணிக்கை' (Pre-censorship) செய்யும் அமைப்பு கிடையாது. இருப்பினும் அரசு, சட்டப்படி ஒரு 'மூன்றடுக்கு' (Three-tier) கட்டுப்பாட்டை பின்பற்ற வலியுறுத்துகிறது:
1 (சுய கட்டுப்பாடு): அந்தந்த OTT தளங்களே ஒரு புகார் அதிகாரியை (Grievance Officer) நியமித்து, உள்ளடக்கம் தொடர்பான புகார்களைத் தீர்க்க வேண்டும்.
2 (சுய ஒழுங்குமுறை அமைப்பு): அனைத்து ஓடிடி தளங்களும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் புகார்களை ஆய்வு செய்ய வேண்டும்.
3 (அரசு மேற்பார்வை): குறிப்பிட்ட பிரச்சினைகள் சார்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும்.
இவற்றை மாற்றுவது, மேம்படுத்துவது குறித்த தொடர் விவாதங்கள் அனைத்து தரப்பிலும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், சென்சார் வேண்டும் என்று நாம் முடிவெடுப்போமானால் , அது முதலில் சாத்தியமானதா? எண்ணற்ற ஓடிடிக்கள், அவற்றில் கணக்கிலடங்காத சினிமாக்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் யார் சென்சார் செய்வது? நிஜத்தில் அது மனிதர்களால் சாத்தியமில்லாத அளவுக்கு பிரம்மாண்டமானதாக இருக்கிறது.
அதை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், ஒரு முதிர்ந்த சமூகத்துக்கு சென்சார் தேவையில்லை. ஆனால், அந்த முடிவுக்குச் செல்லுமளவுக்கு நாம் ஒரு கட்டுப்பாடான, ஒழுங்கான சமூகமா என்று கேட்டால் நம்மிடம் பதிலில்லை. நமக்கொரு சமநிலை தேவைப்படுகிறது. இந்த உலகில், நம்மைச் சுற்றிலும், அனைத்துத் தளங்களிலும், நம் நுகர்வுக்கானவை எல்லாம் நல்லதும் கெட்டதும் சேர்ந்தேதான் இருக்கின்றன. எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் எனும் முடிவு நமது கைகளில்தான் இருக்கிறது. அதற்கு ஓடிடி தளங்களும் விதிவிலக்கல்ல.