பேசாப்பொருளைப் பேசும் வெப் சீரிஸ்... Chiraiya – விமர்சனம்

கமலேஷின் கணவனாக வரும் ஃபைசல் ரஷீத்தை, ஒருமுறை கட்டியணைத்து வாழ்த்தத் தோன்றும் அதே நேரம், பூஜாவின் கணவனாக வரும் சித்தார்த் ஷாவை செவுளில் ஒரு அறை அறையலாம் என்றும் தோன்றுகிறது.
Chiraiya
Chiraiya
Published on

அதிகம் படிக்காத கமலேஷ் எனும் ஒரு பெண், எல்லோரும் நன்கு படித்த ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு மூத்த மருமகளாக வருகிறாள். அவளுக்கு அங்கே எந்தத் தீங்கும் நடந்துவிடவில்லை. அவள் அந்தக் குடும்பத்தில் அனைவரையும், பாசத்தைக் கொட்டிக் கவனித்துக் கொள்கிறாள். அவர்களும் அவளிடம் அவ்வாறே இருக்கிறார்கள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். பையன் இல்லையே எனும் குறையைப் போக்க, கணவரின் தம்பியை (மைத்துனர்) சிறுவயதிலிருந்தே ஒரு தாயைப் போல அரவணைத்து வளர்க்கிறாள்.

அந்த மைத்துனன் திருமண வயதை எட்டுகிறான். அவனுக்குப் பெண்பார்த்து, திருமணம் நடந்து, பூஜா எனும் பெண் அந்த வீட்டின் இரண்டாவது மருமகளாக நுழைகிறாள். அந்தப் பெண், அவளது கணவனால் திருமணத்திற்குப் பிறகான சம்மதமில்லா வன்புணர்வுக்கு (Consentless Sex) ஆளாக்கப்படுகிறாள். அவளது கடுந்துயர் அந்தக் குடும்பத்தில் யாராலாவது உணர்ந்து கொள்ளப்பட்டதா? கமலேஷ் அதை அறிய வந்த போது எப்படி எதிர்கொண்டாள்? கமலேஷ், அன்புக்குக் கட்டுப்பட்ட ஒரு பெண். படிப்போ, பொருளாதார சுதந்திரமோ இல்லாத ஒரு வீட்டுப் பறவை. காலங்காலமாக வீட்டுக்குள் இருப்பதால் வரும் அறியாமையும் அவளிடம் இருக்கிறது. வீட்டுக் கௌரவம் அவளுக்கும் முக்கியம்தான். இந்த விசயத்தை அறிய வரும் அனைவருமே, ’இது ஒரு பிரச்சினையா, சரியாகிவிடும், கடந்து போ’ என்கிறார்கள். பல விசயங்களையும் அவளுக்குக் கற்றுத்தருபவராகவும், பெரிய சிந்தனையாளராகவும், கவிஞராகவும் இருக்கும் அவளது மாமனாரும் அவ்வாறே சொல்கிறார். இந்தக் குற்றத்துக்கு எதிராக இந்தியாவில் சட்ட உதவியையும் நாட முடியாது. ஏனெனில், இந்தியக் குற்றவியல் சட்டம் இதை ஒரு குற்றமாகவே கருதவில்லை! இந்தச் சூழலில், அதிகபட்சமாக கமலேஷால் என்னதான் செய்ய முடிந்தது என்பதுதான் கதை!

Chiraiya
Chiraiya

இது மேலடுக்குக் கதைதான். அதற்குள்ளாக அந்தக் கமலேஷ் பெண்ணுரிமையைப் புரிந்துகொள்ளாத, ஆணாதிக்கத்துக்கு துணை போகும் தனது குணத்தையும், அறியாமையையும் மெல்ல மெல்ல உணரும் காட்சிகள் மிகச்சிறப்பானவை. ஒரு முதிர்ந்த பெண், அருகிலிருக்கும் கோவிலுக்குப் போவதென்றால் கூட ஆண் துணையை எதிர்பார்க்க இந்தச் சமூகம் அவளை வலியுறுத்துகிறது. அந்த ஆணின் வயது இங்கே பிரச்சினையே இல்லை. அது 8 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பரவாயில்லை. சமூகம் வலியுறுத்துவது ஒருபுறம் என்றால், அந்தப் பெண்ணே அதை விரும்புகிறாள். அனைவருமாக சேர்ந்து அந்த ஆண் குழந்தையிடம் ஏற்படுத்தும் வெற்றுப் பெருமிதமும் இதன் உபவிளைவு. அவன் நாளை வளர்ந்து பெண்ணைப் பாதுகாப்பதே தன் வேலை என்றுணர்வான். அதன்பாற்பட்டு அவளை அடக்குமுறைக்கு ஆளாக்குவான். எவ்வளவு ஆழமாக இந்த ஆணாதிக்கம் அனைவராலும் போற்றி வளர்க்கப்படுகிறது. கமலேஷின் சிந்தனையிலும், குணாம்சத்திலும் ஏற்படும் அந்தப் பெருமாற்றமே உள்ளீடான நிஜமான கதை! 

இந்தச் சமூக அடுக்கில் ஒரு பலவீனமான பெண்ணான கமலேஷ், பூஜாவின் அந்தத் துயரை அறிந்து அதை உணர்ந்துகொள்ளும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. கலையம்சமான காட்சியமைப்புகள் இல்லாது, ஒரு ஸ்டேஜ் டிராமாவைப் போல அவசியமான காட்சிகளோடு மட்டுமே அடுத்து, அடுத்து என திரைக்கதை ஓடுவது ஒரு சின்னக் குறை. போலவே கிளைமாக்ஸும், அத்தனை அழுத்தமானதாக இல்லை. அதையெல்லாம் விட இந்தக் கதை இன்றைக்கு மிக அவசியமான ஒன்று என்பதிலும், இந்தச் சமூகத்தில் பேசுபொருளாக வேண்டியது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. 

பூஜா, பூஜாவின் கணவன், கமலேஷின் கணவன் என எல்லோரின் பங்களிப்பும் மிகச்சிறப்பு. கமலேஷின் கணவனாக வரும் ஃபைசல் ரஷீத்தை, ஒருமுறை கட்டியணைத்து வாழ்த்தத் தோன்றும் அதே நேரம், பூஜாவின் கணவனாக வரும் சித்தார்த் ஷாவை செவுளில் ஒரு அறை அறையலாம் என்றும் தோன்றுகிறது. மொத்தக் கதையையும் மிகவும் சென்சிடிவான தன் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார் கமலேஷாக நடித்திருக்கும் திவ்யா தத்தா.  

கதையின் தேவைக்கான படுக்கையறைக் காட்சிகள் இருப்பதால், சிறாருக்கு ஏற்றதல்ல இது. மற்றபடி, வயது வந்த ஆண்கள், பெண்கள் என எல்லோரும் பார்க்க வேண்டிய சீரிஸ் இது. தலா 30 நிமிடங்கள் என 6 எபிசோடுகள் கொண்ட ’சிரையா (சிறு பறவை)’ எனும் இந்த சீரிஸை சஷாந்த் ஷா இயக்கியிருக்கிறார். ஜியோஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

Puthuyugam
www.puthuyugam.com