உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பாசிமணி விற்க, கடை விரித்திருந்தது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் மோனலிஷா போஸ்லே. நடிகை ஐஸ்வர்யா ராய் போன்ற கண்ணழகுடன், அழகுறக் காணப்பட்ட இந்த பெண்ணை ஒரு யூடியூபர் வீடியோ எடுத்து வெளியிட, மோனலிஷா, இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார். இவரிடத்தில், பாசிமணி வாங்க இளைஞர்கள் முண்டியடிக்க, குடும்பத்தினர் கும்பமேளாவில் இருந்து சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பும் சூழல் உருவானது.
இந்தியாவில் அவரைப்பற்றி செய்தி வெளியிடாத மீடியாக்களே இல்லை எனுமளவுக்குளவுக்கு இணையத்திலும் இந்த காந்தக் கண்ணழகி வைரலனார். சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு பட வாய்ப்பு கொடுத்தவர் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா . கேரளாவின் மிகப் பெரும் பணக்காரரான பாபி செம்மனூர் தனது நகைக்கடை திறப்பு விழாவுக்கும் மோனலிஷாவை அழைத்தார்.
இதனால், கேரளாவுக்கும் அவருக்கும் ஏதோ விதத்தில் பந்தம் உருவானது. இதற்கிடையே, 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற படத்தில் நடித்து வந்த மோனலிஷாவுக்கும் மகராஷ்டிரத்தைச் சேர்ந்த முகமது ஃபர்மான் என்ற இளைஞருக்கு காதல் ஃபேஸ்புக் வழியாக உருவானது. இவர்களின் காதலுக்கு மோனலிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கேரளாவுக்கு படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் திருவனந்தபுரம் அருகேயுள்ள தம்பானூர் போலீஸ் நிலையத்தில், உதவி கேட்டு காதலருடன் மோனலிஷா தஞ்சமடைந்தார். பெற்றோர், தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயல்வதாகவும் மோனலிஷா குற்றம் சாட்டினார். மோனலிஷா மேஜர் என்பதால், அவர் எடுப்பதே இறுதி முடிவு என்று பெற்றோரிடத்தில் போலீசார் உறுதிபடக் கூறி விட்டனர்.
மோனலிஷா காதலரைத் திருமணம் செய்ய விரும்பவே, கேரள அமைச்சர் சிவன் குட்டி முன்னிலையில், முகமது ஃபர்மானுக்கும் மோனலிஷாவுக்கும் திருவனந்தபுரத்திலுள்ள இந்து கோயிலில் திருமணம் நடந்தது. இதற்கிடையே, மத்தியப்பிரதேச மாநில விசுவ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் அனில் 'மோனலிஷாவுக்கு 18 வயது நிறைவடையவில்லை. 16 வயதுதான் ஆகிறது' என்று பகீர் கிளப்பினார். மோனலிஷாவின் பிறப்புச் சான்றிதழையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், கடந்த 2009ம் ஆண்டு மோனலிஷா பிறந்ததாக கூறப்பட்டிருந்தது. இது , தொடர்பாக மத்திய பிரதேச மாநில டி.ஜி.பியிடத்திலும் அனில் புகாரளித்திருந்தார்.
இந்த நிலையில், கொச்சியில் பத்திரிகையாளர்களை கணவருடன் சந்தித்த மோனலிஷா, தன்னை பற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது , 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் படத்தின் படப்பிடிப்பு நேபாளம் மற்றும் டேராடூனில் நடந்தபோது, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் தவறாக நடந்து கொண்டார். சனோஜ் மிஸ்ரா ஒரு நல்ல மனிதரல்ல. 10 முறை தவறான வகையில், என்னை அவர் தொட்டார். இது தொடர்பாக நான் என் குடும்பத்தினரிடம் சொன்னேன். அப்போது, எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இல்லை. நான் பட்ட துயரங்கள் எனக்கு மட்டுமே தெரியும். எனது பெற்றோர் 'இது உன்னுடைய முதல் படம் ... வெளியே எதுவும் சொல்லதே' என்று என்னிடத்தில் கூறினர். முதல் படம் என்பதற்காக, என்னை இன்னொருவர் பாலியல் வன்கொடுமை செய்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
நடிகைகளாக விரும்பும் இளம்பெண்களிடம் சனோஜ் மிஸ்ரா தவறாக நடந்து கொள்தை வழக்கமாக் கொண்டிருந்துள்ளார். முன்பே நான் புகாரளிக்க இருந்தேன். ஆனால், எனது குடும்பத்தினர் தடுத்து விட்டனர். எனது காதல் குறித்து, 'லவ் ஜிகாத்' என வதந்தியை பரப்பி விட்டதும் இயக்குநர் சனோஜ் மிஸ்ராதான். தற்போது, நான் மேஜர். எனது ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வயதைப் பாருங்கள். அதன்படி, எனது கணவரை தேர்வு செய்ய நான் தகுதியானவள்.''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.