"எங்களையும் வாழ விடுங்கள்!" - நடிகை ஷிவானி நாராயணன் உருக்கம்

''வெளி மாநில நடிகைகளுடன் இந்த மண்ணைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களையும் அவர்களுடன் சேர்ந்து வளரவும், வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் தமிழ் திரையுலகம் உறுதி செய்ய வேண்டும்.''
Shivani Narayanan
Shivani NarayananShivani Narayanan facebook page
Published on

தமிழ் மண்ணைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் இயக்குநர்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதில்லை என்று நடிகை ஷிவானி நாராயணன் குறை கூறியுள்ளார்.

நடிகை ஷிவானி நாராயணன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர். விளம்பரங்களில் மாடலாக நடித்தவர். பின்னர் 2016ம் ஆண்டு 'சரவணன் மீனாட்சி ' தொடரில் காயத்ரி வேடத்தில் நடித்து சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பகல் நிலவு, கடைக்குட்டிசிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் , விக்ரம், வீட்ல விசேசங்க போன்ற ஒரு சில தமிழ்படங்களிலேயே நடிகை ஷிவானி தலைகாட்டியுள்ளர்.

இந்த நிலையில் நடிகை ஷிவானி தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,

''நான் இந்த மண்ணைச் சேர்ந்தவள். எங்களைப் போல இந்த மண்ணைச் சேர்ந்த மகள்களுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் வாய்ப்பு வழங்க முன்வர வேண்டும். தமிழ் ரசிகர்களும் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். கோலிவுட்டில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகளுக்குதான் நமது இயக்குநர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் வெளிமாநில நடிகைகள் நடித்து, நமது இயக்குநர்களின் திறமை காரணமாக எளிதாகப் புகழ் பெற்று விடுகிறார்கள். அவர்களின் முன்னேற்றத்துக்குக் காரணம் தமிழ் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்தான். நமது இயக்குநர்கள் கொடுக்கும் வாய்ப்புகளை வெளி மாநில நடிகைகள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. திறமையை தேடுவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் தமிழ் ரசிகர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களுக்கு முன்னர், வைக்கப்படும் தட்டுகளில் உள்ள உணவை மட்டுமே சாப்பிட்டு ரசிகர்கள் பழக்கப்பட்டவர்கள்.

Shivani Narayanan
Shivani NarayananShivani Narayanan facebook page

திரையில் பார்ப்பவர்களை மட்டும்தான் ரசிகர்களின் கண்களுக்கு தெரியும். ஆனால், அந்த ரசிகர்கள் யாரைப் பார்க்க வேண்டுமென்பதை தமிழ் சினிமாவின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். நமது மண்ணைச் சேர்ந்த நடிகைகளுக்கு நல்ல வேடங்கள் கிடைப்பதில்லை. எங்களைப் போன்றவர்கள் அந்த வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அதே சமயத்தில், வெளி மாநில நடிகைகளுக்கு 'ஸ்டார்' அந்தஸ்தைக் கொடுப்பதும் அவர்களைக் கொண்டாடுவதும் திட்டமிட்ட அடக்குமுறை என்றே நான் நினைக்கிறேன். 'வந்தரை வாழ வைக்கும் தமிழகம்' என்று கூறி நாம் பெருமை கொள்கிறோம். எந்த மண்ணில் இருந்து வந்தாலும், தமிழ் திரையுலகில் வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். வெளி மாநில நடிகைகளுடன் இந்த மண்ணைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களையும் அவர்களுடன் சேர்ந்து வளரவும் வாய்ப்பு வழங்கப்படுவதையும் தமிழ்த் திரையுலகம் உறுதி செய்ய வேண்டும். நமது சொந்த மண்ணைச் சேர்ந்த மகள்களையும் திறமையான கலைஞர்களையும் தொடர்ந்து புறக்கணிப்பது எனக்கு கவலை அளிக்கிறது. என்னுடைய இந்தக் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல. இது, நமது சொந்த வீட்டிலேயே உரிமையைக் கேட்டு வாங்குவது போன்றது. எங்களை எங்கள் சொந்த வீட்டிலேயே 'அந்நியர்' போல நடத்தாதீர்கள்.

ஜனநாயக இந்தியாவில், ஒவ்வொரு மனிதருக்கும் தனது கருத்தைக் கூற அடிப்படை உரிமை உண்டு. எனது கருத்தைப் பார்த்து விட்டு, பலரும் கடந்து செல்லலாம். கண்டுகொள்ளாமலும் போகலாம். எனினும், எனக்கு இந்தக் கருத்தை முன் வைக்க உரிமை உண்டு. இது, எனது நியாயமான வேண்டுகோள். ஜெய்ஹிந்த்''

இவ்வாறு அந்தப் பதிவில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஷிவானி நாராயணன்.

Puthuyugam
www.puthuyugam.com