துல்லியமாகிவரும் CGI – சினிமாவின் புதிய சிக்கலும், தீர்வும்!

CGI எல்லாவற்றுக்குமே தீர்வாக இருந்துவிடுதில்லை. பல நேரங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கணினி கிராபிக்ஸ் காட்சிகள், பார்வையாளர்களுக்கு ஒரு விதமான ’வீடியோ கேம்’ உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன.
Ayalaan
Ayalaan
Published on

சினிமா என்பது ஒரு மாயக்கண்ணாடி. அதில் நாம் காண்பது உண்மையா, கற்பனையா? என்ற கேள்வி சினிமா பிறந்த நாளிலிருந்தே இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் கேமரா ஒரு நிகழ்வைப் பதிவு செய்யும் கருவியாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி அந்த நிலையை மாற்றிக்கொண்டே இருக்கிறது. மாற்றத்தின் இன்றைய முக்கியக் காரணியாக இருப்பது CGI (Computer Generated Imagery) என்ற தொழில்நுட்பம். இதன் வருகையால் சினிமா ஒரு புதிய பரிணாமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு புதிய கேள்வியும் எழத்தான் செய்கிறது.

திரையில் நாம் எதைப் பார்க்க விரும்புகிறோம்? CGI உலகத்தையா, அல்லது உண்மையான காட்சிகளையா?

CGI சினிமாவுக்கு அளித்த மிகப்பெரிய சுதந்திரம் என்பது, எல்லையற்ற கற்பனை!

விண்வெளி, வேற்று கிரகங்கள், அழிந்துபோன உயிரினங்கள், ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட பெரும்படைகள், ஆழிப்பேரலை, இடிந்து விழும் நகரங்கள்… இப்படி ஏராளமான விசயங்களை திரையில் காட்ட முடியாது என்றொரு நிலைமை முன்பு இருந்தது. இன்று இவை அனைத்தையும் கணினியின் உதவியால் நம்மால் உருவாக்க முடிகிறது.

உதாரணமாக, அவதார் திரைப்படம் முழுக்கவும் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி, நம்மை அதற்குள் அழைத்துச் சென்றது. அதேபோல, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் காணப்படும் பிரம்மாண்டமான போர்க்களக் காட்சிகள் பெரும்பாலும் CGI மூலம் உருவாக்கப்படுகின்றன. 

Baahubali CGI
Baahubali CGI

ஆனால், CGI எல்லாவற்றுக்குமே தீர்வாக இருந்துவிடுதில்லை. பல நேரங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கணினி கிராபிக்ஸ் காட்சிகள், பார்வையாளர்களுக்கு ஒரு விதமான ’வீடியோ கேம்’ உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் அவை உண்மையான உலகத்தைப் போலல்லாது, ஒரு செயற்கைத் தன்மையோடு இருப்பதை உணர முடிகிறது.

மேலும், ஒரு முக்கியமான சிக்கல் அன்கேனி வேலி (Uncanny Valley) எனப்படும் நிகழ்வு. பொய்களின் துல்லியம் அதிகரிக்க அதிகரிக்க, உண்மைக்கு ஏற்படும் ஒவ்வாமை! அதோடு மனித முகபாவனைகள், குறிப்பாக கண்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் CGI இன்னும் முழுமையான நிலையை அடையவில்லை. அப்படியே அடைந்தாலும், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனால், சில சமயங்களில் காட்சிகள் தொழில்நுட்ப அளவில் சிறப்பாக இருந்தாலும், அவை உணர்ச்சிகளைக் கடத்துவதில் தோல்வியடைகின்றன.

இதற்கெதிராக, சினிமாவில் இன்னொரு அணுகுமுறை உள்ளது. அது Practical Effects, அதாவது உண்மையான பொய்கள்! ஒரு உண்மையான இடத்தில், உண்மையான ஒளியில், நிஜமான பொருட்களோடு எடுக்கப்படும் மினியேச்சர் காட்சிகள், தோற்றப்பிழைக் காட்சிகள் போன்றன பார்வையாளர்களுக்கு CGIஐ விட அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. ட்ரூ லைஸ் படத்தில் வரும் கடற்பாலம் தகர்ப்புக் காட்சியை எந்த CGIயாலும் உருவாக்கிவிட முடியாது என்பது தீவிர சினிமா ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. Mad Max: Fury Road திரைப்படத்தில் வந்த பல அதிரடிக் காட்சிகள் உண்மையான வாகனங்களுடன் படமாக்கப்பட்டன. அதனால் அந்த படம் ஒரு நேரடி உணர்வை, பிரமிப்பை நமக்கு ஏற்படுத்தியது. அதேபோல் Oppenheimer திரைப்படத்தின் அணு வெடிப்பு காட்சியை முழுவதும் CGI-யாக உருவாக்காமல், இயல்பான முறைகளில் உருவாக்க முயன்றிருக்கிறார்கள்.

Mad Max and True Lies Poster Images
Mad Max and True Lies Poster Images

இயல்பான ஒளி மற்றும் சூழலுணர்வு, நடிகர்கள் அதை உணர்ந்து நடிக்கக்கூடிய தன்மை, பார்வையாளர்கள் ஏற்படும் அதிக நம்பகத்தன்மை (Authenticity), உண்மையின் சீரற்ற தன்மை தரும் இயல்பு போன்றன Practical Effects நுட்பத்தின் சிறப்பியல்புகளாக இருக்கின்றன.

ஆனால், உண்மையான காட்சிகளை உருவாக்குவது அதிக செலவையும், நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. இயற்கைச் சூழல், காலநிலை, பாதுகாப்பு போன்ற காரணிகள் படப்பிடிப்பை பாதிக்கக்கூடும். ஒரு சிறிய தவறும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அபாயமும் கூட இருக்கிறது. இதனால் பல நேரங்களில் CGI ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

இன்றைய சினிமா, இந்த இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. அது Virtual Production அல்லது LED Volume Studio போன்ற தொழில்நுட்பங்கள். இதில் நடிகர்கள் உண்மையான செட்டில் நடிக்கிறார்கள்; ஆனால் அவர்களின் பின்னணி பெரிய LED திரைகளில் டிஜிட்டலாக உருவாக்கப்படுகிறது. இதனால் CGI-யின் சுதந்திரமும், உண்மையான காட்சிகளின் உணர்ச்சியும் ஒன்றாக இணைகின்றன. இந்த தொழில்நுட்பம் எதிர்கால சினிமாவின் முக்கியமான திசையாகப் பார்க்கப்படுகிறது. 

CGI கற்பனையை விரிவாக்குகிறது. உண்மையான காட்சிகள் உணர்ச்சியைத் தக்க வைக்கின்றன. இரண்டையும் சரியான அளவில் கலக்கும்போதுதான் சினிமா எனும் மேஜிக் நிகழ்கிறது.

Puthuyugam
www.puthuyugam.com