ஆஸ்கார் வரலாற்றை மாற்றி எழுதிய ‘ஆட்டம் டூரால்ட் ஆர்க்கபா’ |Autumn Durald Arkapaw

1929 முதல் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கார் விருதுகளில், சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் (Best Cinematography) வெற்றி பெற்ற முதல் பெண்மணி இவரே. கருப்பின மற்றும் ஆசிய (Filipino-Creole) வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் வெற்றியாளரும் இவரே.
Autumn Durald Arkapaw
Autumn Durald Arkapaw
Published on

வெளித்தோற்றத்தில் ஒரு ஸோம்பிஸ் படமாகக் காட்சி தந்தாலும், 1930களின் அமெரிக்காவை, அதன் நிற அரசியலை உள்ளீடாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, உலகெங்கும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படம், சென்ற ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ (Sinners). 16 பரிந்துரைகளைப் பெற்று சினிமா வரலாற்றிலேயே அதிக ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்ற படம் எனும் புதிய சாதனையைப் படைத்தது. சமீபத்தில் வெளியாகியுள்ள 2025க்கான ஆஸ்கர் முடிவுகளின்படி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளையும் வென்றுள்ளது. 

இந்தப் படத்தின் மூலமாகத்தான் இந்த புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது!

சினிமா வரலாற்றில் 98 ஆண்டுகளாக நிகழாத ஒரு சாதனையை, 'சின்னர்ஸ்' (Sinners) திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கார் விருதை வென்றதன் மூலம், ஒளிப்பதிவாளர் ஆட்டம் டூரால்ட் ஆர்க்கபா நிகழ்த்தியுள்ளார்.  

இவரது வெற்றி வெறும் ஒரு தனிநபர் சாதனை மட்டுமல்ல, அது ஒரு சமூக மற்றும் பாலின ரீதியான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. 1929 முதல் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கார் விருதுகளில், சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் (Best Cinematography) வெற்றி பெற்ற முதல் பெண்மணி இவரே. கருப்பின மற்றும் ஆசிய (Filipino-Creole) வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் வெற்றியாளரும் இவரே. இந்த இரட்டை வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ளார் ஆர்க்கபா.

ஐமேக்ஸ் 65மிமீ (IMAX 65mm) மற்றும் அல்ட்ரா பேனாவிஷன் 70 (Ultra Panavision 70) போன்ற பெரிய மற்றும் சிக்கலான ஃபிலிம் கேமராக்களில், ஒரு முழு நீளத் திரைப்படத்தை நேர்த்தியாகக் கையாண்ட முதல் பெண்மணி இவர். ஆர்க்கபா ஒரே நாளில் இந்த இடத்திற்கு வரவில்லை. அவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு புதிய காட்சி மொழியை வெளிப்படுத்தியது.

Autumn Durald Arkapaw
Autumn Durald Arkapaw

1. Palo Alto (2013): இவரது ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான இதில் பயன்படுத்தப்பட்ட மென்மையான இயற்கை ஒளியும், அதன் அழகும் (Dreamy, soft-focus aesthetic) இவருக்குப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

2. Teen Spirit (2018): வண்ணமயமான நியான் விளக்குகள் (Neon-soaked visuals) மூலம் ஒரு பாப் இசை உலகின் உணர்வுகளை இந்தப் படத்தில் கச்சிதமாகப் படம்பிடித்தார் ஆர்க்கபா.

3. Loki (Marvel Series - 2021): மார்வெல் சினிமாடிக் உலகில் நுழைந்த இவர், 'லோகி' தொடருக்காக ரெட்ரோ-ஃபியூச்சரிஸ்டிக் (Retro-futuristic) பாணியிலான தனித்துவமான காட்சியமைப்புகளை உருவாக்கி ரசிகர்களையும், விமர்சகர்களையும் கட்டிப்போட்டார்.

4. Black Panther: Wakanda Forever (2022): இயக்குநர் ரியான் கூக்ளருடன் இவர் இணைந்த முதல் பெரிய படம் இது. தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வகாண்டாவின் கலாச்சாரத்தை, அதன் தன்மை மாறாமல் காட்டிய விதம் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவாகக் கருதப்பட்டது.

பிளாக் பேந்தரைத் தொடர்ந்து ரியான் கூக்ளருடன், ஆர்க்கபா மீண்டும் இணைந்த படம்தான் இந்த சின்னர்ஸ்! இந்தத் திரைப்படத்தில், தனது முதிர்ச்சியான ஒளிப்பதிவை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்க்கபா.

1930-களின் மிசிசிப்பியை கண்முன் நிறுத்த அவர் கையாண்ட 'Large-Format Epic Realism' விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. செயற்கை விளக்குகளைக் குறைத்து, சூரிய அஸ்தமனம் மற்றும் நிலவொளியைப் பயன்படுத்தி அவர் உருவாக்கிய அந்த நிழல் உலக மேஜிக், ஆஸ்கர் தேர்வுக் குழுவை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

ஆர்க்கபா, கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற AFI Conservatory-யில் (American Film Institute) ஒளிப்பதிவு பயின்றவர். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விட, பிலிம் (Film stock) மீது அதிக ஈடுபாடு கொண்டவர் இவர். அதுவே இவரது படங்களில் ஒருவிதமான பழமை மாறாத அழகியலை உருவாக்குகிறது. இவரது கணவர் ஆடம் ஆர்க்கபா (Adam Arkapaw) என்பவரும் True Detective, Macbeth போன்ற படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஆவார்.

’ஒளிப்பதிவு என்பது கேமராவுக்குப் பின்னால் நின்று அதை இயக்குவதல்ல. மாறாக, கதையையும், மாந்தர்களையும் உணர்வுகளால் வடிவமைப்பது’ என்று நம்புபவர் ஆர்க்கபா. 2026 ஆஸ்கர் மேடையில் தான் பெற்ற விருதை, அவர், அவரது துறையின் முன்னோடிப் பெண்களுக்கு டெடிகேட் செய்த விதம் சினிமாவின் தொழில்நுட்பப் பணிகளுக்குள் வரும் பல இளம் பெண்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Puthuyugam
www.puthuyugam.com